பொன்னியம்மன்மேடு, வண்ணை கணேசன்

தீவிரவாதத்தின் மையப் புள்ளி பாகிஸ்தான் என்று ஐ.நா. அலுவலகத்திலேயே போஸ்டர் வைத்திருப்பது குறித்து?

பாகிஸ்தான் என்ற தனி நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரமும், ராணுவ ஆட்சி என்ற பெயரில் கொடுங்கோன் மையும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. அதன் முக்கியமான விளைவு, தீவிரவாதத்தின் விளை நிலமாக அந்நாடு மாறியதுதான். காஷ்மீருக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள், மும்பை நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், ஒசாமா பின்லேடன் போன்ற சர்வதேச அதிபயங்கரவாதிகள் எல்லாருக்கும் அடைக்கலம் தந்து ஆதரிக்கும் தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் இருக்கிறது என்பதை ஐ.நா. சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதேநேரத்தில், இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் வல்லாதிக்கத் தால் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஐ.நா.வின் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. பாகிஸ்தானை எதிரியாக உருவகப்படுத்தி அரசியல் நடத்தும் பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவும் பாகிஸ்தானாக மாறுகிறது.

லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)

Advertisment

"ஸ்டாலினை ஜின்னாவின் ஆவி ஆட்டிப் படைக்கிறது' என்கிறாரே பா.ஜ.க.வின் முரளிதரராவ்?

ஜின்னாவின் ஆவி ஆட்டிப் படைப்பது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையா? மாற்றுக் கட்சியினர் யாரைப் பார்த்தாலும் பாகிஸ்தானியர்களாகவே தெரியும் பா.ஜ.க.வின் தலைமை முதல் தொண்டர்கள் வரை அத்தனை பேரையுமா?

கௌசிக், திண்டுக்கல்

Advertisment

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி இப்போதே தொடங்கி விட்டாற்போல் தெரிகிறதே?

அதிகாரம் கையில் இருக் கும்போது அன்றாட நடவடிக் கைகளும் பிரச்சாரமாகத்தான் மாறும். மக்கள் எதிர்பார்ப்பது பிரச்சாரங்களை அல்ல. பயன் தரும் திட்டங்களையும், உரிமை களை விட்டுக் கொடுக்காத அரசாங்கத்தையும்தான்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

நூறு குற்றவாளிகள் விடுதலை ஆனாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற மரபுப்படிதான் நீதிமன்றங்கள் செயல்படு கின்றனவா?

வழக்குகளிலிருந்து விடுதலை அடைவதாலேயே குற்றவாளிகள், நிரபராதி களாகிவிடக் கூடாது என் பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

mm

அ.குணசேகரன், புவனகிரி

டெல்லியில்… 1984 சீக்கி யர்களுக்கு எதிரான கலவரம், 2020 இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம். ஒப்பிடுக?

இரண்டுமே ரத்தவெறிக் கான அழியாத சாட்சிகள். 1984 என்பது ஒரு சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக நடந்த அரசியல் வன்முறை. 2020 என்பது ஒரு சிறுபான்மை மதத்திற்கு எதிராக பெரும் பான்மை மதத்தினரைப் பயன்படுத்தும் அரசியல் பயங்கர வாதம்.

___________

தமிழி

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

"லெமூரியா கண்டம் குறித்து அகழாய்வு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்கிறார் அமைச்சர் மாஃபா. இது நடைமுறைச் சாத்தியமா?

ஒருவேளை நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசிடம் வலியுறுத்துவதுபோல மாஃபா பாண்டியராசனும் அவரைப் போன்ற ஆளுங்கட்சியினரும் பா.ஜ.க. அரசை வலியுறுத்தப் போகிறார்களோ என்னவோ! லெமூரியா கண்டம் குறித்த ஆய்வுகளுக்கு முன்பாக, அப்படி ஒரு கண்டம் இருந்ததா இல்லையா என்ற சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு முடிவு கண்டாக வேண்டும். மடகாஸ்கர் பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்காவிலிருந்து தென்னிந்தியா ஆஸ்திரேலியா வரையிலான ஓர் இணைப்புக் கண்டம் இருந்தது என்றும், பின்னர் கடலுக்குள் மூழ்கிய அந்த கண்டமே லெமூரியா என்றும் கருதப்படுகிறது. மனிதத் தோற்றம் பற்றிய மரபணு ஆராய்ச்சிகளும் ஆப்பிரிக்கா விலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி நகர்ந்த முதல் மனித இனம் பற்றி விவரிக்கிறது. ஆப்பிரிக்காவின் கறுப்பின மக்களும், ஆஸ்திரேலியாவின் அப்ஆர்ஜின் பழங்குடி மக்களும் தமிழ் மக்களின் சாயலுடன் ஒத்துப்போவதைக் காண முடியும். இதனடிப்படையில்தான், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழறிஞர்களும் நிலவியல் ஆய்வாளர்களும் லெமூரியா கண்டம் பற்றிய கருத்துரைகளை வெளியிட்டு, கடல் ஆராய்ச்சிகளுக்கு வலியுறுத்தினர். தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களில் முதல் இரண்டு லெமூரியாவில் இயங்கியதாகக் குறிப்பிட்டனர். லெமூரியாவை குமரிக் கண்டம் என்று தமிழறிஞர்கள் அழைத்தனர். கடல் கொண்ட தென்னாடு பற்றி நிறைய கட்டுரை கள் வெளியாகியுள்ளன. முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைமையிடமாக இருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் தலைமையிடமாக இருந்த கபாடபுரமும் குமரிக்கண்டத்தைச் சேர்ந்தவை எனப் புலவர்களும் அறிஞர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். கடற்கோள்களால் தென்மதுரையும் கபாடபுரமும் கடலுக்குள் மூழ்கியதை எடுத்துக்காட்டி பல செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். கடலடி ஆராய்ச்சிகளிலும் குமரிமுனைக்குத் தெற்கே உள்ள கடல் பகுதியில் மலைகளும் நிலப்பரப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, லெமூரியா குறித்த ஆராய்ச்சியைத் தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்து கிறார்கள். அதேநேரத்தில், பூமியின் தகடுகள் இடப்பெயர்வினால் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களைப் போலத்தான், குமரிமுனைக்குத் தெற்கே கடலுக்கடியில் உள்ள பகுதிகள் தென்படுகின்றன என்றும், புதிய கண்டம் இருப்பதற்கான சூழல்கள் இல்லையென்றும் பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாறுபட்ட கருத்துகளால் லெமூரியா எனும் குமரிக்கண்ட ஆராய்ச்சி சர்வதேச அளவில் கவனம் பெறாமல் தடைப்பட்டு நிற்கிறது. குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுக்கு முன்னால், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியது, கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார் பற்றிய ஆய்வுதான். அதனை வலியுறுத்தும் முதுகெலும்பு இந்த ஆட்சி யாளர்களுக்கு இருக்குமா?