அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
காவி என்பது நிறமா? மதமா?
மதச்சாயத்தை பூசுவதற்கான நிறமாக மாற்றப்பட்டிருக்கிறது.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி எல்லா திட்டங்களையும் காணொலி காட்சி மூலமாகவே திறந்து வைக்கிறாரே? என்னதான் பிரச்சினை?
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், உடல்நலம் -நேரம் -பயணதூரம் இவற்றைக் கணக்கில்கொண்டு காணொலி மூலம் திட்டங்களைத் தொடங்கி வைப்பது தவறல்ல. ஆனால், இங்கே மக்களை சந்திப்பதில் ஆட்சியாளர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பலிகள், கஜா புயல் பாதிப்புகள் உள்ளிட்ட தமிழகமே பதற்றமான நேரங்களில்கூட, முதலமைச்சர் பழனிச்சாமி உடனடியாக அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தார். மக்களை எதிர்கொள்ளத் தயங்கினார். மக்களுக்கான ஆட்சி இங்கு நடைபெறவில்லை என்பதுதான் பிரச்சினை.
பிரதீபாஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
சமீபத்தில் வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு?
இரு கைகள் இல்லாத கேரள மாற்றுத்திறனாளி இளைஞர் தன் பெற்றோருடன் வந்து அம்மாநில முதல்வர் பினரயி விஜயனை சந்தித்ததும், அப்போது கைகுலுக்குவதற்கு பதில், அந்த இளைஞரின் கால்களைப் பிடித்து முதல்வர் குலுக்கியதும், முதல்வருடன் அந்த இளைஞர் செல்போன் பட்டனை கால்களால் அமுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டதும் அற்புதமான தருணங்களாகும். "என் அம்மாவும் அப்பாவும்தான் என் இரு கைகள்' என்று அந்த இளைஞர் சொல்லியிருப்பது நெகிழ வைத்தது.
பி.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
"தமிழகத்தில் வன்னியர்கள் ஒற்றுமை அடைந்தால் முதல்வர் பதவியைப் பிடித்து விடலாம்' என்ற அன்புமணி ராமதாஸின் ஆசை பற்றி?
அவர் சொல்லுகின்ற ஒற்றுமை என்பது, பா.ம.க. மீது முழுமையாக நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என்பதைத்தான். அது ஏன் இத்தனை ஆண்டுகளாகியும் நடக்கவில்லை என்பதற்கு விடை தேடினால், ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கலாம்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
"இந்தி மொழியைக் கற்கக்கூடாது என்பது தி.மு.க.வின் நிலைப்பாடு அல்ல... இந்தி திணிப்பு கூடாதென்பதுதான் தி.மு.க.வின் நிலை' என எம்.பி. கனிமொழி கூறி உள்ளாரே?
இந்தி மட்டுமல்ல, எந்த மொழியையும் கற்கக்கூடாது என யாரும் தடுத்திடக் கூடாது... அதே நேரத்தில் ஒரு மொழியை எல்லோரும் கற்றுக்கொண்டாக வேண்டும் என கட்டாய மாக்குவதுதான், இந்தியா போன்ற பலமொழி கள் பேசும் மாநிலங்களில் பிற மொழிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. கனிமொழி சொல்வதைத்தான் தி.மு.க. மட்டுமல்ல, தமிழறி ஞர்களும் காலம் காலமாக சொல்லிவருகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் காதில் வாங்குவதே இல்லை.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
இந்த மழை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
பசி நேர உணவுபோலத்தான் பருவத்துக் கேற்ற மழையும் அளவாக இருத்தல் வேண்டும். மிகுதியான உணவு தானியத்தைச் சேமித்து வைப்பது போல தண்ணீரை சேமிக்க நீர்நிலைகள் இன்னும் இன்னும் வேண்டும்.
தமிழி
(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
தமிழக கல்வெட்டுகளில் மிகுதியாக "பிராமி' எழுத்துகள் உள்ளனவே, இந்த "பிராமி' என்பது யார் பேசிய மொழி? எப்படி இது தமிழகத்தை ஆக்கிரமித்தது?
"பிராமி' என்பது மொழியை எழுதுவதற்கு பயன்படும் வடிவமாகும். இந்தியாவில் அசோகர் காலத்து கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த எழுத்துகளை ஆங்கிலேயர்களும் பிறநாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்தனர். பவுத்த நெறியில் ஆட்சி செய்தவர் அசோகர். அந்த பவுத்தத்தின் மொழி "பாலி', "பிராகிருதம்' ஆகியவையாகும். அந்த மொழிகளுக்கான எழுத்து வடிவமாக கல்வெட்டுகளில் பதித்திருந்ததை "பிராமி' என ஆய்வாளர்கள் பெயரிட்டனர். இந்தப் பெயர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருப்பதையும் ஆய்வுகளில் கண்டுபிடித்தனர். "பிராமி' மட்டுமல்ல, இன்னும் பல வகையான எழுத்து வடிவங்கள் குறித்து பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக கல்வெட்டுகளில் உள்ள எழுத்து வடிவங்கள் "தமிழ் பிராமி' எனப்பட்டன. அதாவது, தமிழில் நாம் உச்சரிக்கக்கூடிய சொற்களுக்கான எழுத்து வடிவங்கள். வடநாட்டு மொழிகளான "பிராகிருதம்', "சமஸ்கிருதம்' ஆகியவற்றிலும் தமிழ்நாட்டில் கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக, பல்லவ மன்னர்கள் காலத்தில் வடமொழியும் தமிழும் கொண்ட கல்வெட்டுகளைக் காண முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிந்துசமவெளி நாகரிகம் தேய்வடைந்த பிறகு ஆரியர் தாக்கம் அதிகமாகி, வேதங்களைப் பின்பற்றும் அரசாட்சிகள் அமைந்தபோது, தமிழ்நாடும் அதற்குத் தப்பவில்லை. அரசர்கள் வட மொழிகளை தங்களின் ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தாலும், மக்கள் தங்கள் தாய்மொழியான தமிழையே பேசினர். காலந்தோறும் தமிழ்ப் புலவர்கள் வடமொழிப் பண்பாட்டை எதிர்த்து இலக்கியங்களைப் படைத்தனர். கடவுளைப் போற்றிப் பாடும் சமய இலக்கியங்களிலும் நம் புலவர்கள் வடமொழிக்கு எதிராக தமிழையே முன்னிறுத்தி கடவுளரை வணங்கினர். பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து, பிறமொழிக் கல்வெட்டுகள் அருகி, தமிழ்க் கல்வெட்டுகளே இடம்பிடிக்கத் தொடங்கின. அதில் உள்ள எழுத்துகள், ஏறத்தாழ தற்போதைய எழுத்துகளுக்கு முந்தைய நிலையை உடையனவாகும். அதற்கு முன்பு இருந்த (கீழடியில் பானை ஓடுகளில் கிடைத்தது போன்ற) தமிழ் எழுத்து முறையிலான கல்வெட்டுகளில் உள்ள எழுத்து வடிவங்களை "தமிழி' என்கிறார்கள். "பிராமி' என்ற சொல்லைத் தவிர்த்து, "தமிழி' என்பதே சரியானதாக இருக்கும்.