அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை
"குற்றத்தை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்' என்று எந்த தைரியத் தில் அரசியல்வாதிகள் சவால்விடுகிறார்கள்?
சட்டம் தன் கடமையை எப்படிச் செய்யும், எப்போது செய்யும் என்பதையெல்லாம் அறிந்திருக்கும் தைரியத்தால்தான்.
எம்.முகம்மது ரஃபீக் ரஷாதீ, விழுப்புரம்
"தி.மு.க. ஏன் கடந்த 13 ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வில்லை' என்று கேட்கிறாரே எடப்பாடி?
15 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஏன் முயற்சிக்கவில்லை என்றுகூட எடப்பாடியைப் பார்த்துக் கேட்கலாம். ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இங்கே அவரவருக் கான அரசியல். அண்ணா நூற்றாண்டு விழாவின் போதே, "தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கியிருக்க விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும், "இலங்கைக்கு திரும்ப விரும்பினால் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றும் தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இலங்கை யில் 2009-க்குப் பிறகான சூழல்களால் சொந்த நாடு திரும்ப நினைத்தவர்களும் தயக்கம் காட்டத் தொடங்கினர். 2011-ல் தி.மு.க. ஆட்சி மாறி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இந்த கால கட்டத்தில், குடியுரிமை சட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான முறையில் திருத்தம் எதையும் அன்றைய மத்திய அரசு கொண்டு வரவில்லை. ஆனால், தற்போது மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தில், இலங்கைத் தமிழர்கள் பற்றிக் குறிப்பிடப்பட வில்லை. அதனால்தான் அகதிகளாகக் கூட தாய்த்தமிழகத்தில் வாழமுடியாதோ என்ற அச்சமும் எதிர்காலம் குறித்த கேள்வி களும் எழுகின்றன.
கௌசிக், திண்டுக்கல்
கூட்டணி தர்மம் என்கிறார்களே… அப்படின்னா என்ன?
"நாட்டில் அதர்மம் நடந்தாலும் ஆதரிப்பது' அல்லது அமைதி காப்பது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு
உலகின் சக்திவாய்ந்த பெண்களின் வரிசையில் 34-வது இடத்தில் நிர்மலா சீதாராமன்?
அரண்மனை கோழி முட்டை அம்மிக்கல்லை உடைக்குமாம். மக்களாட்சியில் மக்களிடம் ஓட்டு வாங்காமல் மந்திரியாகிவிடும் திறமைக்கு 34-வது இடம்தானா?
மணி, விருதுநகர்
அரசியல் வேண்டாம் என்ற அமிதாப்பின் அறிவுரையை ரஜினி ஏற்பாரா?
வரும்.. ஆனா வராது என்பது போலவே, வேண்டும்.. ஆனா வேண்டாம் என ரஜினி ஊசலாடும் நிலையில், அறிவுரைகளைவிட, சொந்தமாக அவர் எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கும்.
எபினேசர், நாகர்கோவில்
ஜெ. வாழ்க்கையை மாவலி டைரக்ட் செய்தால், கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும்?
ஒருக்கால் டைரக்ட் செய்யும் வாய்ப்பு அமைந்தால், "அந்த ஒரு கால்...'
__________
தமிழி
அயன்புரம் த.சத்தியநாராய ணன், சென்னை-72
பண்டைத் தமிழர் நாகரிகத்தில் திருமண சடங்குகள் எவ்வாறு இருந்தன? தாலி அணிவிக்கும் முறை இருந்ததா?
பலரும் அறிந்த குறுந்தொகைப் பாடலான "யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்' என்பதன் தொடர்ச்சியாக "செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என நிறைவடைகிறது. பெற்றவர்கள் யார், அவர்கள் எம்முறையில் உறவினர் என்பதையெல்லாம் கடந்து, "காதல் கொண்ட இதயங்கள் செம்மண்ணில் பெய்த மழைநீர் போல பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்துவிடுகின்றன' என்கிறது இப்பாடல். இருமனங்கள் இணைவதே திருமணம் என்பதை அகப்பாடல்கள் பலவும் சுட்டிக்காட்டுகின்றன. தோழி அல்லது பாங்கன் துணையுடன் காதலனும் காதலியும் ஒன்றுகூடுவதை களவு மணம் என்றும், பெற்றோர் ஒப்புதலுடன் ஊரார் கூடிட, நடைபெறும் திருமணத்திற்கு கற்பு மணம் என்றும் இலக்கியத்தில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இத்தகைய திருமணங்களில் எப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்பதையும் சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நல்ல நாள், நேரம் ஆகியவற்றைப் பார்த்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் மணல் பரப்பி, நன்னீர் கலன்கள் வைக்கப்பட்டு, பெண்கள் முன்னின்று செய்யும் சடங்குகளின் தொடர்ச்சியாக மணமக்கள் மாலை சூடி, மங்கல இசையும் பெரியோர் வாழ்த்தொலியுமாக திருமணம் நடைபெறும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பழந்தமிழர் திருமண வாழ்வில் தாலி குறித்து சங்கப் பாடல்களில் குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. திருமணமானவர்கள் அணிந்துள்ள மங்கல அணி பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆனால், அது மணவிழாவில் கட்டப்படும் தாலி என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஐம்படைத் தாலி, புலிப்பல் தாலி போன்றவை குழந்தைகளுக்குப் பயத்தைப் போக்க தாயத்தாகவோ, அரைஞாண்கயிற்றிலோ கட்டக்கூடியனவாக இருந்துள்ளன. "தால்' என்பது பனையைக் குறிக்கும் என்பதால் பனையோலையால் ஆன அணிகலனை அணிவித்திருக்கக்கூடும் என்றும், இக்கால வழக்கதில் உள்ள தாலி முறை இல்லை என்றும் மொழி அறிஞர்கள் அப்பாதுரையார், ராசமாணிக்கனார் போன்றோர் கூறுகிறார்கள். பக்தி இலக்கியம் பாடிய ஆண்டாள், "கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழி' எனச் சொல்லும்போது திருமணச் சடங்கு முறைகளை வரிசையாகக் குறிப்பிடுகிறார். அதிலும்கூட தாலி பற்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லை. "ஒரு மனதாயினர் தோழி... இது திருமண மக்கள் நீடு வாழி' என்கிற பாரதிதாசன் வரிகள், பழந்தமிழர் திருமண முறை குறித்த புதிய சிந்தனையாகும்.