மல்லிகா அன்பழகன், சென்னை-78

ஜனாதிபதியிடம் தி.மு.க. கொடுத்த 2 கோடி கையெ ழுத்து, காங்கிரஸ் கொடுத்த அமித்ஷா நீக்கம் பற்றிய கடிதம் இதில் முதலில் எந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும்?

எழுவர் விடுதலைக்காக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானமே ஆளுநர் மாளிகை யில் உறங்கிக்கொண்டிருக்கும் நாட்டில், ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கையெழுத்து கள் மனுக்கள் மீது நடவடிக்கையை எதிர்பார்க்கும் தங்களைப் போன்றவர்களின் அபார நம்பிக்கையால்தான் ஜனநாயகம் பிழைத்திருக்கிறது.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

Advertisment

ராகுல்காந்தி ஏன் தயங்குகிறார்? காங்கிரசில் தலைவர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

தீர்வு தெரியாததால்தான் ராகுல் தயங்குகிறார். அவர் எது குறித்து பயந்தாரோ அதுதான் தற்போது மத்தியபிரதேசத்தில் நடந்திருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் நடக்கலாம்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

Advertisment

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 500 கோடி ரூபாய் செலவில் நடந்த மந்திரி வீட்டுத் திருமணம் பற்றி?

ஆடம்பரப் பாடம் கற்பதற்காக கர்நாடக மந்திரி எல்.கே.ஜி. படிக்கும் இதுபோன்ற அரசியல் பள்ளிக்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்தான் ஹெட்மாஸ்டராக இருந்தவர். 1995ஆம் ஆண்டிலேயே பல நூறு கோடிகளில், திடீரென வந்த 30 வயது வளர்ப்பு மகனுக்கு ஆடம்பரத் திருமணம் நடத்தி, அதை தானே முன்னின்று உலகறிய ஊர்வலம் நடத்திக் காட்டியவர். இன் றைய அரசியல் ஆடம்பர ஆலமரத்துக்கு அன்றைக்கே விதை விதைத்தவர் ஜெயலலிதா.

mm

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

மாண்புமிகு என்றால் என்ன? மாண்புடன் பழகுவதா? பேசுவதா? அல்லது நடந்துகொள்வதா?

பழகிப் பேசுவதிலும் நடத்தைகளி லும் மாண்பு இருந்திட வேண்டும். ஆனால், இப்போது, கோடீஸ்வரி எனப் பெயர் வைக்கப்பட்ட குடிசை வீட்டுக் குழந்தைபோல, அடைமொழியில் மட் டும்தான் பலருக்கு மாண்பு இருக்கிறது.

எஸ்.அஜீம், உடையார்பாளையம்

"சாதிகள் உள்ளதடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' -இது ஏற்புடையதா?

புதிய பாரதிகளாக நினைத்துக் கொள்வோர் புதுமையாக வார்த்தை களைக் கோர்க்கிறார்கள். சாதிகள் உள்ளது என்பதும், அதுதான் இந்தியாவில் மனித குலத்தின் தாழ்ச்சிக்கு காரணம் என்பதும் புதிதல்ல, புதைக்க முடியாத வரலாற்று உண்மை.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

சைலண்ட்டாக இருந்துகொண்டே ஜி.கே.வாசன் சாதித்துவிட்டாரே?

உங்களுக்காகப் பேச பல வாய்கள் இருந்தால், உங்கள் வாய் மவுனமாக இருந்தாலே காரியம் நடந்துவிடும்.

_____________

தமிழி

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

கொரோனா போன்ற பயங்கர நோய்களுக்கு தமிழ் மருத்துவத்தில் மருந்து உண்டா? இன்றைய வைத்திய முறைகள் அன்றைய தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டனவா?

மருத்துவம் என்பது காலந்தோறும் உருவாகும் நோய்களுக்கேற்ப புதிய சிகிச்சைகளை உருவாக்கும் அறிவியல் முறையாகும். தமிழ்நாட்டின் சித்த வைத்தியம், வடநாட்டின் ஆயுர்வேதம், சீனாவின் வைத்திய முறை உள்ளிட்ட பலவும் காலந்தோறும் மாறி வந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, நவீன மருத்துவம் என்கிற ஆங்கில மருத்துவம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு விறுவிறுவென வளர்ந்து எல்லா இடங்களுக்கும் பரவியது. இன்று உலகெங்கும் நிறைந் திருக்கிறது. தமிழ் மருத்துவத்தைப் பொறுத்தவரை, ஒருவருக்கு என்ன நோய்? அது எதனால் ஏற்பட்டது? அவரது உடல்நிலை எப்படி உள்ளது? எந்த மருந்து அவரது உடம்புக்கு ஏற்றுக்கொள்ளும்? நோயைக் கட்டுப்படுத்துவதுடன், அது பிறருக்குப் பரவாமலும், நிரந்தரமாகக் குணப்படுத்தவும் என்னென்ன வழிமுறைகள் எனப் பகுத்துப் பார்த்து சிகிச்சையளிக்கும் தன்மையைக் கொண்டது. சீரான அளவிலும் இடைவெளியிலும் உணவு சாப்பிட்டு வந்தால், மருந்தே வேண்டாம் மனித உடம்புக்கு என்கிறார் திருவள்ளுவர். உணவே மருந்து, மருந்தே உணவு என இயற்கை மருத்துவர்கள் இப்போது இதனை வலியுறுத்துகின்றனர்.

திருமூலரின் திருமந்திரம் உடம்பின் இயக்கத்தை மூச்சின் மூலம் கட்டுப்படுத்தும் ஓகப் பயிற்சிகளை (யோகா) கற்றுத்தருகிறது. ஒன்பது துவாரங்கள், ஐந்து இந்திரியங்கள், ஆறு ஆதாரங்கள், முப்பது இணைப்புகள், பதினெட்டு பொருத்துகள் என உடலமைப்பு குறித்து திருமந்திரம் விளக்கு கிறது. உயிர்களின் தோற்றம் குறித்து தொல்காப்பியத்தில் ஓர் அறிவு உயிரினம் முதல் ஆறு அறிவு மனிதர்கள் வரை வகைப்படுத்திப் பாடப்பட்டுள்ளது. கருதோன்றும் காலம், வளரும் காலம், மகப்பேறு, கருச்சிதைவு குறித்தும் குறிப்புகள் உள்ளன. வேம்பு, கடுகு, சாணம், நறுமணப்புகை உள்ளிட்டவற்றைக் கிருமி நாசினியாகப் பயன்படுத்தியது பற்றிய குறிப்புகளை தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது. சூலை, வெப்பு, முயலகன், தொழுநோய் போன்ற கொடிய நோய்கள் குறித்தும், மருத்துவத்திற்குப் பிறகும் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பது குறித்தும் பாடல்கள் உள்ளன. இன்றைக்கு அத்தகைய நோய்களிலிருந்து மனிதகுலம் மீண்டிருக்கிறது. "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' எனும் திருமந்திரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் புதிய நோய்கள் குறித்த எச்சரிக்கையினைப் பெற்று, அதற்குரிய மருந்து கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மனிதகுலத்தைக் காப்பாற்றலாம்.