பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
"கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது' என்று திட்டவட்டமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது சரியா?
சரிதான்.. கல்விக்கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தவர்கள் என்ன கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளா? கடனை ரத்து செய்வதற்கும், வட்டியைக் குறைப்பதற்கும்!
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முறையாக முடிந்து, சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், தீர்ப்பு தாமதப்படுத்தப்பட்டால் அது மறுக்கப்பட்ட நீதியாகிவிடுமே?
மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் என்ன, அதன் காரணமாக, ராதாபுரத்தில் வெற்றி பெற்றவர் யார் என்பது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் இன்பதுரைக்கும் தெரியும். மறுவாக்கு எண்ணிக்கைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தி.மு.க.வின் அப்பாவுக்கும் தெரியும். வாக்கு எண்ணிக்கையில் உடனிருந்தோருக்கும் அதன் காரணமாக அவர்களின் கட்சித் தலைமைகளுக்கும் தெரியும். இவர்கள் எல்லாருக்கும் தெரிந்த நிலவரம், ஊடகங்களுக்கும் தெரியும். அவை கோடிட்டுக் காட்டிய செய்திகள் மூலம் பொது மக்களுக்கும் கிட்டத்தட்ட தெரியும். ஆனாலும், சட் டம் தன் கடமையை நிதான மாக செய்துகொண்டிருக் கிறது. அநேகமாக, சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் பாக நீதிமன்றம் நிச்சயம் முடிவை அறிவித்துவிடும் என நம்புவோமாக.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
"ஏழைகளுக்கான கட்சி எங்கள் கட்சி' என்று கூறும் அ.தி.மு.க., டாஸ்மாக் கொண்டு வந்ததை எவ்விதத்தில் சேர்க்கும்?
எம்.ஜி.ஆர் என்ற ஏழை, ஜெயலலிதா என்ற பரம்பரை ஏழை, சசிகலா என்ற ஏழை, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்ற ஏழைகள் இவர்கள் தலைமையிலான அ.தி.மு.க., ஃபாரின் சரக்கு வாங்க முடியாத ஏழைகளின் நலனையும் உரிமையையும் கருதி உருவாக்கியதுதான் டாஸ்மாக்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை' என ரஜினியும், "போட்டியில்லை' என கமலும் முடிவெடுத்திருப்பது சரியா?
சின்னச் சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, ஹீரோவான அவர்கள் இருவரும் அதன்பிறகு மீண்டும் சிறுவேடங்களுக்கு திரும்ப வில்லை. அரசியலையும் சினிமாவாகவே நினைப்பதால் முதல்வர் பதவிக்கு மட்டுமே போட்டி, மற்றவற்றைப் புறக்கணிக்கலாம் என நினைத்து விட்டார்கள் போலும். அரசியலில் மக்கள்தான் ஹீரோ என்பது முழு நேர அரசியலுக்கு வரும்போது அறிவார்கள்.
வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு
"உலகின் பாலியல் பலாத்கார தலைநகராக இந்தியா இருக்கிறது' என ராகுலின் தாக்குதல் எப்படி?
பா.ஜ.க. அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி அக்கட்சியின் பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டாலும், "ம்ஹந்ங் ண்ய் ஒய்க்ண்ஹ என்பது தஹல்ங் ண்ய் ஒய்க்ண்ஹ ஆகிவிட்டது' என்கிற ராகுல்காந்தியின் விமர்சனமும், பாஜ.க.விற்கு கனிமொழி அளித்த விளக்கமும் சாட்டையடி.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும், அப்போதுதான் அதன் பலம் தெரிய வரும்' என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளாரே?
கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பா.ஜ.க. குழுவினருடன் அ.தி.மு.க. தலைமைக்கழகம் சென்றாரே அதே பொன்.ராதாகிருஷ்ணன்தானே!
_______________
தமிழி
(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
நித்திலா, தேவதானப்பட்டி
தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது எந்த விதத்தில் சரி?
திராவிடம் வேறு, தமிழ் வேறு என இன்றைய அரசியல் கண்ணோட்டத்தில் முன் வைக்கப்படும் வாதத்திற்கு கவிஞர் மகுடேஸ்வரன் அளித்திருக்கும் விளக்கம் கவனத்திற்குரியது. "தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தான "ழ' என்ற ஒலிப்பு பிறமொழியினருக்கு கடினமாக இருக்கும். இந்த ழகரம் தமிழ்ச் சொற்களிலேயே தனக்கு மாற்றாக டகரத்தைக் கொண்டு வரும். நடுவில் உள்ளீடற்று இருக்கும் ஒரு பொருளே குழல் எனப்படுவது. இதில், "ழ' என்ற எழுத்து டகரத்தைப் பெற்றுக் கொள்ளும்போது "குடல்' என்றாகிவிடும். குடல் என்ற சொல்லின் பொருளும் அதுதான். அடுத்ததாக, வகரம் மகரம் ஆவதை நம் பேச்சு மொழியிலேய காணலாம். வானம், மானம் என்று சொல்லப்படுகிறது. "ழ' என்பது "ட' ஆகும். "ம' என்பது "வ' ஆகும். "செம்மை' என்பது "செவ்வை' என்றும், "மீசை' என்பது "வீசை' என்றும் அகராதி சுட்டிக்காட்டுகிறது. தமிழ் என்ற சொல்லில் உள்ள மி=வி எனவும், ழ=ட எனவும் ஆகும்போதும் "மிழ' இரண்டும் "விட' என்றாகிறது. "த' என்ற ஒலிப்பு பிறமொழியில் "த்ர' என்று ஆகும். பிறமொழியின் இயல்புகள் அவ்வாறு உள்ளன. "தேகம்' என்ற சொல் வடமொழியில் "திரேகம்' என்று ஆவது நல்ல எடுத்துக்காட்டு. இப்போது மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பார்த்தோமென்றால், தமிழ என்பது "த்ரவிட' என்றாகிறது. த்ராவிட என்பதை தற்பவமாக்கி (வடசொல் உச்சரிப்பு) திராவிட என்கிறோம். "தமிழ்' என்ற சொல்தான் "திராவிடம்' என்ற சொல்லின் வேர். "தமிழ்=தமிழம்=த்ரவிடம்=திராவிடம்' என விளக்குகிறார் கவிஞர் மகுடேஸ்வரன். இதனை அவர் இப்போது புதிதாக சொல்லவில்லை. தமிழின் முதல் மொழிநூலை இயற்றிய மாகறல் கார்த்திகேய முதலியார் அவர்களையும் கவிஞர் சுட்டிக்காட்டுகிறார். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்டோரும் தமிழ் எப்படி திராவிடம் என்றானது என்ற ஆய்வினை மேற் கொண்டு விளக்கியுள்ளனர். எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், தமிழ் என்பது வேர்ச்சொல், மூலமொழி. திராவிடம் என்பது தமிழையும் அதிலிருந்து கிளைத்த மொழிகள் பண்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.