Skip to main content

மாவலி பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

""இந்திய பொருளாதாரத்தின் நிலை மூன்று டயர்கள் பஞ்சரான கார் போல உள்ளது'' என ப.சிதம்பரம் கிண்டல் செய்கிறாரே?

ஒரு டயரில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் அந்த கார், மக்கள் பாதையை மறந்துவிட்டு, ப.சிதம்பரமும் அவரது குடும்பத்தினரும் பயணிக்கும் பாதை யில் விடாமல் துரத்திக் கொண்டு செல்கிறதே!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

தமிழ்நாட்டு பெண்களிடம் தோசை கேட்கத் தெரிந்த பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தெரியாமல் போனது எப்படி?

துப்பாக்கியால் சுடுவதைப் புறக்கணித்து, தோசை சுடுவதில் பிரதமர் காட்டும் அக்கறைதான் காரணம். மத்திய அரசின் இலவச கேஸ் வழங்கும் திட்டம் பற்றிய காணொலி காட்சியில்தான் கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்மணி யிடம் பிரதமர் தோசை கேட்டார். மத்திய அரசுக்கு இது புது திட்டமாக இருக்க லாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கேஸ், அடுப்பு, மிக்சி, கிரைண்டர் இவையெல்லாம் ஏற்கெனவே அறிமுகமான திட்டங்கள். தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச கேஸ் அடுப்பில் தமிழகப் பெண்கள் "கலைஞர்' தோசையை சுட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சியில் "அம்மா' சட்னி அரைத்து பிரதமருக்கு கொடுப்பார்கள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

"அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது செருப்பை வீசுங்கள்' என்று உத்தரபிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் பேசியிருக்கிறாரே?

"சின்னகவுண்டர்' படத்தில் செந்தி லிடம் கவுண்டமணி சொல்வதுபோல, பா.ஜ.க. பிரமுகர்கள் பேசுவதையெல்லாம் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டில் பொறித்து, பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டால் பின்னாலே வரும் சந்ததியினர் இவர்களின் லட்சணத்தைத் தெரிந்து கொள்வார்கள். லஞ்சமும் நிர்வாகக் கோளாறும்தானே அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 90க்கும் அதிகமான பச்சிளங் குழந்தை களை உ.பி.யில் கொன்றது? அதற்கு காரணமான ஆட்சியாளர்கள் மீது எதனை வீசுவதாம்?

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ்நாடு பழனிசாமி, புதுவை நாராயணசாமி, கர்நாடகா குமாரசாமி இந்த மூன்று சாமிகளும் எப்படி?

குமாரசாமிக்கு பூசாரி காங்கிரஸ். நாராயண சாமிக்கு பூசாரி துணை நிலை ஆளுநர். பழனி சாமிக்கோ மத்திய அரசு பூசாரி. மூன்று சாமிகளுமே பூசாரிகளிடம் வரம் கேட்டு வழிபாடு நடத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன.

vajpayeeஎஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்

அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்ற சீனியர்கள் 75 வயது தாண்டிய நிலையில் பா.ஜ.க.வை வழிநடத்த பிரதமர் மோடிக்குப் பிறகு யார் காத்திருக்கிறார்கள்?

அதனை ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முடிவு செய்யும். கூட்டணி அமைத்துதான் பா.ஜக.வால் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை இருந்த போது, எல்லோருக்கும் நல்லவரான வாஜ்பாய் பிரதமராக்கப்பட்டார். அதனால்தான் இப்போது அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டாலும் ராகுல், வைகோ போன்றோர் அங்கே சென்று நலம் விசாரிக்கிறார்கள். பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்கிற நிலையில் மோடி முன்னிறுத்தப்பட்டார். எதிர்காலச் சூழலுக்கேற்ப யோகியோ வேறொரு காவியோ ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேர்வாக அமையும்.

வி.கார்மேகம், தேவகோட்டை

மத்திய அரசின் இணைச் செயலாளர்களை தனியார் நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்கிறதே மோடி அரசு?

உஷ்.. ஏதாவது பேசினால் நீங்கள் "ஆண்ட்டி இந்தியனா'க்கப்படுவீர்கள்.

--------------------------------
ஆன்மிக அரசியல்

வி.ஹரிகிருஷ்ணன், புத்தூர், சென்னை-17

புராணத்தில் சொல்கிற படியும் வரலாற்றில் உள்ள படியும் நாட்டை ஆண்ட ராஜாக்கள் ஆன்மிகம் கலந்த ஆட்சியைத் தந்ததால்தானே உலக அதிசய கோவில்களும் பெரிய குளங்களும் உருவாகின. இப்போது திடீரென ஆன்மிக அரசியல் என்று வேடிக்கை காட்டுவது ஏன்?

ஆட்சி நிர்வாகம் என்கிறபோது அதில் விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துமே அடக்கம். அரசனின் உத்தரவு அடுத்தவரின் தலையையே சீவித்தள்ளுகிற வலிமை வாய்ந்தது என்றாலும் ஆண்டவனின் பெயரைச் சொல்லி செயலைச் செய்யும்போது அது எதிர்ப்பின்றி நிறைவேறும் என அன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருந்தனர். குளம் வெட்டுவதாக இருந்தாலும் வரி விதிப்பதாக இருந்தாலும் அது ஆண்டவனின் பெயரால் நிறைவேற்றப்பட்டது.

கலை வடிவங்களான கோவில்கள் மட்டுமின்றி, அந்தக் கோவில்களின் பெயரிலான குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பெரிய அளவிலான நீர்மேலாண்மைக்குத் துணை நின்றன. வறட்சிக் காலங்களிலும் விவசாயம் பாதிக்காதபடி பாதுகாத்தன. நிலத்தடி நீர் மேம்பட்டிருந்தது. காலப்போக்கில் ஆட்சியாளர் கள் கோவில்களின் புனிதங்களைப் பாதுகாப் பதற்காக சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்திய நிலையில், நீர்நிலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு களைக் கவனிக்காதது மட்டுமின்றி, ஆக்கிர மிப்பு செய்யவும் தொடங்கினர். பக்தர்களும்கூட கோவிலுக்கு காணிக்கை செலுத்திவிட்டு, அதன் பக்கத்தில் உள்ள வறண்ட நீர்நிலையை கழிப்பிடமாக மாற்றிய கொடுமைகளும் நடந்தன. இப்போதும் தொடர்கின்றன. ஆன்மிக அரசியலோ பகுத்தறிவு அரசியலோ எதுவாக இருந்தாலும் ஆட்சி நிர்வாகத்திற்கு வந்தால் தன் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் கவனிக்கும் திறமைதான் முக்கியமானது. ஓட்டு வாங்குவதற்கு ஆன்மிகத்தை திறமையாகப் பயன்படுத்தலாம் என அரசியல் செய்தால், அது சரியா-தவறா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்