எபிநேசர், நாகர்கோவில்

ஒரே ஆண்டில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை இழந்திருப்பது எதைக் காட்டுகிறது?

பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி யையும், அந்தக் கட்சிக்கு எதிரான -வலிமையான எதிர்க்கட்சிகளையும், மாற்று சக்திகளையும் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

mm

Advertisment

மாரி, திருநெல்வேலி

ராணுவத் தளபதி அரசியல் கருத்து பேசுவது இது முதல் முறையா?

ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக ராணுவம் உள்ளிட்ட படைகளில் பொறுப்பில் இருப்பவர்கள் சாதகமான கருத்துகளை சொல்வது நேரு காலத்திலிருந்தே இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினரையும் மக்களையும், மாணவர்களையும் விமர்சித்து பொதுமேடையில் பச்சையாக அரசியல் பேசும் பிபின் ராவத் போன்ற ராணுவத் தளபதி களை மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில்தான் நாடு பார்க்கிறது. அதற்குப் பரிசாக "முப்படை தளபதி' பதவி கிடைத்தது. இவருக்கு முன்னோடி, மோடி அரசில் அமைச்சராக உள்ள முன்னாள் தளபதி வி.கே.சிங். எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை ஒடுக்கவேண்டியது ராணுவத்தின் கடமை. ராணுவத் தளபதிபதிகளே எல்லை தாண்டுகிறார்கள்.

Advertisment

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை

இஸ்லாமியர்களை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த நாடு இந்தியா என்கிறார் ஹெச்.ராஜா. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஜனாதிபதி யாக்கப்பட்ட பக்ருதீன் அலி அகமதுவின் வாரிசுகளுக்கே என்.ஆர்.சி. கொடுக்கப்பட வில்லையே?

அ.சொக்கலிங்கம், ஈரோடு

"குடியுரிமைச் சட்டத்தால் ஒரு முஸ்லிமின் உரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா' என்று சவால் விட்டிருக்கிறாரே அமித்ஷா?

குடியுரிமைத் திருத்தச் சட்டமும் குடிமக்கள் பதிவேட்டுச் சட்டமும் (என்.ஆர்.சி.) ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதில் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் ராணுவ வீரராக இருந்தாலும், அவர்களும் அவர்களின் வாரிசுகளும் முஸ்லிமாக இருந்தால் என்ன கதி என்பதற்கு பக்ருதீன் அலி அகமது குடும்பத்தினரும், அசாமில் என்.ஆர்.சி. மறுக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட கார்கில் போர் வீரர் முகமது உல்லாவுமே சாட்சிகள்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பது சரிதானா? தமிழ்நாட்டிலும் அதுபோல அமல்படுத்தினால் நலன்தருமா?

தெலங்கானா தனி மாநிலமானதால், ஹைதராபாத் அதற்கு சொந்தமாகிவிட்டது. ஆந்திராவுக்குப் புதிய தலைநகர் தேவைப்படு கிறது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதி நகர் என்ற புதிய தலைநகரத்திற்கான கட்டமைப்பு பணிகள் பெரியளவில் தொடங்கப்பட்டன. ஆட்சி மாறியதும், தமிழ்நாட்டைப்போலவே முந்தைய ஆட்சியின் திட்டத்தைக் கைவிட்டு, 3 புதிய தலைநகரங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தற்கு ஆதரவும் எதிர்ப்பும் வெளிப்படுகின்றன. தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இக்காலக் கட்டத்தில் ஆந்திராவாக இருந்தாலும் தமிழ் நாடாக இருந்தாலும் நிர்வாகக் கட்டமைப்புகளை மின்னணு வழியாக வெளிப்படைத்தன்மையுடன் உருவாக்கினால் எல்லா நகரங்களுமே தலைநகரங்கள் போல மக்களுக்குப் பயன்படும்.

சுந்தர், கோவை

இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே மக்களுக்கு நல்லாட்சி தருவதில் தமிழகம் முதலிடமாமே?

2019 முடிவடைந்து 2020 தொடங்கும் நிலையில், மக்கள் வாய் விட்டுச் சிரித்தாவது மனக்கவலையைப் போக்கிக் கொள்ளட்டும் என மத்திய-மாநில அரசுகள் கூட்டாக சேர்ந்து தயாரித்துள்ள நகைச்சுவை மீம்ஸ் இது.

_____________

தமிழி

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பண்டைத் தமிழர்களின் உணவுப் பழக்க வழக்க முறைகளில் சைவம் மட்டும்தானா? அசைவமும் கலந்து உண்டார்களா?

உப்பில்லா கீரையை சமைத்து சாப்பிட்ட புலவர் குடும்பத்தையும், பெருஞ்சோறு அளித்த சேரமன்னனையும் சங்க இலக்கியம் சுட்டிக்காட்டுகிறது. சைவம், அசைவம் என்ற வேறுபாடு இல்லாமல் தங்கள் உடலுக்குத் தெம்பு தரும் உணவு வகைகளை ஐந்து வகை நிலத்திலும் வாழ்ந்த தமிழர்கள் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள். மலைப்பகுதியான குறிஞ்சி நிலத்தில் திணை அரிசிச் சோறுடன், நெய்யில் பொறிக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்டதையும், வயல் பகுதியான மருத நில மக்கள் நெல் அரிசிச் சோறுடன் நண்டுக் கறி உணவை சாப்பிட்டதையும், கடல் பகுதியான நெய்தல் நில மக்கள் இறால் மீன், ஆமை ஆகியவற்றைப் பக்குவம் செய்து சாப்பிட்டதையும், விளைச்சல் இல்லாத பாலை மக்கள், சோறு கெடாமல் இருக்க புளிச்சாறு கலந்து, அத்துடன் இறைச்சி சேர்த்து சாப்பிட்ட தையும் குறுந்தொகை சுட்டிக்காட்டுகிறது. காட்டுப் பகுதியான முல்லை நில மக்களுக்கும் மான்கறி உள்ளிட்ட இறைச்சி உணவு சிறப்பானதாகும். "ஊன் சோறு' என இலக்கியத்தில் அசைவ சாப்பாட்டைக் குறிப்பிடுகிறார்கள். கருவாடு, உப்புக்கண்டம் ஆகியவை குறித்தும் பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவை சமைக்கும் முறையில் அவித்தல், வறுத்தல், சுடுதல், பொரித்தல், ஊறவைத்தல் எனப் பல முறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. விருந்தோம்பல் என்பதை இல்லறப் பண்பாகத் தமிழர்கள் கடைப் பிடித்துள்ளனர். ‘"எல்லி வந்த நல் இசை விருந்திற்கு கிளர் கிழை அரிவை நெய்துழந்து அட்ட விளர் ஊன்'’ என நற்றிணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வந்த விருந்தினருக்கு, கொழுப்பு நிறைந்த இறைச்சியை நெய் விட்டு சமைத்துப் பரிமாறியிருக்கிறார்கள். இன்றைக்கு இரவு நேரத்தில் நெய், இறைச்சி எல்லாவற்றையும் தவிர்த்தாக வேண்டும் என்ற வாழ்க்கை முறையைத் தமிழர்கள் வாழ வேண்டியுள்ளது. உடல் உழைப்பு மிகுந்திருந்த அந்தக் காலத்தில், "உண்ட உணவு செரித்த பிறகு மறுவேளை உணவு சாப்பிட்டால் உடம்புக்கு மருந்தே வேண்டாம்' என்கிற வள்ளுவரின் வரிகள்தான் தமிழரின் உணவுமுறையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.