நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம், மோடி அரசின் குருகுலக் கல்வித்திட்டம் இரண்டும் ஒன்றா, வெவ்வேறா?
அதுபோல இது எனத் தெரியக்கூடாது என்பதற்காக கொஞ்சம் கொஞ்சம் மாற்றியமைக்கப்பட்ட அதே சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்வியின் 2.0 வெர்ஷன்.
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு பாரபட்சமின்றி எல்லாத் தகவல்களையும் அவர் கவனத்திற்கு கொண்டு சென்றது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசில், உளவுத்துறை தகவல்கள் சரியாக சேகரிக்கப்பட்டு, பாரபட்சமின்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறதா?
எம்.ஜி.ஆர். ஆட்சியில் உளவுத்துறை தகவல்கள் கையாளப்பட்ட முறைகளை அவரது ஆட்சிக்காலத்தில் டி.ஜி.பி.யாக இருந்த மோகன்தாஸ் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். எடப்பாடி ஆட்சியில் உளவுத்துறை தகவல் சேகரிப்பதிலும் பாரபட்சம்; அதன் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம். அன்றும் இன்றும் உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலான காவல்துறையின் நடவடிக்கைகளால் பாரபட்சமின்றிப் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்!
திராதி, துடியலூர், கோவை
"குடும்ப அரசியல் என்பது பாவம் கிடையாது' என்கிறாரே திருநாவுக்கரசர்?
அவருடைய ஆரம்பகால அரசியல் செயல்பாடு எம்.ஜி.ஆர். கால அ.தி.மு.க.வில் இருந்தது. அ.தி.மு.க. என்ற கட்சி தொடங்கப்பட்டதிலிருந்தே, கலைஞரின் குடும்ப அரசியல் எதிர்ப்பு என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. அப்போது அந்த எதிர்ப்பு மனநிலையில் இருந்த திருநாவுக்கரசர், இப்போது நேரு குடும்பத்தால் வழிநடத்தப்படும் காங்கிரசின் மாநிலத் தலைவராக இருக்கிறார். அத்துடன், அவரது குடும்ப வாரிசுகளும் அரசியலில் இருக்கிறார்கள். எனவே, அவர் பார்வையில் அது லாபம்தானே தவிர, பாவமல்ல.
உமரி பொ.கணேசன், மும்பை-37
"மாதிரி சட்டமன்றத்தைக் கைவிட்டு, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பது' என மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தது தடுமாற்றமா, ராஜதந்திரமா?
ஜனநாயகக் கடமை! அதனைத் தடுமாற்றமின்றி ராஜதந்திரத்துடன் செய்திருக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரத்தில், போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட ஆள்மாறாட்ட அக்கிரமங்களை பேரவையில் பேச அனுமதியின்றி வெளிநடப்புக்குப் பின் ஊடகங்களிடம் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இதுபோல தொடர்ச்சியாக செயல்பட்டு, ஆளுந்தரப்பின் ஜனநாயக விரோதப் போக்கை அம்பலப்படுத்தி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
60 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகள் குஜராத்திலிருந்து தஞ்சைக்கு மீட்டு வந்திருப்பது வெற்றியா?
கடல் கடந்து போர் தொடுத்து, பல வெற்றிகளைப் பெற்றவர் மாமன்னன் ராஜராஜன். அவரது சிலை கடத்தப்பட்ட நிலையில், அதனை உறுதிப்படுத்தி மீட்டு வர, பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு ராஜராஜன் மீட்கப்பட்டிருக்கிறார். மற்ற மாமன்னர்களுக்கும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களுக்கும் சொந்த ஊர் திரும்ப எப்போது நல்ல நாள் வருமோ!
க.அருச்சுனன், செங்கல்பட்டு
சென்ற ஆண்டு நடந்த வருமான வரித்துறை ரெய்டின் முடிவுகள் என்னவாயின?
முடிவின்றி முடிந்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டும் வழக்கம்போல வருமானம் கொழிக்கிறதாம்!
ஆன்மிக அரசியல்
நித்திலா, தேவதானப்பட்டி
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள பிரம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையே?
இந்து மதத்தில் பிரம்மனுக்கு தனிக் கோவில் இருப்பதே அரிதானது. வானுக்கும் பூமிக்குமாக நின்ற சிவனுடைய முடியையும் அடியையும் தொடுவதற்கான பந்தயத்தில், வராக(பன்றி) உருவெடுத்து, மண்ணைத் தோண்டியபடி சிவனின் அடியைத் தொட முயற்சித்தார் விஷ்ணு. அன்னப்பறவை உருவெடுத்த பிரம்மன், உயரப் பறந்து சிவனின் முடியைத் தொட நினைத்தார். முடியவில்லை. ஆனாலும், தொட்டுவிட்டேன் எனப் பொய் சொன்னார். அதன் காரணமாக, அவர் வழிபாட்டுக்குரியவர் என்கிற தகுதியை இழந்ததாக சிவன் சாபமிட்டார். அதனால் பிரம்மனுக்கு தனிக் கோவில் பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அங்கே நாட்டின் முதல் குடிமகனே அனுமதிக்கப்படுவதில்லை.
அரசமைப்புச் சட்டத்தைவிட வருணாசிரம தர்மத்தையே ஆன்மிக அரசியல் முன்னிலைப்படுத்துகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் அவர் அனுமதிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தன்னுடைய மனைவியின் முழங்கால் வலி காரணமாக கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே வழிபாடு செய்ததாக குடியரசுத் தலைவர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் துணை பிரதமராகவும் ராணுவ அமைச்சராகவும் இருந்த ஜெகஜீவன்ராம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். உத்தரபிரதேசத்தில் சம்பூர்னானந்த் என்கிற உயர்சாதிக்காரரின் சிலையை ஜெகஜீவன்ராம் திறந்துவைத்தார். அவர் திறந்ததால், சிலை தீட்டாகிவிட்டது என்று சொல்லி, கங்கை நீரால் அபிஷேகம் செய்து, தீட்டைப் போக்கிய நிகழ்வு, வரலாற்றில் கறை படிந்த பக்கமாக உள்ளது. அது வெவ்வேறு வடிவங்களில் இப்போதும் தொடர்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06-12/mavalianswers-t.jpg)