அ.யாழினி பர்வதம், சென்னை-78
ஜெயலலிதா ஆட்சியில் அ.தி.மு.க. அமைச்சர்கள், எடப்பாடி ஆட்சியில் அ.தி.மு.க. அமைச்சர்கள் -என்ன வித்தியாசம்?
குனிந்து கைகட்டி வாய்பொத்தி இருந்தவர்கள், வெளிப்படையாகக் கல்லா கட்டும் வகையில் நீளமான கைகளும், தாறுமாறாகப் பேசுகின்ற வாயையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஜெ. முன்னிலையில் அப்போது குனிந்து, மண்டியிட்டு தவழ்ந்தவர்கள், இப்போது டெல்லியிடம் அந்த விசுவாசத்தைக் காட்டுகிறார்கள்.
அ.குணசேகரன், புவனகிரி
டெல்லி தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகளுக்குப் புகட்டிய பாடம் என்ன?
தேசபக்தி என்ற பெயரில் நடத்தும் அரசியல் வியாபாரத்தை மக்கள் நம்பவில்லை என்பதை பா.ஜ.க.வுக்கும், மாநிலத்தில் கட்சியை வலுவாக நடத்தும் அமைப்பும் தலைமையும் இல்லாவிட்டால் தலைநகராக இருந்தாலும் டெபாசிட் காலிதான் என்பதை காங்கிரசுக்கும் பாடம் புகட்டியிருக்கிறது டெல்லி தேர்தல்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
"குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்து நாடகம் போட்டார்கள்' என கர்நாடக மாநிலம் பிதார் நகரத்தின் பள்ளி மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் போட்டிருக்கிறார்களே?
மாணவி ஒருவருக்குப் பயிற்சி கொடுத்த அவரது தாயாரும், அந்த நாடகத்தை அனுமதித்த ஆசிரியப் பெண்மணியும் கைது செய்யப்பட்டு, சிறை சென்று, நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளனர். போலீசாரால் மாணவிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவதூறான செயல் என வழக்குப் போட்டாலே தாக்குப்பிடிக்காத ஒன்றை, தேசத்துரோகம் வரை கொண்டு சென்று மிரட்டு கிறது போலி தேசபக்தர்களின் அதிகாரம்.
பெ.மணி, குப்பம், ஆந்திரா
"தி.மு.க. போட்ட பொய் வழக்குகளால்தான் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்தார்' என்கிறாரே அமைச்சர் ஆர்.பி.உதய குமார்?
அப்படின்னா, "இரும்புப் பெண்மணி' என்று இதே அமைச்சர்கள் சொன்ன தெல்லாம் "துரு'ப்பிடித்த வார்த்தைகளா?
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
சத்தமில்லாமல் சாதனை படைப்பவர்கள் யார்?
சராசரி மனிதர்கள்தான். தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான "ஏறு தழுவுதல்' எனும் ஜல்லிக்கட்டைப் போல, கர்நாடகாவில் புகழ் பெற்றது கம்பாலா. நீரும் சேறுமான நிலத்தில் ஏரில் பூட்டிய எருமைகளை வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு. பிப்ரவரி 1 அன்று கர்நாடகாவின் கடலோரத்தில் உள்ள சிற்றூரான அஷ்வத்புரா என்ற இடத்தில் நடந்த கம்பாலா விளையாட்டில், சீனிவாச கவுடா என்ற இளைஞர், 142.5 மீட்டர் தூரத்தை 13.62 நொடிகளில் கடந்திருக்கிறார். எருமைகளை ஓட்டியபடி அவர் அதிவேகமாக கடந்த தூரத்தை உலகப்புகழ் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் சாதனையுடன் ஒப்பிட்டால், சீனிவாச கவுடா 9.55 நொடிகளில் 100 மீட்டரை கடந்திருக்கிறார். உசைன் போல்ட் கடந்தது 9.58 நொடிகளில். சர்வதேச போட்டிகளின் நேரத்தை விடவும் குறைவாக ஒரு கிராமத்தில் நடந்த போட்டியில் சத்த மில்லாமல் சாதனை படைத்திருக்கிறார் சாதாரண இளைஞர்.
__________
தமிழி
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
பண்டைத்தமிழர் காலத்தில் கவலைகளை மறக்க வைக்கும் பொழுதுபோக்கு கலைகளாக இருந்தவை நாட்டியங்களா, நாடகங்களா, கூத்து ஆட்டங்களா?
"சிரம் அறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கு. நமக்கோ உயிரின் வாதை' என்று பாடியிருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். போர்கூட ஒரு கலையாக கருதப்பட்டது உண்டு. போருக்குத் தயாராகும் வீரர்களின் பயிற்சிக்களமாக மற்போர், சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்டவை இருந்துள்ளன. அவற்றைப் பொதுமக்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். எனினும், பழந்தமிழர் பொழுதுபோக்கு கலை என்பதில் முக்கியமான இரண்டு இசையும், கூத்துமாகும். இசைக் கருவிகளைப் பொறுத்தவரை தோல் இசைக்கருவி முதன்மை பெறுகிறது. பறை, முரசு போன்றவை தோல் இசைக் கருவிகளாகும். சங்கு, கொம்பு, குழல் போன்ற ஊதுகின்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டு காலப்போக்கில் நாதசுரம் வரை வளர்ச்சி பெற்றுள்ளது. மென்மையான -இனிமையான இசைக்கருவிகளாக நரம்பிசைக் கருவிகள் இருந்துள்ளன. அதில் யாழ் இசைக்கருவி பழந்தமிழர் காலத்தில் மிகவும் சிறப்புப் பெற்றிருந்தது. சீறியாழ், பேரியாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் எனப் பலவகை யாழ்கள் இருந்ததை சங்க இலக்கிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
இசையைப் போல பழந்தமிழர் பொழுதுபோக்கு, கூத்து. இது நடனம், நாடகம் எனப் பல வகையில் அழைக்கப்பட்டது. அரசாண்டவர்கள் முதல் எளிய மக்கள் வரை விருப்பத்துடன் பார்த்த கலை இது எனலாம். இறைவனையே நடன வடிவில் பார்க்கின்ற மரபும் தமிழர்களிடம் உண்டு. மலைவாழ் பழங்குடி மக்களின் நடனங்கள் முதல், அரசவை நர்த்தகி ஆடும் நடனம் வரை பலவித நடனங்கள் பழந்தமிழர் காலத்தில் இருந்துள்ளன. குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, வெறியாட்டுக்கூத்து, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து என கூத்துகளில் பல வகைகள் இருப்பதை அறிய முடிகிறது. இசைக்கேற்ப ஆடும் நடனமே கூத்து எனப்பட்டாலும், அந்த நடனத்தின் மூலமாக காட்சிகளைப் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையில் நடிப்பினை வெளிப்படுத்துவதே நாடகம் எனப்படுகிறது. நாடகம் என்ற சொல்லை இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் பயன்படுத்துவதை தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆடல் கலையில் சிறந்தவரான மாதவிக்கு சிலப்பதிகாரத்தில் தனித்துவமான இடம் அளிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.