அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
தலைமைச் செயலகத்தில் பாம்புகள் நுழை வது வழக்கமாக இருக்கிறதே?
அரசியல் பாம்புகள் ஆட்சி யைப் பிடித்து, அதிகாரம் செலுத் தும்போது, நிஜப் பாம்புகளான நாமும் கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்க்க லாமே என நினைத் திருக்கலாம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
நடிகர் செந்திலுக்கு அ.ம.மு.க.வில் புதிய பதவி தந்திருக்கிறார்களே?
தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, இசக்கி சுப்பையா, கலைராஜன், செந்தில்பாலாஜி என கட்சியில் சீரியஸாக செயல்பட்ட பிரமுகர்கள் வெளியேறிய நிலையில், காமெடியான சீனியருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
அகில இந்திய பா.ஜ.க.வில் இன்று பெயர் சொல்லும் அளவிலான முக்கியமான பெண் தலைவர் யார்?
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்டத்திலும் பெண் முகம் முன்னிறுத்தப்படுவது வழக்கம். அதன் தொடக்க கட்டத்தில், "ராஜ மாதா' எனப்பட்ட விஜயராஜே சிந்தியா (முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா வின் தாயார்) முக் கியமானவராக இருந் தார். அத்வானியின் ரதயாத்திரையின் போது உமாபாரதி பெயர் பெற்றார். பின்னர் மத்தியப் பிரதேசத்தின் முதல்வ ராகவும் ஆனார். வாஜ்பாய் பிரதமரான போது, பா.ஜ.க.வின் பெண் முகமாக பெயர் பெற்றவர், சுஷ்மா ஸ்வராஜ். சோனியாவை எதிர்த்து தேர்தல் களம் கண்டதாலும், கர்நாடக அரசியல் வரை தனக்கான செல்வாக்கை செலுத்தியதாலும், தனக்கு வழங்கப்பட்ட துறைகளை கையாண்ட விதத்திலும் அவர் கவனம் பெற்றார். அதன்பின், மோடி ஆட்சியில் சுஷ்மாவைவிட அதிக பாப்புலர் ஆனவர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் கோட்டையான அமேதியில் ராகுலை தோற்கடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். இப்போது, கோட்சே புகழ் பாடும் எம்.பி.யும் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை எதிர்கொள்பவருமான பிரக்யாசிங் தாக்குர் என பா.ஜ.க.வில் காலந்தோறும் பெயர் சொல்லும் பெண்கள் இடம் பெறுகிறார்கள்.
பி.சாந்தா, மதுரை-14
திருச்சியில் நடந்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் -எம்.பி.க்கள் கூட்டத்தில், தென்னக ரயில்வே பணிகளில் "தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை' என எம்.பி.க்கள் ஒற்றுமையாக வலியுறுத்தி யும், ரயில்வே அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் தரவில்லையே?
ரயில்வேயில் மட்டுமா? இந்தியாவில் ரயில் எங்கெங்கே ஓடுகிறதோ அந்த ஊர்களில் உள்ள மத்திய அரசுப் பணிகளை இந்திமயமாக்க வேண்டும் என நினைக்கிற அரசாங்கம் மத்தியில் ஆட்சி செய்யும் நிலையில், உத்தரவாதம் எப்படி கிடைக்கும்?
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"இந்தியை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தில் தமிழக மக்கள் இல்லை' என்று அமைச்சர் பாண்டிய ராஜன் பேசியுள்ளாரே?
"இந்தியைத் திணிக்காதே' என நெத்தியடியாகச் சொல்வது அண்ணா வழி. இந்தியை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை என நெளிந்து குழைவது அண்ணா தி.மு.க. என்ற கட்சியில் இருந்தபடி பா.ஜ.க.வில் துண்டு போட்டு வைக்கும் வழி.
_________
காந்தி தேசம்
நித்திலா, தேவதானப்பட்டி
மகாத்மாவின் நூற்று ஐம்பதா வது பிறந்தநாளை ஒட்டி, பள்ளிகளில் காலாண்டு விடுமுறை ரத்து செய்யப் பட்டு, காந்திய சிந்தனை வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையும், பின்னர் அப்படி இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டதையும் காந்தி நேரில் கண்டிருந்தால் என்ன நினைத்திருப்பார்?
பள்ளிக்கல்வி, அடிப்படைக் கல்வி ஆகியவை குழந்தைகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது எனக் கருதியவர் காந்தி. ஆங்கில வழியிலான நவீனக் கல்வியை அவர் எதிர்த்தார். மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு ஆட்படாமல், இந்தியத்தன்மையுடன் அடிப்படைக் கல்வி அமையவேண்டும் என நினைத்த காந்தி, தனது வார்தா திட்டத்தில் கல்விக் கொள்கை பற்றி விளக்கியுள்ளார். ஜாகிர் உசேன் தலைமையிலான அதற்கான குழுவில் ஜே.சி.குமரப்பா, காகா கலேல்கர் உள்ளிட்ட பலர் பங் கேற்றிருந்தனர். "தாய்மொழியில் கல்வி என்பதுடன், வெறும் ஏட்டுக் கல்வியாக இல்லாமல் அது கைத்தொழில் சார்ந்து இருக்கவேண்டும். அந்தந்தப் பகுதிக்கேற்ற கைத்தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்து, பள்ளியின் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்பதுவரை அந்தத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. குருகுல முறைக்கும் நவீன பள்ளிக் கல்விக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தது காந்தியின் கல்விக்கொள்கை. கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும், அதுவும் இந்தியப் பண்பாட்டை வளர்க்கும் வகையிலான கல்வியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இன்றைய சூழலுக்கு காந்தி வலியுறுத்திய கல்வி முறை சாத்தியமா என்பது விவாதத்திற்கு உரியது. என்றாலும், மனச் செழுமை -நன்னெறி -அறிவுப்பெருக்கம் ஆகியவை கொண்ட கல்வியானது மாணவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதில் காந்தி கவனமாக இருந்தார். அவர் பெயராலேயே, காலாண்டு விடுமுறை நேரத்தில் மாணவர்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களுக்கு கூடுதல் சுமையை உண்டாக்கி, "காந்திய சிந்தனை' என்ற பெயரில் மூளைக்குள் கருத்துகளைத் திணிப்பதை அகிம்சைவாதியான காந்தி ஏற்றுக்கொள்ள மாட்டார். தன் வாழ்க்கைதான் தனது செய்தி என்ற காந்தி, ஒவ்வொரு மாணவரும் தனது வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டும் என்றே விரும்புவார்.