அ.குணசேகரன், புவனகிரி
நேர்மையிலும், ஊழல் செய்யாத நிர்வாகத்திலும் தமிழகத்தின் கெஜ்ரிவால் என்று யாரைச் சொல்ல முடியும்?
நீங்கள் தமிழகத்தில் கெஜ்ரிவாலைத் தேடுகிறீர்கள். கெஜ்ரிவாலோ தமிழ்நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் நிறைவேற்றியது போன்ற சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி போன்ற திட்டங்களைத் தேடி, தற்காலத்திற்கேற்ற வகையில் தலைநகரத்தில் நவீன வடிவில் நிறைவேற்றி, ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்.
மல்லிகா அன்பழகன், சென்னை-78
அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்தபோது 168 கோடி ரூபாய்க்கு பினாமியாக சொத்துகளை சசிகலா வாங்கியது உண்மை என்கிறதே வருமானவரித்துறை?
ஜெயலலிதா போயஸ்தோட்டத்தில் இருந்தபோதே அதி காரத்தைப் பயன்படுத்தி சசிகலா வகையறாக்கள் சொத்து சேர்த்ததையும், அப்படி முறைகேடாக சொத்துக் குவிப்பதற் காகத்தான் அவர்களை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா தங்க வைத்திருந்தார் என்பதையும் நீதிபதி குன்ஹாவும் உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறதே!
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
பிரதமர் பதவி பலமுறை தன்னை தேடிவந்தபோது காமராஜர் அதை ஏற்க மறுத்ததற்கு என்ன காரணம்?
அரசியலில் டெல்லி ஒரு தந்திர பூமி என்றவர் கலைஞர். அவருக்கு முன்பாக அதனை நேரடியாக உணர்ந்திருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். பிரதமர் பதவியை மறுத்து, புதிய பிரதமர்களைத் தேர்வு செய்வதில் திறமையாக செயல் பட்டு, தந்திர பூமியைத் தன் ஆளுமைக் கேற்ப கையாண்ட "கிங்மேக்கர்' அவர்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
யோகா என்பது மோடிக்காக அல்ல, நமது "பாடி'க்காக என்கிறாரே குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு?
காலையில் எழுந்து படுக்கையை சுற்றிவைப்பதிலிருந்து, காற்றோட்டமான பகுதியில் நடந்தபடி சீராக மூச்சுவிடுவது வரை எல்லாமே யோகா போன்ற உடற்பயிற்சிதான். அதனை முறையாகக் கற்றுத்தரும் முறைகளை சித்தர்கள் காலத் திலிருந்து தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். தற்போதைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இயல்பாகவே உடலுக்குரிய அசைவுகளைத் தருகின்ற முறைகளுக்கு இடமில்லாததால், உடல்நலன் காத்திட தனிப்பயிற்சிகள் தேவைப்படுகின்றன. "பாடி'க்கான அந்தப் பயிற்சிகளை அரசியல் லாபத்திற்காகவும் ஆன்மிகம் பெயரிலான வியாபாரத்திற்காகவும் மாற்றியவர்கள் மோடியும் அவரைச் சூழ்ந்துள்ள கார்ப்பரேட் சாமியார்களும்தான்.
பி.மணி, வெள்ளக்கோவில்
கடவுள் மறுப்புக் கொள்கையில் தி.மு.க. இன்னும் அதே உறுதிப்பாட் டோடுதான் இருக்கிறதா?
தி.மு.க.வின் கொள்கை நாத்திகமோ, கடவுள் மறுப்போ அல்ல. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான். அந்த தேவன் யார் என்று சபரிமலை, சீரடி, திருவண்ணாமலை, பழனி, ஸ்ரீரங்கம் என எல்லா இடங்களிலும் தி.மு.க.வினர் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
______________
தமிழி
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
பண்டைய தமிழர்களிடம் பணப் பரிவர்த்தனை எப்படி இருந்தது?
வணிகத்தில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பது அகழாய்வுகளின் வழியாகவும், இலக்கியங்களில் உள்ள குறிப்புகளின் வாயிலாகவும் காண முடிகிறது. பூம்புகார்(காவிரிப்பூம்பட்டினம்) கடற்கரையில் சோழர் காலத்தில் நடந்த வணிகத்தை பட்டினப்பாலை எனும் இலக்கியம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. கடல் வழியாக வந்த குதிரைகள், தரை வழியாக வந்த மிளகு, வடக்கிலிருந்து தங்கம், மேற்கிலிருந்து சந்தனம், தெற்கிலிருந்து முத்து, கிழக்கிலிருந்து பவளம், கங்கை -காவிரி -ஈழம் -கடாரம் ஆகிய வற்றிலிருந்து வந்த பொருட்கள், உணவுகள் என காவிரிப் பூம்பட்டின வணிகம் சிறப்பாக இருந்தது சுட்டிக்காட்டப் படுகிறது. அதுபோலவே நாளங்காடி, இரவு அங்காடி போன்ற கடைகளில் மக்கள் தங்களுக்கான பொருட்களை வாங்கிச் சென்றதையும் இலக்கியம் சுட்டிக்காட்டுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த பல அடுக்குகளைக் கொண்ட மண்பாண்டங்கள், தமிழர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை கப்பலில் ஏற்றுவதற்கு முன் பாதுகாத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உள்நாட்டு வணிகத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் பண்டமாற்று முறைதான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, சேர-சோழ-பாண்டியர் உள்ளிட்ட தமிழகத்தின் மூவேந்தர்களும் அண்டை நாட்டு அரசர்களும் நாணயங்களை வெளியிட்டனர். பொன், காணம், காசு உள்ளிட்ட பல பெயர்களில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. பெரிய வணிகர்களும் அரசின் அனுமதி பெற்று நாணயங்களை அச்சிட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். செம்பு, இரும்பு, தங்கம் போன்ற உலோகங்களில் இந்த நாணயங்கள் அச்சிடப்பட்டிருந்ததைக் காண முடிகிறது. இவற்றிற்கேற்ப நாணயங்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டு, அதனடிப்படையில் பிற நாடுகளுடனான வணிகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுச்சேரி அருகேயுள்ள அரிக்கமேட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ரோம நாட்டு நாணயங்கள் கிடைத்தன. தமிழர்கள் மரக்கலம் எனும் கப்பலை செலுத்துவதில் சிறப்பாக இருந்துள்ளனர். அதனால், காற்றின் திசை வழியே பாய்மரக்கப்பல்களை ஓட்டிச் சென்று கிரேக்கம், ரோமாபுரி போன்ற நாடுகளுடனும் ஈழத்திலும் வணிகம் செய் திருக்கின்றனர். கப்பல் கட்டுமானம், பராமரிப்பு ஆகிய வற்றிலும் தமிழர்களின் வணிகத்திறமை வெளிப்பட்டுள்ளது. பிறநாடுகளை ஈர்த்த வணிகத்திறமைக்கேற்ப நாண யங்கள் பயன்படுத்தப்பட்டு, "நாணயமான' வணிகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.