வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
அமெரிக்காவில் பயணம் செய்துள்ள மோடி, டிரம்புக்கு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார் என்ற காங்கிரசின் குற்றச் சாட்டு?
வெளியூர் தலைவர்களை உள்ளூர் தலைவர்கள் மதிப்பதும், பதிலுக்கு அவர்களை இவர்கள் புகழ்வதும் காலந்தோறும் நடப்பது தான். ஆனாலும், மோடி-டிரம்ப் மொய் விருந்து தனி ரகம். டிரம்ப்புக்கு மோடி ஓட்டு கேட்க, பதிலுக்கு மோடியை "இந்தியாவின் தேசத் தந்தை' என்று கொடுத்த காசுக்கு மேலே கூவியிருக்கிறாரே டிரம்ப்.
சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்
எல்லா நடிகர்களும் ஆட்சிக்கு வந்து தர்பார் செய்ய நினைக்கையில், ரஜினி மட்டும் "தர்பார்' படப்பிடிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறாரே?
தர்பார் முடிந்தாலும் அரசியல் யுத்தத்தைத் தொடங்குவாரா என்பதை அவர் உறுதி செய்தால்தான் உண்டு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாமல் தர்பார் நடத்திக் கொண் டிருக்கிறார் ரஜினி. அதே தர்பாரை அர சியலிலும் நடத்த முடியுமா, சினிமா தர்பாரால் உருவாக்கிவைத்துள்ள செல் வாக்கிற்கு பங்கம் வராமல் இருக்குமா என ரொம்ப காலமாக யோசித்துக்கொண்டி ருக்கிறார்.
வ.நடராஜன், கூடுவாஞ்சேரி
ஐ.நா. அவையில் சிறுமி கிரேட்டா Greatஆ பேசிட்டாரே?
"நாங்கள் உங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்போம்'’என 16 வயது கிரேட்டா தன்பெர்க் தொடங்கிய உரை உலகத் தலைவர்களை அதிர வைத்தது. ஸ்வீடன் நாட்டில் தனி ஆளாகத் தன் போராட்டத்தைத் தொடங்கிய சூழலியல் ஆர்வலர் கிரேட்டா, காலநிலை தொடர்பான ஐ.நா. மாநாட்டில் டிரம்ப், மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசும்போது, "நீங்கள் என் கனவைத் திருடிவிட்டீர்கள். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் கடும் பாதிப்பில் உள்ளபோது, நீங்கள் பொருளாதாரத்தைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்'’ எனப் பேசியிருப்பது அதிர வைத்தது மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்திருக்கிறது, டிரம்ப்பே கிரேட்டாவைப் பாராட்டி ட்வீட் போடும் அளவிற்கு.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
ஒரு சினிமா படத்தின் நோக்கம் -ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதா, தயாரிப்பாளரை லாபம் ஈட்ட வைப்பதா?
நீங்கள் வேலை பார்ப்பதோ தொழில் செய்வதோ, உங்களுக்குள் புதைந்திருக்கும் திறமையைக் காட்டுவதற்கா? குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான வருமானத்தை ஈட்டு வதற்கா?
நித்திலா, தேவதானப்பட்டி
திரைப்படத்தில் பாட்டு எழுதினால்தான் கவிஞர்களா?
சினிமாப்பாட்டு என்பது பாமரர் உள்ளிட்ட பலருக்கும் எளிதாகச் சென்று சேரும் ஊடகம். அதனை திராவிட இயக்கப் படைப்பாளிகள் சரியாகக் கையாண்டனர். அதே திராவிட இயக்கத்தில் சினிமாவில் பெரிய ஆர்வம் காட்டாமல், தனித்துவமான கவிதைகளைத் தமிழுக்குத் தந்தவர்கள் உண்டு. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பரம்பரை என்ற பெயரில் உருவான கவிப் பட்டாளத்தின் வரிசையில், "ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னை மொழி பேசுதற்கு நாணுகின்ற தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் தென் படுமோ மொழியுணர்ச்சி? ஆட்சி மன்றில் பாங்குடன் வீற்றிருக்கும் மொழி தமிழே என்று பகர்நாளில் மொழியுணர்ச்சிதானே தோன்றும்' என்று பாடிய, நூற்றாண்டு காணும் கவிஞர் முடியரசனுக்கு அதில் சிறப்பான இடம் உண்டு.
