வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"நான் பொறாமைப்படும் அளவுக்கு உதயநிதி வளர வேண்டும்' என்கிறாரே மு.க.ஸ்டாலின்?
மகனின் வளர்ச்சி கண்டு தந்தைக்கு கிடைக்கின்ற உணர்வு பொறாமையாக இருந்தாலும், அது பெருமைதான். நீண்டகால கட்சியினர் பொறாமைப்படாத படி, இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கவனமாக செயல்படவேண்டியது உதயநிதியின் கடமை.
லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
திருமணம் ஆகாமலேயே நயன்தாரா தனது காதலருடன் கோவில் கோவிலாக சுற்றுகிறாரே?
நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒருமித்த மனநிலையில், காதலர்களாக வெளிநாடுகளுக்குச் செல் கிறார்கள். தற்போது "மூக்குத்தி அம்மன்' என்ற பக்தி படத்தில் நயன்தாரா நடிப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கும் சென்று வழிபடுகிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் திரு மணம் செய்துகொள்ளலாம், அல்லது காதலர் களாகவே நீடிக்கலாம். இன்றைய நிலையில், சமூகத்தில் "லிவிங் டூ கெதர்' ஏற்றுக்கொள்ளப்பட்டி ருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இது ஒன்றும் புதிய தகவல் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே, "கோயிங் ஸ்டெடி' என்ற முறையில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் இல்லறம் நடத்தியவர் செல்வி.ஜெயலலிதா. இத்தனைக்கும் சோபன்பாபு ஏற்கனவே திருமணமானவர். இதையெல்லாம் அந்தக் காலத்திலேயே வெளிப்படையாக சொல்லவும் எழுதவும் செய்தவர்தான் புரட்சித்தலைவி.
பிரதீபாஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறி வருவதாக பழ.கருப்பையா கூறுகிறாரே?
தி.மு.க. மட்டுமல்ல, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளின் அலுவலகம் தொடங்கி நிர்வாகம் வரை கார்ப்பரேட் முறையில்தான் இயங்குகின்றன. ஆனால், அடித்தட்டு மக்களுடனான உறவுதான் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை உருவாக்குகின்றது. உலகளாவிய சிந்தனை, உள்ளூர் தன்மையுடன் செயல்பாடு (பட்ண்ய்ந் ஏப்ர்க்ஷஹப்ப்ஹ் ஆஸ்ரீற் கர்ஸ்ரீஹப்ப்ஹ்) இவைதான் இன்றைய வெற்றிகரமான அரசியல்.
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன?
முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகளில் முஸ்லிம்களை மட்டும் ஏற்க முடியாது என மதப் பிரிவினைக் காட்டுகிறது மத்திய அரசு. அதேநேரத்தில், புத்த நாடுகளான இலங்கை, மியான்மரிலிருந்து விரட்டப்படும் மக்களை கவனிக்க மறுக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு எனும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தைவிட அதிக அச்சத்தை உருவாக்குகிறது. அது, முஸ்லிம்களை தனிமைப்படுத்தி இந்தியா வை முழுமையான மதவெறி நாடாக மாற்றிவிடும் என்பதால்தான் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து எதிர்க்கிறார்கள்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாளில் தண்டனை என்கிற ஆந்திர முதல்வரின் அதிரடிச் சட்டம்?
சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்பக்கூடாது. சட்டத்தின் பிடிக்குள் அப்பாவிகள் சிக்கக்கூடாது. வேகமும் விவேகமும் ஒருசேரத் தேவை.
________________
தமிழி
(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
இராமாயணமும் மகா பாரதமும் தேசிய காப்பியங்கள். அதுபோல தமிழில் முதன்முதலாக தமிழரைக் குறித்து வெளியான இலக்கியம் "சிலப்பதிகாரம்'தான் என்று சொல்லலாமா?
இராமாயணமும் மகாபாரதமும் வடமொழிக் காப்பியங்கள். இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே தேசிய மொழிகள்தான். அதனால், அந்தந்த மொழியில் உள்ள காப்பியங்களும் இராமாயணம், மகாபாரதம் போலவே தேசியக் காப்பியங்கள்தான். தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான காப்பியமான சிலப்பதிகாரம், அரச குடும்பத்தைத் தவிர்த்து, வணிக மக்களின் வாழ்வியலை எடுத்துரைத்தது. அந்த வகையில், இந்தியாவின் பிற காப்பியங்களைவிட சிலப்பதிகாரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அதேநேரத்தில், சங்கத் தமிழ்ப் புலவர்கள் காப்பியங்களாக மட்டுமின்றி, குறுங்கவிதை களிலேயே தமிழரின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியுள்ளனர். இகம், பரம் என வடமொழி இலக்கியங் களும் சாத்திரங்களும் வாழ்வை வகுத்த சூழலில், அகம் -புறம் என தனிப்பட்ட இல்லறத்தையும் அரசு நிர்வாகத்தையும் பிரித்துக்கொண்டு காதல் -வீரம் -அறம் -கொடை ஆகியவற்றைப் போற்றி வாழ்ந்திருப்பதை தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வளமான நிலங்களை நான்கு வகையாக வகுத்தும், இந்த வளம் அழிந்த நிலத்தை "பாலை' எனத் தனித்தும் சங்க இலக்கியங்கள் அடையாளம் காட்டியுள்ளன. தமிழ் மன்னர்களுக்கிடையே போர் மூளாதபடி தடுத்துக் காத்த புலவர்களின் செயல்களையும், போர்வெறி கொண்ட பெருவேந்தர்களால் "வேளிர்' எனப்படும் சிற்றரசனான பாரி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகள்களை கபிலர் என்ற புலவர் காத்ததையும் இலக்கியங்களில் காண முடிகிறது. புறப்பாடல்களில் பெயர் குறிப்பிட்டு இன்னார் என அடையாளப்படுத்தும் சங்க இலக்கியம், அகப்பாடல்களில் பெயர்களைக் குறிப்பிடாமல் தலைவன் -தலைவி என அவரவர் தனிமையை மதித்து படைக்கப்பட்டிருக்கிறது. பழந்தமிழரின் ஆட்சிமுறை, இல்லறவியல், வேளாண்மை, வாணிகம், போர்க்களம், கடல் பயணம், நீர் மேலாண்மை, நடுகல் வழிபாடு, வள்ளல் தன்மை, விருந்தோம்பல் எனப் பல பண்புகளையும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காணமுடிகிறது. பெருங்காப்பிய வடிவிலும், சிறிய குறள் வடிவிலும் இலக்கியம் படைக்கும் ஆற்றல் கொண்டது தமிழ் மொழி.