வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ஆந்திராவில் இன்னும் 3 மாதத்தில் லஞ்சம் என்பதே இருக்கக்கூடாது என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு சாத்தியப் படுமா?

தமிழக முதல்வர் எடப்பாடியைத்தானே கேட்கிறீர்கள்?

மணி, விருதுநகர்

Advertisment

தோற்றுப்போவோம் எனத் தெரிந்தே தனது மகன், மகள் ஆகியோரை உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தினோம் என்கிறாரே முன்னாள் எம்.பி.அன்வர்ராஜா?

முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதே அதிலுள்ள கிரிமினல் நடவடிக்கை தொடர் பான ஆபத்துகளை எடுத்துரைத்துப் பேசியவர் அன்வர்ராஜா. ஆனால், அவரது கட்சியான அ.தி.மு.க. அதனை தனது டெல்லி எஜமானர்களின் விருப்பப்படி ஆதரித்தது. இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அதே அடிப்படையில் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால், தன் சொந்த சமூகத்தினரின் அதிருப்தியும் எதிர்ப்பும் தன் பக்கம் திரும்பி யிருப்பதை தேர்தல் களத் தில் தெரிந்துகொண்டார் அன்வர்ராஜா. வாஜ்பாய் ஆட்சியில் தி.மு.க. பங் கெடுத்தபோது, அக்கட்சியின் முஸ்லிம் பிரமுகர்கள் வாயைத் திறக்கமுடியாமல் நோன்பு இருந்தனர். இப்போது, அன்வர்ராஜா போன்ற அ.தி.மு.க.வின் முஸ்லிம் பிரமுகர் கள், பக்ரீத் ஆடுபோல பரிதவிக் கிறார்கள்.

லட்சுமி செங்குட்டுவன், நாமக்கல் (சேலம்)

Advertisment

பிரதமர் வீட்டிலேயே தீ விபத்தா?

நெருப்புக்கு ஏழையின் குடிசை.. பிரதமரின் வீடு.. ஜனாதிபதி மாளிகை.. என்ற பேதமெல்லாம் தெரியாது. அது, விபத்தா என்பது மட்டும்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சங்கதி.

nn

அஜ்மீர்கான், தூத்துக்குடி

மு.க.ஸ்டாலின் -டி.டி.வி.தினகரன் சந்தித்துக் கொண்ட நிகழ்வு எப்படி?

ரொம்பவும் சாதாரணமான நிகழ்வு. சட்டப்பேரவைக்கு வரும்போது மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் சந்தித்துக்கொள்வது இயல் பானது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்காலம் வரை அது ஏதோ நடக்கக்கூடாத செயல் என்பதுபோல ஊடகங்கள் வரை செய்தியாகி, அதுவே இப்போதும் பழக்கமாகத் தொடர்கிறது. அரசியல் நாகரிகம் பாழ்படுத்தப்பட்டதன் விளைவுதான், ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் பதவியிலிருந்து மாற்றிய சசிகலா அதற்கு காரணமாக, “"முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்'’‘ என்ற பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார். இப்போது அதே எதிர்க்கட்சித் தலைவருடன் தன் அக்கா மகன் சிரித்து கை குலுக்குவதற்கு என்ன சொல்வாரோ!

திருக்குமரன், ஊட்டி

திரைப்படங்கள் -புத்தகங்கள் எது ஒரு மனிதனை கலைஞனாக்குகிறது?

திரைப்படங்கள் மீது ரசிகனுக்கும், புத்தகங்கள் மீது வாசகனுக்கும் ஏற்படும் உறவின் ஆழத்தைப் பொறுத்தே அவர்கள் கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் மாறுகிறார்கள். திரைப்படமும் புத்தகமும் அந்தளவுக்கு மனிதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா,சாத்தூர்

சிபுசோரன் -ஹேமந்த் சோரன்?

பழங்குடி மக்களுடனான செல்வாக்கையும் நம்பிக்கையையும் அரசியல் பேரத்திற்கு பயன்படுத்தினார் அப்பா. மகன் என்ன செய்கிறார் எனப் பொறுத்திருப்போம்.

____________

தமிழி

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பழந்தமிழர்களின் புத்தாண்டு எது?

ஆண்டு என்பது நாட்களின் தொகுப்பு. சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கான கால அளவைக் கொண்டு தற்போது ஓர் ஆண்டு என்பது 365 நாள்+கால் நாள் எனக் கணக்கிடப்படுகிறது. பழந்தமிழர்கள் மாதக் கணக்கை, நிலவின் வளர்பிறை, தேய்பிறை இவற்றின் அடிப்படையில் முடிவு செய்தனர். அதனால்தான், மாதத்தை திங்கள் என்று குறிப்பிட்டனர். திங்கள் என்பது நிலவைக் குறிக்கும் சொல்லாகும். நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி, என்று வானியல் அடிப்படையில் கணக்கீடு செய்த பழந்தமிழர்கள், தொடர்ச்சியான ஆண்டுக் கணக்கைக் கடைப் பிடித்ததற்கான சான்றுகள் குறைவு என்கிறார்கள் அறிஞர்கள். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாசி), கூதிர் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என 6 பெரும்பொழுதுகளைத் தமிழர்கள் வகுத்திருந்தனர். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என ஒவ்வொரு நாளையும் 6 சிறுபொழுதுகளாகப் பிரித்திருந்தனர். ஆண்டுத் தொடக்கம் என்பது அறுவடைக்காலமான தை மாதத்தை முதன்மையாகக் கொண்டிருந்தது. பின்னர் அது ஆவணி மாதமாகி, அதன்பின்னர் சித்திரைக்கு மாறியதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர். பூமியை சூரியன் சுற்றிவரும் ஓராண்டில், 6 மாதகாலம் சூரியன் வடதிசை (உத்தராயணம்) நோக்கியும், 6 மாதகாலம் தென்திசை (தட்சணாயணம்) நோக்கியும் இருக்கும். இதில் வடதிசை காலம் தொடங்கும் மாதமே தை மாதமாகும். வியாழ ஆண்டு எனும் தமிழர்களின் 60ஆண்டு கணக்குமுறையை ஆரியர்கள் அபகரித்து வடசொல் பெயர்களாக மாற்றிவிட்ட காரணத்தால், அதனை மீட்கும் முயற்சியை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழறிஞர்கள் மேற்கொண்டனர். அதனையொட்டி, வானியல் அடிப்படையில் வடதிசையில் சூரியன் நகரும் தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என 1921-ல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். "தைஇத் திங்கள் தண்கயம் படியும்' என நற்றிணையும், "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' என குறுந்தொகையும், "தைஇத் திங்கள் தண்கயம் போல்' என புறநானூறும் தைத் திங்களைச் சிறப்பிக்கின்றன. "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழர் வழக்கம்.