Skip to main content

மாவலி பதில்கள்

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

"டெல்லி முதல்வர் போராடுவதுபோல எங்களைப் போராட வைக்காதீர்கள்' என கிரண்பேடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாரே புதுவை முதல்வர் நாராயணசாமி?

டெல்லியோ புதுவையோ மாநில உரிமைக்கான போராட்டம் எதுவும் தமிழ்நாட்டின் முதல்வரின் காதுக்கு எட்டவே எட்டாது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"2019 மக்களவை தேர்தல் வரை என்னை யாரும் முதல்வர் பதவியிலிருந்து அசைக்க முடியாது' என கர்நாடக முதல்வர் குமாரசாமி சொல்கிறாரே?

மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டுமென்றால், கர்நாடகாவிலும் கணிசமான இடங்களை வென்றாக வேண்டும். அதை பா.ஜ.க. தட்டிப்பறிக்காமல் இருக்க வேண்டுமென்றால், காங்கிரசுக்கு மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு தேவை. அதனால் காங்கிரஸ் தயவில் முதல்வராக உள்ள தனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என நம்புகிறார் குமாரசாமி. தன் அப்பாவைப் போலவே பக்காவான அரசியல்வாதி அவர்.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

போராட்டங்களைக் கையாள்வதில் அண்ணா, கலைஞர், எடப்பாடி இவர்களின் அணுகுமுறை பற்றி?

எல்லா ஆட்சியிலும் போலீஸ் எப்போதும் போலீசாகத்தான் இருந்திருக்கிறது. அண்ணா ஆட்சியில் கீழவெண்மணி விவசாயத் தொழிலாளர்கள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரத்தின்போது போலீஸ் நடந்துகொண்ட விதம், கலைஞர் ஆட்சிக்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். ஆனால், அவற்றை அண்ணாவோ, கலைஞரோ நியாயப்படுத்த முனைப்பு காட்டவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசாங்கரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை, பசுமைவழிச்சாலை என எல்லாவற்றிலும் பொதுமக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து போலீஸை வேட்டை நாய்களாகப் பாயவிடுகிறது மத்திய அரசின் பேச்சைக் கேட்டுச் செயல்படும் எடப்பாடி அரசு.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு என்ன தயக்கம்?

25ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்வதில் ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து விளையாடுகிறார்கள். இதனைத் தொடங்கி வைத்தவர், 2014-ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா. அவர் ஆடத் தொடங்கிய ஏமாற்று விளையாட்டை பா.ஜ.க. தொடர்கிறது.

mavalianswersசி.கார்த்திகேயன், சாத்தூர்

பாரதிராஜா-பா.ரஞ்சித் என்ன வித்தியாசம்?

நகரத்து ஸ்டுடியோக்களில் செட் போட்டு படம் எடுக்கப்பட்ட காலத்தில், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வையும் போராட்டத்தையும் அந்த மண்ணிலேயே படம்பிடித்து சாதித்தவர் பாரதிராஜா. அந்த பாரதிராஜா உள்பட பலரும் நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டு வரும் காலத்தில், நகரத்தில் வாழும் எளிய மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் தனது படங்களில் பதிவுசெய்து வருகிறார் பா.ரஞ்சித்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும் என்கிறாரே அருண் ஜெட்லி?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 745 கோடியே 59 லட்ச ரூபாய்க்கான செல்லாத நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதை மத்திய நிதியமைச்சர் சொல்கிறாரோ!

பிரதீபாஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

தமிழ்நாட்டில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத 18 தொகுதிகள் குறித்து?

மற்ற தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்துதான் என்ன சிறப்பாக நடந்துவிட்டது? எல்லாம் ஒன்றுதான்.

ஆன்மிக அரசியல்

நித்திலா, தேவதானப்பட்டி

இராமானுஜர் ஆன்மிகத்தில் புரட்சி செய்தாரா? அரசியல் செய்தாரா?

வைணவ நெறியை ஏற்று ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பியவர் இராமானுஜர். எளிமையாகச் சொல்வது என்றால் நாமம் அணிந்த நெற்றியுடன், பெருமாளின் (விஷ்ணு) புகழைப் பரப்பினார். இதனால் சிவனை வழிபட்ட சைவ நெறியாளரான சோழ மன்னனின் எதிர்ப்புக்குள்ளானார். ஆன்மிகத்தில் கடவுளுக்குமான உறவை ஆதிசங்கரர் அத்வைதம் (ஒன்றுபட்ட நிலை) என்றார். மத்துவாச்சாரியார் துவைதம் (இரண்டும் வெவ்வேறு நிலை) என்றார். இராமானுஜர் முன்வைத்தது விசிஷ்டாத்வைதம். அதாவது, துவைத நிலையிலிருந்து அத்வைத நிலைக்குச் செல்வதற்கான ஒழுங்குமுறை. அதனை வைணவ நெறிப்படி பரப்பினார். இவையெல்லாம் ஆன்மிகத்தில் அவர் கையாண்ட சித்தாந்தங்கள் என்றபோதும், இராமானுஜரை "ஆன்மிகப் புரட்சியாளர்' என்று சொல்வதற்கு காரணம், ஒரே மதத்திலேயே சாதிப் பிரிவுகளால் உயர்ந்தோர்-தாழ்த்தப்பட்டோர் என்றிருந்த பாகுபாட்டையும் கடவுள் சன்னதிவரை அது தொடர்வதையும் எதிர்த்தவர் இராமானுஜர்.

அட்டாச்சரம் எனப்படும் "ஓம் நமோ நாராயணாய'’என்ற மந்திரத்தின் பொருள் உயர்குலத்தாருக்கு மட்டுமே தெரிவிக்கப்படவேண்டும் என இராமானுஜருக்கு வலியுறுத்தப்பட்ட நிலையிலும், திருக்கோட்டியூர் கோவில் மீது ஏறி நின்று, ஊரில் உள்ள அனைத்து சாதி மக்களும் கேட்பதுபோல் அதன் பொருளை உரைத்தார். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் திருப்பெரும்புதூரில் பிறந்து, திருவரங்கத்தில் அடக்கமான இராமானுஜர் 120 வயதுவரை வாழ்ந்தவர். அன்றைய அரசியல் நிலைக்கேற்ப ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர்.
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்