லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

வெற்றிடம் -அதிசயம் இரண்டிற்கும் இடையில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா?

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? "சிதம்பர ரகசியம்' என்ன என்று கேட்டால், அங்குள்ள அர்ச்சகர்கள் ஒரு திரை மறைப்பை விலக்குவார்கள். அங்கே வெற்றிடம் காணப்படும். அதுதான் "ரகசியம்' என்பார்கள். "அதிசயம்' கண்ட நிறைவுடன் பக்தர்கள் திரும்புவார்கள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

Advertisment

டி.என். சேஷனைப் போல துணிச்சலான தலைமைத் தேர்தல் ஆணையர் அதன்பிறகு உருவாகவில்லையே?

ஒரு சேஷனைப் பார்த்ததும் அரசியல்வாதிகள் பதறிவிட்டனர். சேஷனே தனது பணி ஓய்வுக்குப்பின் அரசியல் வலையில் சிக்கவேண்டியதாயிற்று. அதுமட்டுமின்றி, சேஷனுக்குப் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையருடன் கூடுதலாக இரண்டு ஆணையர்களை நியமிக்கும் வழக்கம் கொண்டு வரப்பட்டது. ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் தேர்தல் ஆணையப் பதவி கிடைக்கும் என்ற நிலை உருவானது. ஆட்சியாளர்கள் விருப்பம்போல தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துவிட்டன.

mavalianswers

Advertisment

மணி, விருதுநகர்

வெறும் பதவிக்காக பா.ஜ.க. எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடிக்கும் சிவசேனாவை காங்கிரஸ், தேசியவாத காங்கிர சுடன் தி.மு.க.வும் நம்புவது அறிவுடைமையா?

காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தங்கள் மாநில அரசியலைக் கருதி சிவசேனாவின் தன்மை அறிந்தும் கூட்டணி கண்டுள்ளன. தி.மு.கவைப் பொறுத்தவரை அது மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கட்சி. ஒருகாலத்தில், மும்பையில் தமிழர்கள் மீது பால்தாக்கரேவின் சிவசேனா தாக்குதல் நடத்தியபோது, "தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், “"பிற மாநிலங் களில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால், தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத்தவரின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்' என்ற எச்சரிக்கை கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். தமிழர் மீதான தாக்குதல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. பின்னர், மும்பைக்கு கலைஞர் சென்றபோது, அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து சந்தித்தார் பால்தாக்கரே.

எபினேசர், நாகர்கோவில்

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.5 சதவீதமாக குறைந்துவிட்டதே?

இந்தியப் பொருளாதாரம் என்பது அம்பானி, அதானிகளை மட்டுமல்ல, அன்றாடங் காய்ச்சிகளையும் மனதில் வைத்து செயல்படு கின்ற முறையைக் கொண்டது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற முறையில், ஒரே இரவில் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கி யதில் தொடங்கி பல அணுகுமுறைகள் தவறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. அதை ஏற்க மனதின்றி இப்போதும் மோடி தொடங்கி நிர்மலா சீதாராமன் வரை சப்பைக்கட்டு கட்டுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

பி.மணி -குப்பம், ஆந்திரா

அ.தி.மு.க. அமைச்சர் பாஸ்கரனும் தே.மு.தி.க. பிரேமலதாவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது கூட்டணிக்குள் தர்மசங்க டத்தை ஏற்படுத்தாதா?

எதிர்பார்ப்புகளுக்காக மட்டுமே அமை கின்ற கூட்டணியில் தர்மம் இருந்தால்தானே தர்மசங்கடம் ஏற்படும்!

____________

தமிழி

(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

மல்லிகா அன்பழகன், சென்னை

தொல்லியல் ஆய்வுகள் மூலமாக பழைய வரலாற்றை அறிந்துகொள்வதால், எதிர்காலத் தலைமுறைக்கு என்ன பயன்?

நேற்றைய செய்தி இன்றைய வரலாறு. இன்றைய ஆய்வு நாளைய ஆவணம். வேர்களின் ஆழம் தெரியாமல் கிளைகளில் ஏறுவது சரியான அணுகுமுறை அல்ல. அதனால், பழந்தமிழர் நாகரிகம் பற்றிய பார்வை எதிர்காலத் தலைமுறைக்கு அவசியமாகிறது. "கீழடியில் முதல் மூன்று கட்ட ஆய்வுகளை நடத்திய மத்திய தொல்லியல்துறை, அதன் உண்மைத் தன்மையை வெயிடுவதற்குத் தயங்கியது. தொடர்ந்து ஆய்வுகளை நடத்திடாமல் மூடி மறைக்க முயன்றது. 110 ஏக்கர் பரப்பளவு ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டும், 50 சென்ட் அளவிலேயே ஆய்வு நடந்தது' என்கிறார் ‘"தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை...'’என்ற புத்தகத்தை எழுதிய சி.இளங்கோ என்பவர். "இந்திய தொல்லியல் நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் கிடைத்த 7000 பொருட்களில் இந்துத்வா தன்மைகொண்டவை இல்லாத காரணத்தால் அவற்றை வெளியிட, மத்திய பா.ஜ.க. அரசின்கீழ் இயங்கும் தொல்லியல் துறைக்கு ஆர்வமில்லை' என்றும் அவர் குறிப்பிடுகிறார். "தமிழர் பண்பாடு தொடர்பான அகழாய்வை பாரதப் பண்பாடு' என்று முன்னாள் பா.ஜ.க.காரரான மாநில அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்ததும் கவனத்திற்குரியது. இந்தப் பின்னணிகளையெல்லாம் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ளும் போதுதான், எதிர்கால முயற்சிகளுக்கான முன்னெச்சரிக்கைகளைப் பெறமுடியும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்கிறார்கள் என அண்மையில் ஓர் ஆய்வு வெளியானது. சங்க காலத்திலேயே தமிழக மகளிர் வீட்டு வேலைகள் மட்டுமின்றி, கடைகளைப் பராமரித்தல், வணிகம் செய்தல், வண்டிகளை ஓட்டிச் செல்லுதல், இரவு நேரத்திலும் வணிகம் முடித்து துணிவுடன் திரும்பி வருதல் என தனித்தன்மையுடன் விளங்கியிருப்பதை சங்கப் பாடல்களும் பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களும் காட்டுகின்றன. இன்றைக்கு மென்பொருள் நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றுகிறார்கள். வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். இவையெல்லாம் நம் மரபார்ந்த பண்பாடாக விளங்கியிருப்பதையும், தமிழர் பண்பாடு என்பது தென்மாநிலங்கள் மட்டுமின்றி, இன்றைய இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவியிருந்தது என்பதையும் அகழாய்வுகள் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.