லட்சுமிதாரா, வேலூர்(நாமக்கல்)
சட்டம் ஒரு கண் ணுக்கு வெண்ணெய்யும், மறு கண்ணுக்கு சுண் ணாம்பும் போடுகிறதே?
சட்டம் மட்டுமா? ஆட்சியில் இருப்பவர் களும்தான்! சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த நம்பிக்கையைக் கடந்து, அங்கே பெண்கள் செல்வதற்கு அனுமதி அளித்து, காலத்திற்கேற்ற மாற்றத்தை செய்த சட்டம், ராமஜென்ம பூமி விவகாரத்தில் நம்பிக்கையை அடிப் படையாக வைத்து தீர்ப்பு வழங்கியிருக்கி றது. அயோத்தி தீர்ப்பை ஏற்க வேண்டும் என்கிற ஆட்சியாளர் களும் அவர்களின் கட்சியினரும் சபரிமலை தொடர்பான தீர்ப்பின் போது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாடறியும்.
நித்திலா, தேவதானப்பட்டி
துணிவு மிக்க தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனின் மறைவு?
சேஷனுக்கு முன்பும் பின்பும் பல பேர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந் திருக்கிறார்கள். ஆனால், தேர்தல் கமிஷனின் அதிகாரம் என்ன என்பதை மக்களுக்கு உணரவைத்து, அரசியல் தலைவர்களை அதிர வைத்த வர் டி.என்.சேஷன். இன்று கடைப்பிடிக்கப்படும் கறாரான தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட சேஷ னுக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தாஜ் ஓட்டலில் சூழ்ந்துகொண்டு ரகளை செய்தவர்கள் ஜெயலலிதா ஆட்சிக்காலத்து அ.தி.மு.க. நிர்வாகிகள். அந்த ஆட்சியில் நடைபெற்ற மயிலாப்பூர் இடைத்தேர்தலில், மக்கள் வாக்களித்த ஓட்டுச்சீட்டு மந்திரி வீட்டில் இருந்ததை நக்கீரன் அட்டைப்படமாக வெளியிட்டு, "சேஷனுக்கு சவால்' என்றே தலைப்பிட்டிருந்தது.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
தனது படங்களில் குரல் வழியாக மிகப்பெரிய பிரேக் கொடுத்த டி.எம்.சௌந்தரராஜ னுக்கு எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு கவுரவம் சேர்த்தார் பிற்காலத்தில்?
எம்.ஜி.ஆர். பாடல்கள் என மக்களிடம் பெயர் பெற்றிருந்தாலும், அவை தன்னுடைய குரலில் ஒலித் தவை என்ற பெருமிதத்தை பல நேரங் களில் டி.எம்.எஸ். வெளிப்படுத்தி யிருக்கிறார். கவுரவம் என்பதைக் கடந்து, எம்.ஜி.ஆரும் அவரிடம் அன்பு காட்டினார். எம்.ஜி.ஆர். காலம் முதல் எடப்பாடி காலம் வரை இன்றும் அ.தி.மு.க.வின் மேடைகளுக்கு கவுரவம் சேர்த்து வருகிறார் டி.எம்.எஸ்.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
வீட்டுச் சிறையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் கள் எப்போது விடுதலை செய்யப் படுவார்கள்?
ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை கச்சிதமாக காஷ்மீரில் நிறைவேற்றி விட்டோம் என பா.ஜ.க. அரசு திருப்தி அடையும்போது!
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
ஜெயில் சாப்பாட்டுக்காகவே ஈரோட்டில் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாரே? அவ்வளவு ருசியாக இருக்குமா?
ஒரு வேளை அந்த நபருக்கு வீட்டு சாப்பாடு என்பது ஜெயில் தண்டனை போல இருந்திருக்கலாம்.
வி.கார்மேகம், தேவ கோட்டை
ரஜினி பேசுவது நிர்பந்தத் தாலா அல்லது அரசியல் தந்திரமா?
அரசியல் ரீதியான நிர்பந்தங் களை தற்காலிகமாக ஒத்திவைக்கும் ராஜதந்திரம்.
____________
தமிழி
த.சத்தியநாராயணன், அயன்புரம்
உலகிலேயே தலைசிறந்த நாகரிகமாக தமிழர் நாகரிகம் போற்றப்படும் அளவுக்கான சான்றுகள் பூமிக்குள் புதைந்துள்ளனவா?
எகிப்து நாகரிகம், சுமேரியா நாகரிகம், மஞ்சளாற்று (சீன) நாகரிகம் போன்றவை உலகின் பழமையான நாகரிகங் களாகப் போற்றப்படுகின்றன. அந்த வரிசையில் சிந்துசமவெளி நாகரிகம் சிறப்பான நாகரிகமாக ஹரப்பா மொகஞ்சதாரோ அகழாய்வுகள் மூலம் அறியப்பட்டன. பல அடுக்குகளைக் கொண்டு வீடுகள், பெரிய அகலமான தெருக்கள், பொது மக்கள் பயன்பாட்டிற்கான பெரிய குளங்கள், இயற்கை மற்றும் ஆண்-பெண் அங்கங்கள் சார்ந்த வழிபாடு உள்ளிட்ட பலவும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன. கி.மு. 1500 என சிந்துசமவெளி நாகரிகத்தின் காலத்தை ஆய்வாளர்கள் கணித்தனர். அதாவது, 3500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம். இதில் தமிழர்களின் நாகரிகத்துடன் ஒத்துப் போகக்கூடிய பல அம்சங்கள் கிடைத்துள்ளன. சிந்துசமவெளி நாகரிகத்தின் சமகாலத்தில் இருந்த மற்றைய நாகரிகங்களைக் காட்டிலும், சிந்துவெளி நாகரிகத்தில் நீர்மேலாண்மை என்பது மிகச் சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக, வடிகால் வசதி என்பது சிந்துவெளி நாகரிகத்தின் தனித்தன்மையாக அமைந்திருந்தது. சுட்ட செங்கற்களால் கட்டடங்கள் கட்டும் பழக்கமும் இந்த நாகரிகத்தின் சிறப்பம்சமாகும். தற்போது கி.மு. 600 என கணிக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள நீர் மேலாண்மை தொடர்பு டைய சுடுமண் குழாய்கள், சிறு வாய்க்கால்கள் ஆகியவை சிந்துவெளி நாகரிக அகழாய்வில் கிடைத்தவற்றுடன் ஒப்பிடும்போது, பொதுத்தன்மைகள் பல காணப்படுகின்றன. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த கீறல் எழுத் துகளும் கூட, சிந்துவெளி எழுத்துகளுடன் ஒத்திருந்தன. தமிழர் கள் தனித்தன்மை கொண்ட நாகரிகத்தைக் கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கு இவையெல்லாம் ஆதாரங்களாகும். தற்போது கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஆய்வுகளில் மேலும் பல அரிய செய்திகள் கிடைக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "சோருஸ்' என்ற தொன்மையான இனத்தைச் சார்ந்தவர்கள் ஒருகாலத்தில் கங்கை பள்ளத்தாக்கை தங்கள் வசம் வைத்திருந்தனர் என்றும், காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகளால் இவர்கள் வெளியேற்றப்பட்டு நிலமற்றவர்கள் ஆனார்கள் என்றும் குறிப்பிடும் டாக்டர் அம்பேத்கர், "இந்த சோருஸ் மக்களை திராவிட, சேரர்களின் (தமிழ் மன்னர்) குருதித் தொடர்புடையவர்கள்' எனப் பதிவு செய்துள்ளார்.