சி.கார்த்திகேயன்,சாத்தூர்
ஜெ. மரணம் தொடர் பான விசாரணைக் கமிஷன் என்னவாயிற்று?
அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்த ஜெ. போலவே ஆகிவிட்டது.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
பா.ஜ.க. அரசின் அக ராதியில் ‘தேசவிரோத செயல் கள்‘ என்று எவையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன?
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பின் மைக் கொள்கைக்கும், அவரவர் மொழியுணர்வுக்கும் ஆதர வான அனைத்துமே பா.ஜ.க. அரசின் அகராதியில் தேச விரோத செயல்கள். மாட்டுக் கறி சாப்பிட்டால் வெட்டிக் கொல்வது, "ஜெய்ஸ்ரீராம்' சொல்லாவிட்டால் கட்டி வைத்து அடிப்பது, கோட்சே பிறந்தநாளைக் கோலா கலமாகக் கொண்டாடி காந்தி யின் படத்தை அவமானப் படுத்துவது உள் ளிட்டவை தற் போதைய தேச பக்தி செயல் கள்.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
திராவிட இயக்க முன்னணி பிரமுகரான ஏ.கோவிந்தசாமிக்கு சாதி முத்திரை குத்தலாமா மு.க.ஸ்டாலின்?
தி.மு.க. தேர்தலில் போட்டி யிடாத காலத்திலேயே 1952 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற ஏ.கோவிந்தசாமி, அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் அரசியல் செல்வாக்குமிக்க தலை வர். உதயசூரியன் சின்னத்தில் வெற்றி கண்டவர். அண்ணா -கலைஞர் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். தி.மு.க.வின் முதல் அமைச்சரவையான அண்ணா வின் அமைச்சரவையில் அமைச்ச ராகப் பொறுப்பேற்றவர். சாதி செல்வாக்கு அவருக்கு இருந்த போதும் அதையும் கடந்து, திராவிட அரசியல் பிரமுகராகத் தன்னை நிலைநிறுத்தியவர். அவர் இறந்தபோது, அவரது குடும்பத் திற்கு நிதி திரட்ட உதவியவர்களில் ஒருவர் அன்றைய இளைஞரான மு.க.ஸ்டாலின். அதே நேரத்தில், ஏ.கோவிந்தசாமியின் பிறந்தநாள் நூற்றாண்டு வந்தபோது விழுப் புரம் மாவட்ட தி.மு.க. அரசியல் உள்குத்துகளால் அது கண்டு கொள்ளப்படாமல் போனது. தலைமையும் இதில் கவனம் செலுத்தவில்லை. இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரத்தில், ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, வன்னியர் வாக்குகளைப் பெறுவதற்கான கருவியாக மட்டுமே பார்க்கப் படுகிறது.
எபினேசர், நாகர்கோவில்
காங்கிரசுக்கு அகில இந்தியத் தலைமையும், பா.ஜ.க. வுக்கு தமிழகத் தலைமையும் இன்னமும் காலியாக இருப்பது ஏன்?
அகில இந்திய காங்கிரசில் ஒரு குடும்பத்தைத் தாண்டி தலைமையேற்கும் அளவில் கட்சியில் செல்வாக்கான நபர்கள் இல்லை. தமிழகத்தில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஓர் ஓட்டாவது வாங்கி தாமரை யை மலர வைக்கத் தகுதியான ஆட்கள் இல்லை.
எம்.ரம்யாமணி, வெள்ளக்கோவில்
எந்த மாதிரியான கேள்விகள் மாவலிக்கு மகிழ்ச்சி யைத் தருகின்றன?
கேள்விகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். அச ராமல் கேள்விகளை அனுப்பும் அத்தனை வாசகர்களும் மாவலியின் மகிழ்ச்சியின் ரக சியம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"ஆளுநர் பணி ஓய் வெடுக்க அல்ல, இது ஓய்வே இல்லாத பணி' என்கிறாரே தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்திரராசன்?
சொந்தக் கட்சிக்குள் சர்ச்சைகளைத் தவிர்க்கவும், இனி பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் என உணர்த்தவும் மத்திய ஆளுங்கட்சியினருக்குப் பயன்படுவது ஆளுநர் பதவி. அதில் ஓய்வெடுப்ப தும், பணியாற்றுவதும் அவ ரவர் ஆர்வத்தைப் பொறுத் தது. ஒவ்வொரு ஆளுநரும் தங்கியுள்ள மாளிகையை முழுமையாக சுற்றிப் பார்த் தாலே அது பெரும் பணிதான்.
___________
தமிழி
பாவலன், சிம்மக்கல், மதுரை
சங்ககால நாகரிகத்தை ஆய்வு செய்ய கீழடியை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்?
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம் என்பது எது என்கிற ஆய்வு இதுவரை முடிவு செய்யப்படாமலேயே இருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு-மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து, கிறிஸ்து பிறந்த பிறகான இரண்டு-மூன்று நூற்றாண்டுகள் வரையிலான காலமாக இருக்கக் கூடும் என்ற அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர் களும் தமிழறிஞர்களும் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். காலத்தைக் கணிப்பதற்கு தொல்லியல் ஆய்வுகள் இன்றியமையாதவை. முதல் தமிழ்ச் சங்கம் கண்ட அன்றைய தென்மதுரை (கபாடபுரம்) கடலில் மூழ்கிவிட்டது எனக் கருதப்படும் நிலையில், அதன்பிறகு பாண்டியர்களின் தலைநகரமான இன்றைய மதுரையையும் அதன் சுற்றுப்புறத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற் கொள்வதே சங்ககாலம் குறித்த சரியான தரவுகளைத் தரக்கூடியதாக இருக்கும் என தொல்லியல்-மொழியியல்-வரலாற்று ஆய்வாளர்கள் கருதினர். குறிப்பாக, வைகை ஆற்றினை ஒட்டிய பகுதிகளில் இந்த ஆய்வுகளைக் கையாள்வதே அவர்களின் நோக்கம். கீழடி என்பது மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர் என்றாலும், சிவகங்கை மாவட்டத்திற்குட் பட்டதாகும். 1974-ஆம் ஆண்டு அங்கு ஒரு கிணறு தோண்டப்பட்டபோது கிடைத்த செங்கல்லை மாணவர் ஒருவர் எடுத்துவர, அதை ஆசிரியர் பாலசுப்ரமணியன் என்பவர் பார்த்து வியப்படைந்தார். பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் சுவடு அதில் இருப்பதை உணர்ந்தார். கிணறு தோண்டிய இடத்தில் கிடைத்த பானை ஓடுகள், நாணயம், எலும்பு ஆகியவற்றை சேகரித்து பள்ளியில் காட்சிப் பொருளாக்கினார். கீழடி குறித்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி தொல்லியல்துறை வரை அவரால் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போதிருந்தே கீழடி கவனத்தை ஈர்த்தது. எனினும், இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில், மதுரையைச் சேர்ந்தவரான அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் மூலம் கீழடியில் தோண்டத் தோண்ட சங்ககாலத் தமிழரின் நாகரிகம் குறித்த அடை யாளங்களும் ஆதாரங்களும் கிடைக்கத் தொடங் கின. எனினும், மத்திய அரசின் ஒத்துழைப்பின் மையால், மாநில தொல்லியல் துறை அடுத்தகட்ட ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. கீழடியில் இதுவரை மேற்கொண்டுள்ள ஆய்வு என்பது, பெருங்கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் நுனி மட்டுமே. கீழடியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சங்ககாலத் தமிழர் வாழ்வியல் குறித்த பெரும் வரலாற்றுப் புதையலைக் கொண்டுள்ளன.