வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"கோவிட் 19 வைரஸ் எங்களை பாதிக்காது' என்று நித்தியானந்தா கூறி இருப்பது?
ஒருவேளை, அந்த வைரஸைவிட கொடூரத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
தவறு செய்த கட்சிக்காரர் மீது தலைமை நடவடிக்கை எடுத்த நிலையில், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க துரைமுருகன் முயற்சிப்பது சரியா?
நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகனின் வெற்றிக்குத் துணை நின்ற கட்சிக்காரர் மீது ஒருசிலர் திட்டமிட்டு புகார் கொடுக்கச் செய்ததால், தலைமையின் நடவடிக்கைக் குள்ளாகிவிட்டார் என்பது துரைமுருகனின் வாதம். கட்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் இன்னமும் மாவட்ட அரசியலை தன்போக்கில் இயக்க நினைப்பது அநியாயம். இத்தகைய போக்கைக் கடைப்பிடிக்கும் பலர் தி.மு.க.வில் இன்னமும் மாறாமல் இருப்பது அந்தக் கட்சிக்கு பலவீனம்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
உத்தரபிரதேசத்தில் 2022 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 350 இடங்களில் வெற்றி பெறும் என கைரேகை ஜோசியர் கூறியிருப்பதை நம்பியிருக்கிறாரே அகிலேஷ் யாதவ்?
கைரேகை ஜோசியத்தினால் தேர்தல் வெற்றி வராது. வாக்காளர்களின் விரல் ரேகையில் இருக்கிறது ஆட்சி அமைவதும்-அமையாததும்.
மா.சந்திரசேகரன், மேட்டுமகாதானபுரம்
கோமியம் குடித்தால் கொரோனாவைத் தடுக்கும் என்கிறார்களே இந்து மகாசபையினர்?
கொரோனாவைத் தடுக்க ஆலோசனைகள் தந்தால் லட்ச ரூபாய் பரிசு என்கிறார் பிரதமர். அவரது கட்சியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர்கள் கோமியம் குடித்தால் சரியாகும் என்கிறார்கள். உண்மையிலேயே அது சரி என்றால் அவர்களுக்கல்லவா லட்சங்களை பரிசளித்திருக்க வேண்டும்? பிரதமர் பரிசளிக்காததிலிருந்தே கொரோனாவுக்கு கோமியம் மருந்தில்லை என்பது தெரிகிறது. ஆனாலும், "கௌமூத்ரா' என கோமியம் விருந்து நடத்துகிறார்கள். கடவுள் சிலைகளுக்கு ஸ்டெதஸ்கோப் வைத்து கொரோனா பாதிப்பிருக்கிறதா என ஆராய்ச்சி செய்கிறார்கள். சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவிக்கிறார்கள். இன்னும் என்னென்னவற்றை சகிக்க வேண்டியிருக்குமோ!
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)
கலைஞர் சக்கர நாற்காலியில் இருந்ததை, பூர்வ ஜென்ம பாவம் என்றும், கடவுளை வழிபடாததால் ஏற்பட்ட விளைவு என்றும் பேசிய இந்து முன்னணி ராம கோபாலனும் இன்று தள்ளுவண்டியில் போகிறாரே?
முதுமை, அதற்குரிய நோய்கள் ஆகியவை மனிதர்களின் இயல்பான நடமாட்டத்தைக் குறைத்து ஊன்றுகோல் துணையையோ, சக்கர நாற்காலியையோ தேட வைக்கும். கலைஞருக்கும் அதுதான் ஏற்பட்டது. அவரை விமர்சித்த ராமகோபாலன்களுக்காக வள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
கொரோனா பீதியால் சிக்கன் வியாபாரத்தை மட்டும் பழிவாங்கியது நியாயமா?
அதானே, ஒரு கிலோ சிக்கனை 50 ரூபாய் அளவுக்கு குறைத்த கொரோனா, 800 ரூபாய் விற்கும் மட்டனை கண்டுகொள்ளாமல் விட்டது நியாயமா?
_________
தமிழி
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
பண்டைய தமிழர் காலத்தில் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை போன்ற நாட்கள் விசேஷ நாட்களாக அனுஷ்டிக்கப்பட்டதா?
பழங்காலத் தமிழர்கள் வானியல், கோள்களின் இயக்கம் குறித்து அறிந்திருந்தனர் என்பதை இலக்கியங்களின் வழியே காண முடிகிறது. முதல் ஊழிக் காலத்தில் வானமும், இரண்டாம் ஊழிக் காலத்தில் காற்றும், மூன்றாம் ஊழிக் காலத்தில் நெருப்பும், நான்காம் ஊழிக்காலத்தில் நீரும், ஐந்தாம் ஊழிக்காலத்தில் நிலமும் தோன்றியது குறித்து, "உருவறி வாரா ஒன்றன் ஊழியும், செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்'’ என்கிற பரிபாடல் சுட்டிக்காட்டுகிறது. தற்கால அறிவியல் ஆய்வுகளுடன் நெருக்கமான அளவில் ஒத்துப்போகக்கூடிய இத்தகைய வானியல் பார்வைகள் பழங்காலத் தமிழர்களிடம் இருந்துள்ளன. ‘"கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு'’ என்கிற நற்றிணைப் பாடல் வழியாக, உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் சூரியக் கதிரின் ஒளியால் வாழ்கின்றன என்பதை தமிழ் இலக்கியம் வெளிப்படுத்துகிறது. "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்கிற அவ்வையாரின் பாடல் மூலமாக, வெறுங்கண்களால் காண முடியாத அணுவைத் துளைப்பது குறித்த சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது. நவீன அறிவியல் அந்த அணுவைத் துளைத்து அதன் ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. உயிரியல், வானியல், இயற்பியல் சார்ந்த அறிவியல் பார்வை பண்டைத் தமிழர்களிடம் இருந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. இன்றைய அறிவியல், சூரியக் குடும்பத்திலிருந்து பூமி உள்ளிட்ட கோள்கள் தோன்றியதையும், பூமிக்கு ஒரு நிலா இருப்பதுபோல மற்ற பல கோள்களுக்கும் நிலாக்கள் உள்ளன என்பதையும், சூரியனை பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது என்பதையும் கண்டறிந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் அலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மீனவர்களும் கிராமப்புறத்தினரும் இன்றும் அறிந்துள்ளனர். தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் என்பதால், அவற்றின் பலன்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டனர். நன்றி செலுத்தினார்கள். அவற்றைப் புனிதப்படுத்தி வழிபடுவது என்பது பிற்காலத்தில் உருவானது. விசேஷம் என்ற சொல்லும், அனுஷ்டிப்பது என்ற சொல்லும் தமிழ்ச் சொற்கள் அல்ல. அவை வடமொழிச் சொற்கள்.