அ.குணசேகரன், புவனகிரி

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் டில் ப்ளஸ் -மைனஸ் என்னென்ன?

ப்ளஸ்=உரை. மைனஸ்=செயல்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

Advertisment

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நைவால் பா.ஜ.க.வில் சேர்ந்தது பற்றி?

இது அவர் ஆடும் விளையாட்டு அல்ல. அவரை ஆட்டுவித்த அரசியல் விளையாட்டு.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது போல, நீட் தேர்வும் ரத்தாகுமா?

mm

நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் உத்தர வினால் மத்திய அரசு முனைந்து செயல்படுத்தி, மாநில அளவிலான மருத்துவக் கல்லூரி இடங்களை அபகரிக்கும் தேர்வு. 5, 8 பொதுத்தேர்வை ரத்துசெய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தனது 87 வயதில் தமிழகம் தழுவிய 2700 கி.மீ. தூரத்தை 11 நாட்களில் பயணம் செய்து 22 கூட் டங்களில் பேசியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. திராவிட மாணவர் கூட்டமைப்பினர் அவருக்குத் துணையாக இருந்தனர். எந்த ஒரு பதவிக்கும் போட்டியிடாத, ஆசைப்படாத திராவிடர் கழகம் தொடர்ச்சியாக நடத்திய போராட்டம்தான் மண்டல் கமிஷன் நடைமுறைக்கு வித்திட்டது. தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கும் துணை நின்றது. இந்த வயதிலும் கி.வீரமணி மேற்கொண்ட பரப்புரைப் பயணமும் அதன் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களும் மத்தியில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றமும் நீட் தேர்வையும் ஒரு நாள் ரத்து செய்யும்.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

நித்தியானந்தாவின் கைலாசா, ஜெய லலிதாவின் மர்ம மரணம், சிலைக்கடத்தல் வழக்கின் தீர்ப்பு இந்த மர்ம முடிச்சுகள் எப்போது அவிழ்க்கப்படும்?

அதிகாரமும் சட்டமும் நீதியும், நியாய மாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் எப்போது செயல்படுகிறதோ அப்போது!

பி.மணி, வெள்ளக்கோவில்

ஆட்சியாளர்கள் மக்களின் இன்னல்களுக்குப் பரிகாரம் தேடாமல் முன் இருந்த ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்கிறார்களே?

முன்பிருந்த ஆட்சியாளர்கள் தொடங்கிய முக்கால்வாசி அளவில் நிறைவேறிய திட்டமாக இருந்தாலும், கல்வெட்டைத் திறந்து வைத்து தங்களின் சாதனையாக இன்றைய ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிப்பதும், தங்கள் ஆட்சியில் சரி செய்ய முடியாத சிக்கல்களுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழிசுமத்துவதும் இங்கே நிரந்தர அரசியல் வியாதியாகிவிட்டது. இதில் முதலிடம், பா.ஜ.க.வுக்குத்தான். நாட்டின் வளர்ச்சியைக் கெடுத்தது நேருதான் என முதல் பிரதமர் மீது குற்றம் சுமத்துகிறது இன்றைய பிரதமரின் அரசு. ஆனால், நேரு தொடங்கிய எல்.ஐ.சி.யைத்தான் மோடி அரசு விற்கிறது.

அ.யாழினிபர்வதம், சென்னை-78

இன்னும் 60 அமாவாசைகளுக்கு அ.தி.மு.க. ஆட்சிதான் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறாரே?

தமிழ்நாட்டின் இருட்டு விலக எத்தனை காலமாகுமோ!

____________

தமிழி

டி.ஜெய்சிங் கோயம்புத்தூர்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்துவதற்கே 1010 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே?

mm

இதற்கு முன்பு 20-ஆம் நூற்றாண்டில் (1980, 1997) தஞ்சை பெருவுடையார் கோவிலில் நடந்த குடமுழுக்குகளிலும் சமஸ்கிருதத்துடன் தமிழும் பயன்படுத்தப்பட்டது என்பதை இந்து அறநிலையத் துறையினர் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டி, அதேநிலை நீடிக்கும் என்பதையும் தமிழுக்கு முன்னுரிமை தரப்படும் என்பதையும் தெரிவித்தனர். தமிழில் மட்டுமே குடமுழுக்கு என்பதை வலியுறுத்தி பெ.மணியரசனின் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி அமைப்பும் தொடர்ந்த வழக்கில்தான் இந்து அறநிலையத்துறை இதனைத் தெரிவித்தது. அதன் காரணமாக, இம்முறை தமிழ் கோபுரம் வரை முன்னேறியிருக்கிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பே தமிழ் நாட்டில் பல சைவ, வைணவ கோவில்கள் இருந்தன. நாயன்மார்களா லும் ஆழ்வார்களாலும் பதிகங்கள் பாடப்பெற்ற திருத்தலங்கள் இவை. அவற்றில் ஒன்றான சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோவில். தேவார மூவர்களில் மூத்தவரான திருநாவுக்கரசராலும் இளையவரான திருஞானசம்பந்தராலும் பாடல் பெற்ற தலம். இந்த திருக்கோவிலுக்கும், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெற்ற அதே பிப்ரவரி 5-ஆம் நாள்தான் குடமுழுக்கு நடைபெற்றது. ஆனால், இங்கு தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என்று யாரும் கோரிக்கை எழுப்ப முன்வரவில்லை.

அதேநாளில், சிதம்பரம் எனப்படும் தில்லை கோவிலில் நடராசருக்கு மூலநாதராக விளங்கும் ஆதிமூலநாதர் கோவிலின் குடமுழுக்கும் நடைபெற்றது. இதுவும் தஞ்சை பெரிய கோவிலுக்கு முந்தைய கோவில்தான். தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லை கோவிலில் தமிழ் எப்போதுமே பின்தள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் ராசராசன் அதற்கு முன்பாக, தில்லை கோவிலில் கறையான்களிடம் சிக்கியிருந்த தேவார ஓலைச் சுவடிகளை மீட்டெடுத்தான். ஆனால், அதன்பிறகும் தமிழுக்குத் தில்லையிலே போராட்டம்தான். சிற்றம்பலத்தில் தமிழ் ஒலிக்கவேண்டும் எனப் போராடிய ஓதுவார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தூக்கி வீசிய கொடூரமும் நடந்தது. கோவில்களில் தமிழ் என்பது தொடர்ச்சியான முயற்சிகளால் நிலைநாட்டப்பட வேண்டும். தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு ஒரு தொடக்கம்.