Skip to main content

மாவலி பதில்கள்

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

கலைஞரின் 95-வது பிறந்தநாளில் மு.க.அழகிரி கலந்துகொண்டாரா, புறக்கணித்தாரா?

புறக்கணிக்கப்படுவதால் கலந்துகொள்ளாவிட்டாலும், தனது "வேலை'யைக் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார் மு.க.அழகிரி.

நித்திலா, தேவதானப்பட்டி

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியிருக்கிறதே?
mavalianswers
அதிகார மமதையும் மதவெறியும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பலியாகியிருப்பவர் "ரைசிங் காஷ்மீர்' பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி. ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்தும் அத்துமீறல்களையும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் மதவெறியையும் தயவு தாட்சண்யமின்றி தனது எழுத்துகளால் அம்பலப்படுத்தியவர் புகாரி. காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவரைத்தான், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் பெருநாள் நேரத்தில், திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறது மதவெறி. தனது உயிருக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல் பற்றிக் கவலைப்படாமல் உண்மை நிலவரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் புகாரி. அவருக்கு மதவெறி அளித்த வெகுமதி, துப்பாக்கித் தோட்டா. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களின் உயிரைவிட, பத்திரிகை ஊடகங்களின் குரல்வளை ஆள்வோரால் குறி வைக்கப்படுகிறது. மாநில அரசின் கேபிள் டி.வி. என்பது ஊடகங்களின் கழுத்தைச் சுற்றியிருக்கும் தூக்கு கயிறு. அதனைத் தேவைக்கேற்ப இழுக்கிறது மாநில அரசை ஆட்டுவிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதி செய்து இருப்பது கடிதம் மூலம் அம்பலமாகியுள்ளதே?

அப்படியொரு கடிதம் உண்மையிலேயே எழுதப்பட்டிருந்தால், பிரதமரின் உயிரைப் பாதுகாக்க ரகசிய நடவடிக்கை எடுப்பதுதான் சரியான அணுகுமுறை. கடிதத்தை அம்பலப்படுத்துவதென்பது அரசியல் ஸ்டண்ட்டாக மாறிவிடும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதே?

அறிவிப்பு வரவேற்புப் பெற்றாலும், உண்மை நிலை எப்படி இருக்கும் என்பதை 2003-ல் ஜெ. கொண்டுவந்த பிளாஸ்டித் ஒழிப்பு சட்டத்தின் பரிதாபக் கதையை சுட்டிக்காட்டி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையை ஒரு முறை படித்துப் பார்க்கவும்.

திராதி, துடியலூர், கோவை 34

கர்நாடகாவில் 8-ஆம் வகுப்பு படித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி தந்திருக்கிறார்களே, நாடு விளங்குமா?

படிக்காத காமராஜர்தானே பல பள்ளிகளைத் திறந்து "கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்' ஆனார்! ஜெயலலிதா ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பள்ளிக்கல்வி மட்டுமே பயின்றிருந்த சுப்ரமணியம் அமைச்சராக்கப்பட்டார். ஆனால் பெரிய முன்னேற்றமில்லை. என்ன படித்திருக்கிறார்கள் என்பதைவிட எப்படி செயல்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம். சட்டம் படித்த மேதைகளெல்லாம் ஊழல் வழக்குகளில் சிக்கித்தவிக்கிறார்களே, நாடு விளங்காமலா போய்விட்டது?

சி.கார்த்திகேயன், சாத்தூர்

தமிழக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

போராட்ட உணர்வு மிகுந்திருக்கிறது. அதைவிட இந்த ஆட்சியை எப்படியாவது அகற்றியாக வேண்டும் என்கிற அவசரம் அதிகரித்திருக்கிறது. ஜெயலலிதாவிடம் ஆட்சியைக் கொடுத்த மக்கள், மு.க.ஸ்டாலினிடம் ஆட்சிக் கலைப்பை எதிர்பார்ப்பதுதான் இன்றைய காலச்சூழல்.

ஆன்மிக அரசியல்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மதமாற்ற அரசியல் தடைச்சட்டம் மறுபடியும் கொண்டுவர ஆன்மிக அரசியல் பயன்படுமா?

திராவிடத்தையும் அண்ணாவையும் வெறும் லேபிளாக வைத்துக்கொண்டு ஆன்மிக அரசியலைக் கச்சிதமாக செய்தவர் ஜெயலலிதா. மொத்த அ.தி.மு.க.வையும் தனக்காக பால் குடம் எடுக்க வைத்து, மண்சோறு சாப்பிட வைத்து, வேப்பிலை ஆடை கட்டி ஆடவைத்து, அனைத்துவிதமான யாகங்களையும் ஹோமங்களையும் செய்ய வைத்தவர்கள் உடன்பிறவா சகோதரிகளான ஜெ.வும் சசிகலாவும்! 2004க்குப் பிறகு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டாலும், 2016-வரை இந்துத்வாவின் கொள்கைகளைத், தன் வசதிக்கும் விருப்பத்திற்குமேற்ப நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

மனசாட்சிப்படி பதவியேற்பு உறுதிமொழி எடுத்த திராவிட அரசியல் மரபுக்கு மாறாக, தன்னைப் போலவே தன்னுடைய அமைச்சர்கள் அனைவரும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்க நிர்பந்தித்து செயல்படுத்தியவர். அவர்தான், 2001-2006 ஆட்சிக் காலத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்மூலம், சிறுபான்மை மக்களின் மனதில் அச்சத்தை விதைத்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததால், பெயரளவுக்கு மதமாற்றச் தடைச் சட்டத்தை திரும்பப் பெற்றார். பிறகு, 2006-ல் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகுதான் அதனை முழுமையாக ரத்துசெய்தார் கலைஞர். எனவே, மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வருவதேற்கோ, யார் என்ன உணவு சாப்பிட வேண்டும் என உத்தரவிடுவதற்கோ ஆன்மிக அரசியல்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில்லை. அடாவடி ஆட்சியாளர்கள் யார் வேண்டுமானாலும் அதனைச் செய்யலாம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்