கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
நித்தியானந்தா தனித்தீவில் மூன்று மாதங்களுக்கு முன்பே தனிமைப்படுத்திக் கொண் டது தற்செயலானதா, திட்டமிட்டதா?
கைலாசா நித்தியானந்தா தனிமைப் படுத்திக் கொண்டது பற்றி, சிவராத்திரிக்கு செமத்தியாகக் கூட்டம் கூட்டி கொரோனா பரப்பியதாக குற்றச் சாட்டுக்குள்ளான ஆதியோகி ஜக்கிவாசுதேவ் போன்ற வர்கள் பதில் சொன்னால் சரியாக இருக்கும்.
ம.ரம்யா, வெள்ளக்கோவில்
ஊரடங்கை கடைப்பிடிக்காதவர் களுக்கு தோப்புக்கரணம் தண்டனை பிரபலமாகிவிட்டதே?
லத்தியால் அடிப்பது மனிதஉரிமை மீறலாக மாறிவிடும் சூழலில், மாற்று வழியைத் தேடியதில் எளிதாக அமைந்தது தோப்புக்கரணம்தான். பிள்ளையார் கோவிலில் மட்டுமல்ல, பள்ளிக்கூடத்தில் தப்பு செய்து ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்ட போதும் தோப்புக்கரணம்தான் தண்டனை. இப்போது மக்களுக்குத் தண்டனையாக தோப்புக்கரணம் போடச் செய்யும் பல போலீசாரும் பள்ளிப்பருவத்தில் இதே தண்டனையை அனுபவித்திருக்கக்கூடும். அது இப்போது எதிரொலிக்கலாம்.
நித்திலா, தேவதானப்பட்டி
இப்படிப்பட்ட வைரஸ் பாதிப்புகளை யெல்லாம் எதிர்பார்த்துதான் அந்தக் காலத்தில் தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என்கிற அளவிற்கு அச்சு ஊடகங்களில் கார்ட்டூன் வெளிப்படுகிறதே?
கொரோனாவுக்கான சமூக விலக்கல் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. அது அறிவியல்பூர்வமானது. தீண்டாமை என்பது குறிப்பிட்ட சில சாதியினரை மட்டும் விலக்கிவைப்பது. அது சட்டவிரோதமானது. மனிதத்தன்மையற்றது. கொரோனாவைவிட ஆபத்தானது. காலங்காலமாக நீடிக்கும் இந்தத் தீண்டாமையை ஒழிக்க அரசும் சட்டமும் பாடுபட்டு வரும்நிலையில், சமூக விலக்கலையும் தீண்டாமையையும் ஒன்றிணைத்துப் பார்ப்பதே தண்டனைக்குரிய குற்றச் செயல்தான். கடவுளின் பெயரால் இத்தனை காலமாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்ததைப் பொறுக்க முடியாமல்தான், கொரோனா காலத்தில் கடவுள் சன்னதிகளும் மூடப்பட்டுவிட்டன.
சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலி
தூர்தர்ஷனில் ராமாயணம் சீரியலைப் பார்க்கிறீர்களா?
ராமாயணத்தைப் பார்க்க முடிகிறதோ இல்லையோ, நாட்டு மக்கள் அனைவரும் உயிர்பயத்தில் இருக்கிற நேரத்தில், தூர்தர்ஷனில் மறுஒளிபரப்பாகும் ராமாயணம் அவரவர் வீட்டு கேபிளிலோ டிஷ்ஷிலோ தெரியாவிட்டால் புகார் தெரிவிக்கலாம் என்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் அக்கறையைப் பார்க்க முடிந்தது.
தூயா, நெய்வேலி
கறி-மீன் வாங்குவதற்காக இந்தக் கொரோனா ஆபத்திலும் கூட்டமாகக் குவிய வேண்டுமா?
