Skip to main content

மாவலி பதில்கள்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதியரசர் சுந்தரின் நியாயமான -துணிச்சலான தீர்ப்பு பற்றி?

குமாரசாமிகள் நிறைந் துள்ள நிலையிலும், குன்ஹாக்கள் மிச்சமிருக் கிறார்கள்.

பி.மணி, வெள்ளக்கோவில்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. அந்த அண்ணா பெயரிலான கட்சி நடத்தும் ஆட்சியில் ஏழைகள் சிரிப்பார்களா?

அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டு, ஆட்சியை டெல்லியிடம் அடகு வைத்திருப்பவர்களின் நிலைமை சிரிப்பாய்ச் சிரிக்கிறது. அதை நினைத்து மட்டுமே ஏழைகளால் சிரிக்க முடியும்.

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

நாட்டைத் திறம்பட ஆண்ட அந்தக்கால மன்னர்கள் வரிசையில் யாரைப்போல இன்றைய ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும்?

அதிகாரம் குவிந்திருந்த மன்னராட்சியில், மக்களுக்கு ராஜாக்கள் கருணை காட்டி னார்கள். இது மக்களாட்சிக் காலம். இப்போது தேவை, கருணையல்ல. உரிமை. ஜனநாயக நெறிமுறை யில் ஆட்சி செய் வதே பிரதமர், முதல்வர், அமைச் சர்களுக்கு சிறப்பு.

mavalianswersஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, அசோகன், எம்.ஆர்.ராதா, ஜெய்சங்கர், சத்யராஜ் இவர்களில் வில்லன் நடிப்பில் சிறந்தவர் யார்?

கவர்ந்திழுக் கும் தோற்றத் துடன் கூடியது வீரப்பாவின் வில்லத்தனம், குணச்சித்திரத் தன்மை கொண்டது பாலையாவின் வில்லத்தனம். அசோகன் பாவம்.. வில்லனும் காமெடியனுமாக பல படங்களில் அவரைப் படுத்திவிட்டார்கள். ஜெய்சங்கர் ஹீரோவாகத் தொடரமுடியாது என்பதால் வில்லனானவர். சத்யராஜ் வில்லத் தனத்தையே ஹீரோயிசம் ஆக்கியவர். எம்.ஆர்.ராதா, வில்லனாக நடித்து சமுதாயத்தில் உள்ள வில்லத்தனங்களைத் தோலுரித்த "ஆன்ட்டிஹீரோ.' படம் பார்க்கும்போது மட்டுமல்ல, பார்க்காத நேரத்திலும்கூட வில்லனாக மனதில் பதிந்த நம்பியார்தான் "ஆல் டைம் அவார்டு வின்னர்.'

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் "கட்' அடிப்பதுபோல எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு "கட்' அடிப்பதாகக் கூறுகிறாரே மத்திய இணை யமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் சுற்றுவதிலேயே கவனம் செலுத்தும் தனது கட்சியைச் சேர்ந்த பிரதமருக்கு முறைப்படி லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் "கட்' அடிப்பது பற்றி மத்திய அமைச்சர் பேசினால் நன்றாக இருக்கும்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில், தொழில் தகராறுசட்டங்களை அமல்படுத்த மறுக்கும் நிர்வாகங்களை எதிர்த்து இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தொழிலாளர்கள் போராடு வார்கள்?

தொழிலாளர் நலன்-அவர்களின் உரிமை இவையெல்லாம் கழுவேற்றப்பட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்தபிறகு வளர்ச்சி என்பது பெருமுதலாளிகளின் லாபம்தானே தவிர, தொழிலாளர்களின் நலனோ உரிமையோ அல்ல. தொழிற்சங்கம் அமைக்கக்கூட வழியற்ற நிலையில், சட்டங்கள் பற்றி எந்த நிர்வாகம் கவலைப்படப் போகிறது?

ஜெ.பிரின்ஸ், பாளையங்கோட்டை

காங்கிரஸ் கட்சியில் மிகத்தீவிரமாகச் செயல்பட்ட கவியரசு கண்ணதாசனை,எம்.ஜி.ஆர். தன்னுடைய அரசவை கவிஞராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?

இதில் "உள்ளும் புறமுமாக' பல ரகசியங்கள் உண்டு.

ஆன்மிக அரசியல்

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

தாஜ்மகாலை "ராம் மகால்' என்று மாற்றவேண்டும் என் கிறாரே உ.பி. மாநில பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர்சிங்?

காதல் சின்னம் என்றும் உலக அதிசயம் எனவும் பெயர்பெற்ற தாஜ்மகால், நீண்ட காலமாகவே பா.ஜ.க. மற்றும் அதன் பரிவாரங்களின் கண்களை உறுத்தி வருகிறது. காரணம், மொகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜுக்காக கட்டிய சலவைக்கல் கல்லறைதான் தாஜ்மகால். அதற்குப் பேரும் புகழும் கிடைப்பதையும், சாதாரண சுற்றுலாப் பயணிகள் முதல் வெளிநாட்டு அதிபர்கள் வரை பார்த்து ரசிக்கும் இடமாக இருப்பதையும் இந்துத்வா சக்திகளால் ஏற்க முடியவில்லை. பாபர் மசூதியைப் போல தாஜ்மகாலை நோக்கி சட்டென கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு போகவும் முடியவில்லை. சர்வதேச அளவில் சிக்கலாகிவிடும் என்ற அச்சமும் இருக்கிறது. அதனால், மெல்ல மெல்ல காய் நகர்த்துகிறார்கள். ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சுற்றுலாத்தல பட்டியலில் இருந்து நீக்க முற்பட்டது பா.ஜ.க.வின் ஆதித்யநாத் யோகி அரசு. அத்துடன், தாஜ்மகால் இருந்த இடத்தில் ஏற்கனவே இந்துக் கோவில் இருந்ததாகவும், அதன்பிறகுதான் மொகலாய மன்னன் இந்தக் கல்லறையைக் கட்டினான் என்றும் பரப்பப்பட்டது. அதன் அடிப்படையில் இப்போது, தாஜ்மகாலை "ராம் மகால்' என மாற்றவேண்டும் என்கிறார் பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் பாமியனில் இருந்த புகழ்மிக்க புத்தர்சிலைகளுக்கு நேர்ந்த கதி, தாஜ்மகாலுக்கு நிகழாமல் காப்பாற்றப்படவேண்டும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்