அழ.கருப்பய்யா, மன்னார்குடி
மகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை யார் ஏமாளி, யார் கோமாளி, யார் திறமைசாலி?
அதிகாரத்தைப் பெறுவதற் குப் பெயர்தான் திறமை என்றால் இப்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேதான் திறமைசாலி. அந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமு மாக தாவியவர்களும், அப்படித் தாவச் செய்தவர்களும் கோமாளி கள். தேர்தல் ஜனநாயகத்தில் எப்போதுமே மக்கள்தான் ஏமாளிகள்.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
அரசு, பொங்கல் தொகுப்பு வழங்காவிட்டால் தமிழக மக்கள் பொங்கல் கொண்டாட மாட் டார்களா?
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் பொங்கல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் நோக்கம் சரியானது, தெளிவானது. அதே நேரத்தில், அரசு இலவசமாகத் தருகிற தென்றால், இருப்போர் இல்லா தோர் என்ற பாகுபாடின்றி எல் லோரும் போட்டி போட்டு வாங்குவ தால், தேர்தல் நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்று ஓட்டுகளை அறுவடை செய்ய முடியும் என்ற கணக்கில் பொங்கல் தொகுப்பு, வெள்ள நிவாரணம் எல்லாமும் அரசியலாகிவிட்டது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பற்றி ஒரு பட விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், "ஆண்கள் சின்னவீடு வைத்திருந்தாலும் பெண்கள் எச்ச ரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது' என்று பேசியது சர்ச்சையாகி உள்ளதே?
தன்னைக் காதலித்து கர்ப்பமாக்கிய பின் ஏமாற்ற நினைத்த காதலனை நீதிமன்றத்தில் நிறுத்திய நாயகியின் கதைதான் "விதி' என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படம். அதில், கௌரவத் தோற்றத்தில் இயக்குந ராகவும் நடிகராகவும் பாக்யராஜ் நடித்திருப் பார். படத்தில் ஒரு ஷூட்டிங் காட்சி முடிந்ததும் பெண் பத்திரிகையாளருக்கு பேட்டி அளிக் கும் பாக்யராஜ், அந்தக் கதாநாயகியின் துணிச்சலைப் பாராட்டிவிட்டு இப்படிச் சொல் வார்... "கட்டிப் பிடிக்கும்போது ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கட்டிப் பிடிக்கிறார்கள். ஆனால், கற்பு என்கிற கட்டுப்பாடு வரும்போது, ஆண் தப்பித்துவிடுகிறான். பெண் மட்டும்தான் மாட்டிக்கொள்கிறாள். எப்போது இந்தக் கட்டுப்பாட்டுக்குள் ஆண் வருகிறானோ அப்போதுதான் இதுபோன்ற சமாச்சாரங்கள் முடிவுக்கு வரும்' என்பார். இயற்கை படைத்த பாலின மாறுபாட்டை, தங்களின் இச்சைக்கு சாதகமாக்கிக்கொள்ளும் ஆண்களின் மன நிலையை தனக்குரிய பாணியில் சினிமாவில் அன்று தோலுரித்த பாக்யராஜ், இன்று பாலின விவகாரத்தில் சிக்கிக்கொண்டதுதான், விதியோ!
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
இன்று அனைவருக்கும் மன அழுத்தம் என்ற நோய் ஏற்படக் காரணமும், அதற்கான தீர்வும் என்ன?
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாசகர் பி.மணி, "அலைபேசியிலேயே மணிக்கணக்கில் மனதை அலைபாயவிடும் எண்ணற்ற மக்களைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்' எனக் கேட்டிருக்கிறார். "எந்த ஒன்றிலும், அதன் தேவையைத் தாண்டி, நேரம் காலம் பார்க்காமல் மூழ்கிவிடுவது மன அழுத்தத்திற்கான மூல காரணம்' என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் சொல்லும் முதல் தீர்வு, "எதற்கும் அடிமை யாகிவிடாதே' என்பதுதான்.
பிரதீபா ஈஸ்வரன், தேவகோட்டை
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது வாக்காளர்களை முட் டாளாக்குகிறதா?
ஏதோ, தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் எல்லாம் வாக்காளர்களை அறிவாளிகளாக்கியதுபோல கேட் கிறீர்களே!
______________
தமிழி
(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
கீழடி, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற ஊர்கள் அகழாய்வு ஆராய்ச்சிக்கு எவ்வாறு தேர்வு செய்யப்பட்டன?
கிணறு தோண்டும்போது மண்ணுக்குள்ளிருந்து கிடைத்த பொருட்களைப் பார்த்த பள்ளி ஆசிரியர் ஒருவரின் ஆர்வமும் அக்கறையுமே கீழடி அகழ்வாராய்ச்சிக் கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்த புதுச்சேரிப் பகுதியில் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டுப் பேராசிரியர் ழுவோ துய்ப்ரேய் உலவச் சென்றபோது கிடைத்த அரிய வகை கற்களும் மணிகளும் அரிக்கமேடு ஆராய்ச்சிக்கு அடித்தளமாயின. ஈரோடு மாவட்டம் கொடுமணல் என்பது சங்கப்பாடல்களில் "கொடுமணம்' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, அங்கே தொன்ம வரலாற்றுக்கான சான்றுகள் இருக்கும் என்ற அடிப்படையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக, ஆற்றங்கரையில் நாகரிகம் சிறப்பாக இருந்தது என்பதால், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை ஆராய்வதற்காக மேற் கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு தமிழர்களின் தொன்மைச் சான்றுகளை மிக அதிகளவில் வெளிப்படுத்தியது. தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள எலும்புக்கூடுகள், உலோகங்கள், சுடுமண் கலங்கள் உள்ளிட்டவை பலவும் தமிழர் நாகரிகம் தொடர்பான புதிய சான்றுகளைத் தரக்கூடியவை. ஆனால் அதன் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியான அழகன்குளம் என்பது பழந்தமிழர்களின் துறைமுக நகரமாக இருந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் தொடங் கப்பட்ட ஆய்வுகள் பல சான்றுகளை வெளிப்படுத்தி யுள்ளன. மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழகத்தில் அவரவர்களுக்குரிய தலைநகரத்துடன், துறைமுகங்களும் இருந்தன. எனவே காவிரி, வைகை, பொருநை ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளிலும், முசிறி (கேரளாவில் உள்ள பட்டணம்), கொற்கை, பூம்புகார் ஆகிய இடங்களிலும் வரலாற்றுப் பின்னணியில் நடைபெற்ற, நடைபெறவேண்டிய ஆய்வுகள் பழந்தமிழர் நாகரிகம் குறித்த புதிய உண்மைகளைக் கொண்டு வரக்கூடியவை. அகழாய்வு செய்யப்படும் ஒவ்வொரு இடமும் சங்ககாலப் பாடல்கள் தொடங்கி, அண்மைக்கால கிணறு தோண்டுதல் வரையிலான பலவித சான்றுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.