காய்கறி ஒரு சிலருக்கான அவசிய உணவு என்றால், கறி-மீனும் மற்றவர்களுக்கு அவசியமான- சத்தான உணவுதான். ஞாயிற்றுக்கிழமைகளில் அதனை வாங்குவதற்கு கூட்டம் கூடும் என்பது அசைவம் சாப்பிடும் ஆட்சியாளர்களுக்கும் தெரியும். முன்கூட்டியே அதற்கான ஏற்பாடு களை செய்து, மக்களுக்கும் அறி வித்திருந்தால், மட்டன்-மீன் வாங்கும் இடத்திலும் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, சமூக விலக்கத்தைக் கடைப்பிடித் திருக்கலாம்.
தமிழி
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கொரோனாவை விரட் டியடிக்க சில கிராமங்களில் சடங்குகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றனவே?
நடைமுறைக் காரணங்களுடன் கடைப்பிடிக்கப்பட்ட எத்தனையோ பழக்கங்கள் பிற்காலத்தில் வெறும் சடங்குகளாகிவிடுவது வழக்கம். அதற்குப் புனிதத்தன்மை ஏற்படுத்தும்போது அது வழிபாடாக மாறிவிடும். இயல்பாகக் கடைப்பிடிக்கும் போது அது இயற்கை மருத்துவமாகும். மூத்த குடிகளில் ஒன்றான தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க் கையை மேற்கொண்டவர்கள். உடல் தூய்மை நீரால் அமையும் என்கிறார் வள்ளுவர். தண்ணீரின் பயன்பாட்டை நன்கு உணர்ந்திருந்தனர். தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தும் தண்ணீரால் கடவுள் சிலைகளையும் தூய்மைப்படுத்தினர். அது புனிதநீராகி, வழிபாடாக மாறியது. பின்னர், அபிஷேகம் என்ற பெயரில் சடங்கானது. மனிதர்களிடம் சக மனிதர்கள் இதைச் செய், அதைச் செய் என்று சொன்னால் அந்த வார்த்தைகளுக்கு மதிப்பிருக்காது. அதையே கடவுள் பெயரால் சடங்கு, வழிபாடு என்று சொன்னால் அதனை செயல்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதனைச் செய்தால் நல்லது ஏற்படும் என்ற நம்பிக்கையும், செய்யாவிட்டால் ஏதாவது விபரீதம் நடந்துவிடும் என்ற பயமும் மக்கள் மனதில் ஏற்படுவது இயல்பு. அதனால்தான், இயற்கையாக செய்ய வேண்டிய செயல்களை சடங்கு, பரிகாரம் என்ற பெயரில் செய்கிறார்கள். கிராமப்புற மக்கள் தங்களின் பழக்கவழக்கங்களில் உறுதியாக இருப்பார்கள். அதேநேரத்தில், தங்களுக்கு வசதியான புதிய கண்டு பிடிப்புகளையும் ஏற்றுக்கொள்வார்கள். சாணம் தெளிப்பது, சாம்பிராணி புகை போடுவது, வேப்பங்கொழுந்து சாப்பிடுவது, மஞ்சள் பயன்படுத்துவது எனப் பல கிருமிநாசினிகளை அவர்கள் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதும் தங்கள் வீட்டிலும் வாசலிலும் தெருவிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். பழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் இதனை சில கிராமங்களில் கோவில் சடங்காகவும் வழிபாடாகவும் மாற்றிவிடுவதும் உண்டு. இவையெல்லாம் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வழக்கம். இவற்றைக் கடைப்பிடிப்போம் என வெளியூர்களில் உள்ள தங்கள் உறவினர்களுக்கும் செய்தி அனுப்புகிறார்கள். அது, அறிவியலின் அசாத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றான செல்போன் வழியாகத்தான் பரவுகிறது. முன்னோர்கள் அறிந்திராத வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்தான் இன்று கிராமத்து மக்களின் சடங்கு, வழிபாடுகளை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்கிறது.