பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

"லாபம் பார்க்கும் தொழி லாக அரசியல் ஆகிவிட்டது' என்கிறாரே சீமான்?

அவரும் கடந்த சில ஆண்டுகளாக அதே தொழிலை செய்தபடி, தேர்தல் திருவிழா விலும் கடை போடுகிறாரே. லாபத்தில் நட்டம், நட்டத்தில் லாபம் என்கிற வித்தியாசமான தொழில் அரசியல் என்பதை அவரும் நன்றாகவே அறிந்திருப்பார்.

அ.குணசேகர், புவனகிரி

Advertisment

தேர்தல் செலவுக்காக தி.மு.க.விடம் வாங்கிய 25 கோடி ரூபாய்க்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத் திடம் என்ன கணக்கு காட்டும்?

விதைக்காமல் விளை யாது என்பதே இன்றைய தேர்தல் அரசியல். இது கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தெரியும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக மட்டுமல்ல, தலைவர்களின் பயணம், பரப்புரை, பொதுக் கூட்டம், போஸ்டர், பேனர், பேரணி எனத் தேர்தல் நேரத்தில் எல்லாக் கட்சி களுமே தங்கள் சக்திக்கேற்ற அளவில் செலவிடுகின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டில் ஓரிடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. எப்போது வலுவான கூட்டணிகளில் இடம் பிடிக்கிறார்களோ அப் போது வெற்றி பெறுகிறார்கள். அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி எதுவோ அது கம்யூனிஸ்ட்டு களின் வெற்றிக்காகவும் தேர்தல் களத்தில் விதைக்கிறது. கள நிலவரம் அறிந்தவர்களுக்கும் களத்தில் நிற்கும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் இது புது செய்தி அல்ல. தேர்தல் கமிஷன் விதிமுறைகளால் இப்போது வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவே!

சி.கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா முதல் வர்களாக இருந்தபோது பாராட்டு விழா நடத்திய திரையுலகினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விழா எடுக்க வில்லையே?

பாசத்தலைவனுக்கும் தைரியலட்சுமிக்கும் தமிழ்த் திரையுலகில் தனித்தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இருவரிட மும் பகை கொள்ளாமல் காரியம் சாதிப்போரும் உண்டு. அதனால் பாராட்டு விழாக் களும் வலுக்கட்டாயமாகின. எடப்பாடி, சினிமாவுக்கு ரசிகராக இருக்கலாம். சினிமா வுலகில் அவருக்கு ரசிகரும் இல்லை, பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற பய மும் திரையுலகினருக்கு இல்லை.

mavalianswers

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

அந்த 7 பேர் விடுதலை?

அம்மா ஆரம்பித்து வைத்த அரசியல் விளை யாட்டு, ஆளுநர் மாளிகைக்குள் தொடர்ந்துகொண்டிருக் கிறது.

ச.புகழேந்தி, மதுரை-14

சீன அதிபரும் இந்திய அதிபரும் சந்திக்கும் நிகழ்வின் போது நடக்கும் விருந்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பெயரும் இடம் பெற்றுள்ளதே?

அரசு தரப்பிலான முக்கிய விருந்துகளில் எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட பிற கட்சி பிரமுகர்களும் அழைக் கப்படுவது மரபுதான். சீனாவுக்கும் இந்தியாவுக்கு மான உறவு மேம்பட இந்த சந்திப்பு உதவக்கூடியதாக இருக்கலாம். சீனாவுக்கும் தமிழ்நாட்டிற்குமான உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது. அங்கிருந்து பீங்கான் வந்ததும், இங்கிருந்து புத்தம் சென்றதும் காலத்தை வென்ற வரலாறு.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

நாட்டை ஆள்வது மோடியா? அமித்ஷாவா?

நாட்டை ஆள்வது பிரதமர் மோடிதான். அவருக்கு பக்கபலமாக இருப்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். ஆனால், அவர்கள் போட்டிருக்கிற கொள்கை எனும் சட்டை ஆர்.எஸ்.எஸ். உடையது.

_________

காந்தி தேசம்

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடந்த பா.ஜ.க. பேரணிக்கும், ராகுல் காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் பேரணிக்கும் என்ன வித்தியாசம் சார்?

காந்தி பிறந்தநாளில் பாதயாத்திரை செல்வது, காந்தி சமாதியில் பஜன் பாடுவது, காந்தி சிலைக்கு மாலை போடுவது, அவரது ஆசிரமத்திற்கு சென்று ராட்டை சுற்றுவது இவையெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் பல காலமாக கடைப்பிடித்து வந்த சடங்குகள். உண்மையில் காந்தி வலியுறுத்திய மதநல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் காங்கிரஸ் தனது கட்சி அளவிலும், ஆட்சி செய்ய கிடைத்த வாய்ப்பிலும் காலத்தின் தேவை கருதி செயல்பட்டிருந்தால், பா.ஜ.க. பாதயாத்திரை சென்றிருக்க வேண்டிய சூழலே ஏற்பட்டிருக்காது. நேரு காலத்து காங்கிரஸ் கட்சியிலேயே மதவாத எண்ணம் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களின் பிடிவாதப் போக்கை நேரு சாதுர்யமாகக் கையாண்டு, அனைத்து மதங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டி வந்தார். ஆனால், போகப்போக காங்கிரசில் நிலைமை மாறிவிட்டது. பாபர் மசூதியில் ராமர் வழிபாட்டுக்கு வாசல் திறந்தது, முஸ்லிம் சமுதாயம் தொடர்பான வழக்குகளில் ஒருசார்பு நிலை எடுத்தது, பொற்கோவிலில் ராணுவம் நுழைந்தது, கேரள சர்ச்சுகளில் நடந்த பாலியல் புகார்களை கண்டுகொள்ளாமல் இருந்தது என தங்கள் வசதிக்கேற்ப மதவிவகாரங்களை காங்கிரஸ் கையாண்டது. அத்துடன், காங்கிரசுக்குள்ளேயே மிதவாத இந்துத்வாவாதிகள் அதிகரித்து விட்டனர். அதுதான், பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது. தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தலாக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட காங்கிரசால் பெற முடியவில்லை. பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து, கட்சி நிர்வாகமும் சிதைந்து போயுள்ள நிலையில், காந்தியை திடீரென கொண்டாடுகிறது பா.ஜ.க. தலைமை. கோட்சே சுட்டுக்கொன்றதால் இறுதி யாத்திரை செல்ல வேண்டிய நிலைமைக்குள்ளான காந்தியின் பெயரில் பா.ஜ.க. பாதயாத்திரை நடத்தும் அவலம் தொடராமல் இருக்கவாவது காங்கிரஸ் தன்னை மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.