அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
தன் கடை விளம்பரங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சினிமா ஹீரோவாக அவதாரம் எடுக்கிறாரே?
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் இருப்பது இயல்பானது. அதனை வெளிப்படுத்தும் வாய்ப்பு வரும்போது அவரவரும் வெளிப்படுத்துகிறார்கள். வசதி இருந்தால், சினிமா எடுத்து ஹீரோவாக நடிக்கலாம். வசதி குறைவாக இருந்தால், "டிக்டாக்' போன்ற செயலிகள் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் தனது கடை விளம் பரத்திலேயே பல நாயகிகளுடன் இணைந்து கலக்கியவர். வசதி இருப்பதால் சினிமா ஹீரோவாகியிருக்கிறார். திரைக்கலை என்பது மக்களின் ரசனையைப் பொறுத்து வெற்றி பெறக்கூடியது. பல அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் திடீரென ஹீரோவாகி யிருக்கிறார்கள். ஆனால், மக்கள் பெரிதாக ஏற்கவில்லை. சரவணா ஸ்டோர்ஸுக்கு மக்கள் தரும் ஆதரவை, அதன் முதலாளி நடிக்கும் படத்திற்குத் தருகிறார்களா என்பது அதன் தரத்தைப் பொறுத்தது.
எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
உள்குத்து, உள்குத்து என்கிறார்களே அப்படின்னா?
எதிரிகள் தேவையின்றி உடனிருப்பவர் களே சைலன்ட்டாக அடிப்பதுதான் உள்குத்து. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறதே, அதன் முடிவுகள் வெளியாகும்போது "உள்குத்து' என்ன என்பது தெரியும்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
பொன்.மாணிக்கவேல்?
கடவுளரைக் காப்பாற்றிய காவல் அதிகாரியாக மக்களிடம் அறியப்பட்டிருப் பவர். தேர்தல் கமிஷன் என்பது சேஷனுக்குப் பிறகு எப்படி பரவலாக அறியப்பட்டதோ, அதுபோல சிலை கடத்தல் பிரிவு என்பது பொன்.மாணிக்கவேலின் அதிரடி நட வடிக்கைகளுக்குப் பிறகே பலருக்கும் தெரியவந்தது. ஆனால், இந்தப் பிரிவில் அவருக்கு முன்பே இருந்த திலகவதி, திரிபாதி உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல முக்கியமான சிலை கடத்தல்காரர்களை சர்வதேச அளவிலான தொடர்புடன் கைது செய்தார்கள் என்ற பின்னணியை மறந்து விடக்கூடாது. சஞ்சீவி அசோகன், சுபாஷ் கபூர் டீமை இவர்கள்தான் மடக்கினார்கள். அதன்பிறகு, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொன்.மாணிக்கவேல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில் சிங்கப்பூர் விஜயகுமார் போன்ற தனிப் பட்ட கலைஆர்வலர்களின் பங்களிப்பும் முக்கியமானது. கூட்டு முயற்சிக்கு ஒருவர் கழுத்தில் மட்டும் பதக்கம் அணிவிப்பதும், அதைப் பார்த்து கைதட்டுவதும் நமக்குப் பழக்கமாகிவிட்டது.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
தேர்தல் அறிவிப்புக்கும் ஆளுங் கட்சிக்கும் தொடர்பு இருக்கிறதா?
"மாப்பிள்ளை அவருதான்... சட்டை என்னோடது' என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையத்திற்கும் ஆளுந்தரப்புக்கும் தொடர்பு இருக்கிறது.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை
மதச்சார்பற்ற கட்சியும் மதவாத கட்சியும் கூட்டணி அமைத்து நிலையான நல்லாட்சி தர முடியுமா?
கனவுகள் + கற்பனைகள் = ஜனநாயகம்
எபினேசர், நாகர்கோவில்
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கொடூரன்களுக்கு மாவலி தரும் தண்டனை என்ன?
விரைவாகவும் நேர்மையாகவும் விசாரணை நடைபெற்று, "நறுக்'கென்று தண்டனை தரப்படவேண்டும்.
_____________
தமிழி
(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
மல்லிகா அன்பழகன், சென்னை-78
தொல்லியல் மேடுகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? அதனை எவ்வளவு ஆழத்துக்குத் தோண்டி, பழங்காலக் கணக்கை கண்டுபிடிக் கிறார்கள்?
ஆற்றங்கரை, கடலோரம், பழமையான கல்வெட்டுகள், இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் இடங்கள் இவற்றில்தான் தொல்லியல் மேடுகளைக் கண்டடைகிறார் கள். ஏற்கனவே ஒரு கட்டட அமைப்பு இருந்து, அது சிதைந்து, புதையுண்டு போய் பல காலம் கழிந்தபிறகு, அந்த மேட்டின் மீது புதிதாக ஒரு குடிசையோ கட்டடமோ அமைக்கப்படுவது உண்டு. காலப்போக்கில் அதுவும் சிதைந்து போய், மேடு இன்னும் சற்று உயர்ந்திருக்கும். இதுபோன்ற மேடுகள் நிறைந்திருக்கும் பகுதிகளைக் காணும் தொல்லியல் ஆய்வாளர்கள், அங்கு பழங்கால வரலாற்றுக்கான சான்றுகள் இருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள். அதனடிப்படையில், ஆய்வுக்குரிய தொல்லியல் மேடுகள் கண்டடையப்படுகின்றன. அகழாய்வுக்குரிய தொல்லியல் மேடுகளில் துளை யிடுவதுபோல சிறிய அளவில், தோண்டியெடுத்து ஆய்வு செய்வதுதான் முதல் கட்டமாகும். அப்படி சாம்பிளுக்காகத் தோண்டப்படும்போது ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்கும் பொருட்களிலிருந்து அந்த இடம் இரும்புக்காலத்தைச் சேர்ந்ததா, கற்காலத்தைச் சார்ந்ததா, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்ததா எனக் கண்டுபிடிக் கிறார்கள். ஆழமாகத் தோண்டத் தோண்ட ஒவ்வொரு காலத்திற்கான சான்றுகளும் கிடைக்கக்கூடும். ஒரு கட்டத்திற்குப்பின், மண் மட்டுமே வருகிறதென்றால், அதற்குக் கீழ் எதுவும் இருப்பதில்லை என அர்த்தம். அந்த மண்ணை ஸ்ண்ழ்ஞ்ண்ய் ள்ர்ண்ப் என்கிறார்கள் ஆய்வாளர் கள். கீழடியைப் பொறுத்தவரை அங்கு கிடைத்த பொருட் கள் சங்காலத்தைச் சேர்ந்தவை என்பதும், கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தவை என்பதும் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அதேநேரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் அவை கற்காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரிய வந்தி ருக்கிறது. அங்கே நிறைய கற்கருவிகள் கிடைத்துள்ளன. பட்டரைபெரும்புதூர் என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பொருட்களை சேமித்து வைக்கும் பெரிய மண் கலம் ஒன்று கண்டறியப்பட்டது. அநேகமாக, துறைமுகத் தில் கப்பலில் பொருட்களை ஏற்றுவதற்கு முன்பு அவற்றைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான கலமாக அது இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது பழந்தமிழர் காலத்தை மேலும் பின்னோக்கி கொண்டு செல்கிறது.