அ.யாழினிபர்வதம், சென்னை-78
2019-ல் தமிழகத்தை கலக்கியது அத்திவரதரா, சீன அதிபரா?
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் கலக்கினார். மாமல்ல புரத்தில் சீன அதிபர் கலக்கி னார். அதைவிட அதிகமாகக் கலக்கியவர் மோடிதான். குப்பை பொறுக்குவது என்ன, கவிதை எழுதுவது என்ன, சாதா கலக்கலா அது. கதிகலக்கம்.
மல்லிகா அன்பழகன், சென்னை
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என சமீபத்தில் தோன்றியது எது?
1996-ல் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளாட்சித் தேர் தலை நடத்தியது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. இந்த இடங்களில் போட்டியிட நேரடி பெண் அரசியல் பிரமுகர்கள் கிடைக் காத காரணத்தால், ஆண் அரசியல்வாதிகள் தங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள், உறவுக்காரப் பெண்களை நிறுத்தி வெற்றிபெற வைத்த னர். கொழுந்தியாளை நிறுத்தி ஜெயிப்பதா, பெண் உரிமை என்றெல்லாம் அப்போது விமர்சிக்கப்பட்டது. 2016-ல் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீடு என ஜெயலலிதா அறிவித்தார். 2019 கடைசியில்தான் அந்த அடிப்படையில் தேர்தல் நடந்தது. மக்கள் தொகையில் பெண்கள் அதிகமாக இருந்தாலும் நேரடி அரசியலில் அவர்களின் பங்கேற்பு குறைவு. இப்போது கிடைத்துள்ள கூடுதல் இட ஒதுக்கீட்டுக்கு பட்டதாரி மகளையும், பாம்படக் கிழவியையும் நிறுத்தி வைத்தனர் அரசியல்வாதிகள். இவர்களில் திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசிக்காரர் பெண்களுக்கான கோவில்குப்பம், வழூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு தனது இரு மனைவியரையும் நிறுத்தி, இருவரையும் வெற்றி பெறவைத்து, வெற்றிக்களிப்புடன் ஒன்றாகப் போஸ் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்றே தோன்றுகிறது.
கௌசிக், திண்டுக்கல்
அமெரிக்கா, ஈரான் பதற்றத்தால் மூன்றாம் உலகப்போர் மூளுமா?
எண்ணெய் வளத்திற்கான சண்டை இது. முன்பு ஈராக், இப்போது ஈரான் என அமெரிக்கா தன் செல்வாக்கை காட்டுகிறது. அதனால் வளைகுடா பகுதி அமைதியிழக்கும். அண்மையில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட புரட்சிப்படைக்காரர் காசிம் சுலைமானி போன்றவர்களின் உயிரிழப்பு அமைதியைக் குலைக்கும். இது மூன்றாவது உலகப் போர் அல்ல. அமெரிக்காவின் அக்கப்போர்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக எழுத்தாளர் அருந்ததிராய் சொன்ன கருத்து எப்படி?
"பொய்யான தகவல்களைக் கொடுங்கள்' என அருந்ததிராய் இப்போது சொல்வதை, "பொய்மையும் வாய்மையிடத்து' என வள்ளுவர் அப்போதே சொல்லியிருக்கிறார்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
நேர்மையற்ற வாக்காளர்கள் பெருகும் போது நேர்மையான அரசியல் தலைவர் களை எப்படி எதிர்பார்க்க முடியும்?
எல்லோரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. தேர்தல் பரிசுகளை கோவிலுக்கு காணிக்கையாக்கிய நேர்மையான வாக்காளரும் இருக்கிறார். "காசு வாங்கிய நாயே... ஓட்டுப் போட்டியா?' என போஸ்டர் அடித்த நேர்மையான வேட்பாளரும் இருக்கிறார்.
_________________
தமிழி
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
ஜவகர்லால் நேரு, தன்னு டைய "டிஸ்கவரி ஆஃப் இண்டியா' புத்தகத்தில் சிந்துவெளி நாகரிகம், தமிழர் நாகரிகம் எனச் சொல்லியிருக்கிறாரா?
வரலாற்றுப் பார்வையில் அரசியல் சமுதாயப் பிரச்சினைகளை அணுகியவர் ஜவகர்லால் நேரு. அவரது "டிஸ்கவரி ஆஃப் இண்டியா', "கிளிம்ப்சஸ் ஆஃப் வேர்ல்டு ஹிஸ்டரி', இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் எல்லாவற்றிலும் உலக வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் பற்றிய பலவித பரிமாணங்களை வெளிப்படுத்தியிருப்பார். இமயத்திலிருந்து தொடங்கும் இந்தியாவுக்கும் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள இந்தியாவுக்குமான பண்பாட்டு மாற்றங்களை உணர்ந்தவர் நேரு. அதனால்தான், ராமாயணத்தை அவரால் கற்பனைக் காப்பியம் எனத் துணிந்து சொல்ல முடிந்தது. "ஆரிய திராவிட பண்பாட்டுப் போரின் வெளிப்பாடுதான் ராமாயணம்' என நேரு எழுதினார். சுதந்திர இந்தியாவில் வடக்கிற்கு கிடைக்கின்ற வசதியும் வளர்ச்சியும் தெற்கிற்கும் கிடைக்க வேண்டும் என பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் வலியுறுத்தியபோது அதனை ஏற்றுக்கொண்டு ஐ.ஐ.டி., பெல் உள்ளிட்ட நிறுவனங்களை தமிழகத்திற்கு வழங்கினார். சிந்துவெளி நாகரிக அகழாய்வுப் பகுதிகளான மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகியவற்றுக்குச் சென்று வந்தது குறித்தும், சிந்துவெளி ஆய்வாளர் சர் ஜான் மார்ஷல் சொன்ன கருத்துகள் குறித்தும் நேரு எழுதியிருக்கிறார். நேருவின் பார்வையில், "சிந்துவெளி நாகரிகம் என்பது மதசார்பற்ற தன்மைக்குரிய முன்னோடியான நாகரிகம். மதம், வழிபாடு தொடர்பான அடையாளங்கள் காணப்பட்டாலும் அவை அந்த நாகரிகத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. பிற்காலத்தில் உருவான இந்தியாவின் நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகத்திலிருந்து உருவானதாகும். இதன் தொடர்ச்சியான நாகரிக அடையாளங்களை இந்தியாவின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளும் அகழாய்வுகள் மூலம் அறிய முடியும்' எனத் தெரிவித்துள்ளார் நேரு. "மேற்குலக நாடுகளுக்கு முந்தைய பழமையான நாகரிகமாக சிந்துவெளி நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது' என்று குறிப்பிடும் நேரு, தமிழ் மொழியின் தொன்மையையும் பதிவிட்டிருக்கிறார். நேருவின் பார்வையுடன் இணைத்துப் பார்க்கும்போது, கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள தமிழர் நாகரிகத்தின் தொன்மங்கள் பலவும் சிந்துவெளி நாகரிகத்துடன் ஒத்துப் போகின்றன. வாழ்க்கையை அதற்குரிய தன்மைகளுடன் வகுத்து, சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் பழந்தமிழர்கள்.