எஸ்.எஸ்.வாசு, ரேஸ்கோர்ஸ், மதுரை-2

ஒரு தலைவன் எப் படியெல்லாம் இருக்கக் கூடாது?

தன்னை ஆதரிக்காதவர் களெல்லாம் மனிதர்களே இல்லை என வெறுக்கக் கூடாது. ஆதரிக்கும் கூட்டத் தினர் கைதட்டுகிறார்கள் என்பதற் காக பொய்களை மட்டுமே பேசக் கூடாது. களநிலவரம் தெரியாமல் கட்சியினரின் உழைப்பை உறிஞ்சக் கூடாது. கனவு உலகத்தில் உலாவியபடி வாக்குறுதிகளை வழங்கக்கூடாது.

ddd

Advertisment

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

இந்தியாவின் இரண்டாவது இந்திரா, பிரியங்கா என்று உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறாரே?

மராட்டியம், அரியானா மாநிலங்களில் முன்பைவிட கூடுதலாக காங்கிரஸ் வெற்றி பெற்றி ருப்பதற்கு காரணம், மக்கள் இப்போதும் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். இதனையும் மீறி, காங்கிரஸ் தள்ளாடுகிறது என்றால் அதற்கு தேசியத் தலைமை இல்லாதது மட்டுமல்ல, மாநில அளவிலான தலைமைகளும் படுபலவீனமாக இருப்பதுதான். தமிழ்நாட்டில் காமராஜர், ஆந்திராவில் சஞ்சீவரெட்டி, கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, தேவராஜ் அர்ஸ் என பல ஆளுமைகளை புறக்கணித்து மாநில காங்கிரஸை பலவீனமாக்கியவர் இந்திரா. அந்த இந்திராவாக இல்லாமல், மக்களிடம் நம்பிக்கையையும் மாநிலத் தலைமைகளையும் உருவாக்குபவராக பிரியங்கா இருந்தால் காங்கிரஸ் தேறும்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் சந்தித்துப் பேசியதால், யாருக்கு அதிக பலன்?

உடனடிப் பலன், மாமல்லபுரத்திற்குத்தான். அக் கம்பக்கத்திலிருந்தும் தமிழகத்தின் பல மாவட்டங் களிலிருந்தும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணி கள் வருகிறார்கள். பிரதமருக்காகவும் அதிபருக்காக வும் ஜொலித்த விளக்குகள், வார இறுதி நாட் களில் பொதுமக்களுக்காகவும் ஜொலித்து, மாமல்ல புரம் சிற்பங்களின் எழிலை எடுத்துக்காட்டுகின்றன.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

கர்தார்பூர் குருத்வாரா சாலை திறப்பு விழாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை பாகிஸ்தான் அழைத்துள்ளதே?

சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தனது இறுதிக்காலத்தில் தங்கிய இடம் என்பதால் கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாரா புனித மானதாகக் கருதப்படுகிறது. பிரிவினையின்போது இந்தப் பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது. இந்தியப் பகுதியில் உள்ள பஞ்சாபின் தேராபாபா குருத்வாராவிலிருந்து இது 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து அங்கு செல்ல இனி விசா தேவையில்லை என்கிற புதிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை காட்டியே இந்தியாவில் ஓட்டு வாங்கும் இன்றைய பிரதமர் மோடியைவிட, சீக்கிய மதத்தவரான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை முன்னிறுத்தி தனது பாணி அரசியலை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான்.

நித்திலா, தேவதானப்பட்டி

இடைத்தேர்தல் முடிவுகள்?

மு.க.ஸ்டாலினுக்கு தலைவலி.

__________________________________________________

தமிழி

Advertisment

(வரலாற்றைத் தேடும் காலப் பயணம்)

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தமிழர் நாகரிகத்தின் அடையாளம் கீழடி மட்டும் தானா? இன்னும் நிறைய இருக்கிறதா?

தொல்தமிழர் நாகரிகத்தின் அடையாளங்களைத் தோண்டித் தேடும் பணிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், புதுச்சேரி ஒன்றியப்பகுதியில் உள்ள அரிக்கமேடு எனத் தொடர்ந்த இந்த அகழாய்வுப் பணிகள் கொற்கை, கொடுமணல், மாங்குளம், பட்டறைப்பெரும்புதூர் உள்பட பல இடங்களில் தற்போதும் தொடர்கின்றன. கீழடியில் 2014ஆம் ஆண்டில்தான் இந்திய தொல்லியல்துறையின் ஆய்வு தொடங்கியது. இதுவரை 4 கட்ட ஆய்வுகள் நிறைவடைந்து, 5ஆம் கட்ட ஆய்வு தொடர்கிறது. முதல் மூன்று கட்ட ஆய்வுகளை நடத்திய மத்திய அரசின் இந்திய தொல்லியல்துறை, கீழடி ஆய்வுகளை வெளியிடுவதில் காட்டிய தயக்கமும், ஆய்வினைத் தொடர்வதற்கு நிதி அளிக்காமையும், ஆய்வு மேற்கொண்ட இயக்குநரை மாற்றியதும் சர்ச்சைகளை உருவாக்கின. இந்நிலையில், வழக்கறிஞர் கனிமொழிமதி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக, கீழடி ஆய்வுகளை மாநில அரசின் தொல்லியல்துறை தொடர்ந்தது. வைகை ஆற்றங்கரை நகர நாகரிகமாக கி.மு. 6ஆம் நூற்றாண்டு கால ஆதாரங்களுடன் அறிக்கையும் வெளியிட்டது. அதனால்தான், கீழடி என்பது பாமர மக்களுக்கும் தெரிந்த அகழாய்வு இடமாக மாறி, சுற்றுலா தலமானது.

கீழடிக்கு முற்பட்ட தொல்தமிழர் காலத்தைக் காட்டும் அகழாய்வு ஆதாரங்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் என்ற பகுதியில் நடத்திய ஆய்வுகளின் மூலம், "சேர நாட்டின் துறைமுகமாக விளங்கிய முசிறிதான் இன் றைய பட்டணம்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பி.ஜெ.செரியன். இங்கும் கீழடி போன்ற நகர நாகரிகத்திற்கான செங்கல் கட்டடங்கள், பானை ஓடுகள், அணிகலன்கள் போன்றவை கிடைத்துள்ளன. குமரிக்கண்டம் குறித்தும் கடலில் மூழ்கிய பூம்புகார் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்டகாலமாகத் தொடர்கின்றன. பெரும் செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகளுக்கு முன்பாக கீழடியில் அடுத்தடுத்த கட்ட ஆய்வுகளைத் தொடர்வதற்கு மத்திய அரசின் அனுமதி தற்போது கிடைத்திருப்பது நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அத்துடன் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணலிலும் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.