லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

தமிழ் மொழியைப் பாராட்டி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என பிரதமர் கூறுகிறார். ஆனால், இந்தியை திணிக்கிறதே மத்திய அரசு?

"யாதும் ஊரே' மட்டுமா தமிழ்க் கவிதை. "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி' என்ற பாரதியின் வரிகளும் தமிழ்க் கவிதைதானே!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

"மும்பையில் இருப்பதை விட தமிழகம் பிடித்ததால்தான் சென்னையில் குடியேற விரும்புகிறேன்; அதற்காக இங்கு வீடு கட்டியுள்ளோம்' என்று உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி கூறியுள்ளது பற்றி?

mmm

அந்த வீடு எப்படிக் கட்டப்பட்டது என்பதுதான் இப்போது அவரைச் சுற்றும் சர்ச்சையாக மாறியுள்ளது.

Advertisment

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"வாரிசு அரசியல் சரியாக இருக்காது என்பதற்காகத்தான் ஜனநாயகம் வந்தது' என்று கமல் பேசியிருக்கிறாரே?

முடிசூட்டு விழா கூடாது என்பதுதான் குடியாட்சியின் தத்துவம். ஆனாலும், தேர்தல் ஜனநாயகத்தின் சந்துபொந்து களைப் பயன்படுத்தி வாரிசுகள் முளைப்பது உலகமெங்கும் உள்ள நடைமுறையாகிவிட்டது. எனினும், அவர்கள் மக்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே முடிசூட முடியும் என்பதுதான் ஜனநாயகத் தின் சிறப்பு.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"உணர்ச்சிகரமான நடிகர்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது' என்கிறாரே சிரஞ்சீவி?

நம்முடைய மாநிலத்தில் எம்.ஜி.ஆரும் அவருடைய மாநிலத்தில் என்.டி.ஆரும் அரசியல் கட்சி தொடங்கி, மக்களின் உணர்ச்சிகளை உணர்ந்து வெகுவிரைவாக ஆட்சியைப் பிடித்தவர்கள். அவர்கள் அரசியல்கட்சியைத் தொடங்குவதற்கான காரணம் மட்டுமல்ல, அதற்கான களச்சூழலும் கச்சிதமாக இருந்தது. தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்குவது பற்றி எம்.ஜி.ஆர். ரொம்பவே யோசித்து, அதற்குரிய கட்டமைப்புடன் தொடங்கினார். காங்கிரசுக்கு எதிரான மாற்று சக்தியாக ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய என்.டி.ஆரும் அப்படித்தான். ஆனால், சிரஞ்சீவியோ தனது புதுக்கட்சித் தொடக்கவிழாவில், சினிமாவுக் குரிய ட்விஸ்ட் போல, கவுண்ட்டவுனில் எண்களை சொல்லி, கடைசியாக "பிரஜா ராஜ்ஜியம்' என்று கட்சிப் பெயரை உச்சரித்தார். மக்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முடியும் என நினைத்த சிரஞ்சீவியால் தனிக்கட்சியையும் நடத்தமுடிய வில்லை. காங்கிரசிலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கட்சி ஆரம் பித்த -ஆரம்பிக்க விரும்புகிற நடிகர்களுக்கு அனுபவப் பாடம் எடுத்திருக்கிறார் சிரஞ்சீவி.

வி.கார்மேகம், தேவகோட்டை

சீன அதிபரை வரவேற்பதற்காக பேனர் வைப்பது யாரை குளிர்விக்க?

இங்கே பேனர் என்பது விருந்தினர் களுக்கான விளம்பரம் மட்டுமல்ல, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதான வாய்ப்பு. சீன அதிபருடன் இந்தியப் பிரதமரும் வருகிறாரே! எஜமானரை வரவேற்க நினைப்பது அ.தி.மு.க. அரசுக்கு இயல்புதானே!

___________

காந்தி தேசம்

சங்கரசுப்பிரமணியன், பாளையங்கோட்டை

"ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் "ஷாகா' பயிற்சியை நேரடி யாகப் பார்த்துப் பாராட்டியவர்' காந்தி என்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்?

தனது எதிரிகளுடனும் உரையாடக்கூடியவர் காந்தி. அவருடைய கருத்துகளுக்கு நேர் எதிரானவர்களும், மாறுபாடான கருத்துகளைக் கொண்டவர்களும் உரையாடியிருக்கிறார்கள். பட்டியலின மக்களுக்கான தனித்தொகுதிக்கு காந்தி எதிர்ப்புத் தெரிவித்து உண்ணா விரதம் இருந்தபோது, எரவாடா சிறையில் அவரைச் சந்தித்து உரையாடினார் அம்பேத்கர். அதன்பிறகுதான் பூனா ஒப்பந்தம் உருவானது. காங்கிரசிலிருந்து பிரிந்த பெரியாரும் பெங்களூருவில் காந்தியை சந்தித்து உரையாடியிருக்கிறார். பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் அவரை சந்தித்துள்ளனர். சில இடங்களுக்கு காந்தியே நேரில் சென்று சம்பந்தப்பட்ட வர்களிடம் பேசியிருக்கிறார்.

1925-ல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒற்றைப் பண்பாட்டு, ஒற்றை மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிற இயக்கமாகும். அந்த இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் ஷாகா வகுப்புகளை 1936-ல் வார்தாவில் பார்வையிட்டார் காந்தி. அடுத்தநாள் அவருடைய இடத்திற்குச் சென்று சந்தித்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவார். அப்போது காந்தி, அந்தப் பயிற்சி வகுப்பில் தெரிந்த கட்டுக்கோப்பை பாராட்டியிருக்கிறார். அதுபோல, ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற போதனையும் காந்திக்குப் பிடித்திருக்கிறது. 1947, செப்டம்பரில் டெல்லியில் நடந்த ஷாகா வகுப்பை காந்தி பார்வையிட்டு பாராட்டி, தனது பத்திரிகையில் அது பற்றி எழுதியதை மோகன் பகவத் குறிப்பிடுகிறார். பேச்சைவிட செயலும் அதனை அடைவதற்கான இலக்கும்தான் காந்திக்கு முக்கியமானவை. அதே காந்தி, தனது கடைசிப் பிறந்தநாள் கொண்டாட்டமான 1947, அக்டோபர் 2 அன்று, பிறந்தநாள் நிகழ்வுகளைப் புறக்கணித்ததற்கு காரணம், டெல்லியில் முஸ்லிம்கள் மீது இந்துத்வா அமைப்புகள் நடத்தி வந்த கொடூரத் தாக்கு தல்தான். அதனை அவர் வெளிப்படையாகக் கண்டித்தார். ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் படுத்து உறங்கி, இந்துத்வா சித்தாந்தத்தில் வளர்ந்த கோட்சே சகோதரர்கள் காந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். அதனை 1948, ஜனவரி 30-ல் நிறைவேற்றினார்கள். காந்தியின் இறுதியாத்திரைக்கு காரணமானவர்களின் வழி வந்தவர்கள், அவரது 150-வது பிறந்தநாளில் பாதயாத்திரை செல்வது போன்ற கொடூரம் வேறெதுவும் இருக்க முடியாது.