அ.குணசேகர், புவனகிரி
ஜெயகோபால் கைது?
தமிழ்நாடு காவல்துறை தன்னை ஸ்காட் லாந்து யார்டு என மீண்டும் நிரூபித்துள்ளதாக சொல்கிறார்கள். யாராம்? அவர்களேதான்.
___________
காந்தி தேசம்
தூயா, நெய்வேலி
காந்தி, கம்யூனிஸ்ட்டுகளின் பகையாளியா? பங்காளியா?
அன்புதான் காந்தியின் ஆயுதம். அது யாருக்கும் பகையான தல்ல. பங்கு கேட்பதுமில்லை. அந்த ஆயுதம் எல்லா நேரத்திலும் எல்லாருடைய விருப்பத்திற்கேற்றபடி பயன் படுவதில்லை. கம்யூனிசப் பார்வையிலான முதலாளி- தொழிலாளி உறவுக்கும், காந்தியின் பார்வையிலான முதலாளி-தொழிலாளி உறவுக்கும் வேறுபாடுகள் உண்டு. ""கம்யூனிசம் -சோஷலிசம் இவை குறித்த மேற்கு நாடுகளின் பார்வைக்கும் நம்முடைய பார்வைக்கும் வித்தியாசம் உண்டு'' என 1934-ல் அமிர்தபஜார் பத்திரிகையில் காந்தி குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி உறவு, சந்தை, இடைத்தரகர், உபரி மதிப்பீடு ஆகியவை குறித்த மார்க்ஸின் கோட்பாடுகளுக்கும் காந்திக்கும் இடைவெளி இருந்தது. "மனிதர்களின் இயற்கையான சுயதேவைகளின் அடிப்படையில் முதலாளி-தொழிலாளி என்ற வர்க்கபேதத்தை கம்யூனிசம் பார்க்கிறது என்றும், அதனால் வர்க்கப் புரட்சியை அது வலியுறுத்துகிறது' என்றும் குறிப்பிட்ட காந்தி, "ஆயுதமற்ற அமைதி வழியில் அந்த உறவைக் கடைப்பிடித்து உழைப்போரின் உரிமை காக்கப்படவேண்டும்' என்பதை முன்வைத்தார்.
முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும், நிலவுடைமையாளர்களுக்கும் வேலையாட்களுக்குமான பிரச்சினைகள் என்பது மனிதநேயத்துடனும் ஒத்துழைப் புடனும் அணுகப்பட வேண்டும் என்பதை காந்தி வலியுறுத்தினார். இந்தியாவில் வர்க்கப்புரட்சி சாத்தியமில்லை என்றும் அத்தகைய எண்ணம் தவிர்க்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். தனிமனித தேவைகளைக் குறைத்துக்கொண்டு, பரந்துபட்ட அளவில் பங்குபிரித்துக் கொள்வதே இரு வர்க்கத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என நம்பினார். காந்தி விரும்பியதும் பணக்காரன்-ஏழை என்ற ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம்தான். ஆனால், பணக்காரனை எதிர்க்கும் ஏழையையும், ஏழையை ஏய்க்கும் பணக்காரனையும் அவர் விரும்பவில்லை. இரு நிலைப்பாடுகளும் இணக்கமான சூழலால் மாறவேண்டும் என விரும்பினார். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் ஆரம்பகாலத்தில் காந்தியுடன் இணைந்தே பணியாற்றினர். 1940களுக்குப் பிறகே முழு வீச்சில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் தன் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தது. அத்தகைய சூழலிலும் காந்திக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குமான கடிதத் தொடர்புகள் நீடித்தன. அதில் இருதரப்புக்கும் இருந்த பரஸ்பர புரிதல் வெளிப்பட்டது.