அ.குணசேகரன், புவனகிரி

வேட்டியுடன் வெளிநாடு சென்ற காமராஜர், கோட்-சூட்டுடன் சென்ற எடப்பாடி. எது நல்லது?

உடைகள் அவரவர் வசதிக்கானவை. பயணம் யாருக்கானவை என்பதுதான் முக்கியம். காமராஜரின் பயணம் நாட்டுக்கு. எடப்பாடியின் பயணம் நோட்டுக்கும் ஓட்டுக்கும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

மாணவிகளைப் பேராசிரியர்கள் எந்த விஷ யத்துக்காகவும் வீடுகளுக்கு அழைக்கக் கூடாதென சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதே?

அறிக்கைகளைவிட நடவடிக்கைகள்தான் அவசியமானவை. பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் நடத்திவரும் சட்டக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி அவர் மீது தெரிவித்திருக்கும் பாலியல் புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாடு எதிர்பார்த்திருக்கிறது.

dd

Advertisment

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் கால்களைத் தொட்டு வணங் கியது சரியா?

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதிதான் முதல் குடிமகன் என்றாலும், அவர்கள் தங்களுக்கும் மேலாக சிலர்மீது நம்பிக்கை வைத்திருப்பதை இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் காலத்திலிருந்தே நாடு பார்த்து வருகிறது. சாமியார்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இவர்களின் முன்பாக முதல் குடிமகன் தலைகுனிந்து நிற்பதில் அப்துல்கலாம் போன்றவர்கள்கூட விதிவிலக்கல்ல.

ச.புகழேந்தி, மதுரை

அசோக் லேலண்டு நிறுவனம் தன் ஐந்து கிளைகளிலுமாகச் சேர்த்து 19 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளதே?

பயணிகள் வாகனமான கார் உற்பத்தியும் விற்பனையும் குறைந்ததற்கு வாடகை கார்களை மக்கள் பயன்படுத்துவதே காரணம் என்றார் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன். சரக்கு வாகனமான லாரி போன்றவற்றை உற்பத்தி செய்யும் அசோக் லேலண்டு தன் நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தத்தை நிறுத்துகிற தென்றால் வணிகர்கள் மாட்டு வண்டியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்களா என்பதை அமைச்சர்தான் விளக்கவேண்டும். பொருளாதாரம் பிரேக் டவுனாகிக் கிடக்கிறது என்பதைத்தான் பெரிய நிறுவனங்களின் கதவடைப்புகள் காட்டுகின்றன.

நாகேஷ் மயிலாப்பூர்,சென்னை-4

"கிண்டில்' போன்ற மின்புத்தகங்கள் மரபான புத்தகங்களை அச்சிட்டு வெளியிடும் பதிப்பகங்களுக்கு முடிவு கட்டிவிடுமா?

மரபும் அதன் தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து செயல்படவேண்டும். ஓலைச்சுவடிகள் என்பது மரபு. அதன் தொழில்நுட்ப வளர்ச்சி அச்சு. பின்னர், அச்சு என்பது மரபாகும் போது, மின்புத்தகங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியாகிறது. தேவைகளும் அதற்கேற்ற வியூகங்களும் காலச்சக்கரம் சுழல்வதற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

____________

காந்தி தேசம்

சி.கார்த்திகேயன், சாத்தூர்

காந்தி-ஜின்னா உறவு எப்படி இருந்தது?

gg

நண்பர்களாக இருந்த எதிரிகள், எதிரிகளாக இருந்த நண்பர்கள் இந்த இரண்டில் எது காந்தி-ஜின்னா உறவுக்குப் பொருந்தும் என்பது இன்னமும் வரலாற்று ஆசிரியர்களால் விவாதிக்கப்படுகிறது. காந்தியைவிட 7 வயது இளையவர் ஜின்னா. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இருவருக்குமான நட்பு, பகை, முரண், மோதல் என அரசியல் களம் இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. காந்தி தனது கொள்கையை நம்பியது போலவே, ஜின்னாவும் தனக்கான கொள்கையை நம்பி னார். காந்தியைப் போலவே ஜின்னாவும் பிடிவாதக்காரர். எல்லா மதத்தினரும் ஒன்றுபட்ட ‘ராமராஜ்ஜியமாக’ இந்தியா திகழ வேண்டும் என்பது காந்தி யின் கனவு. மதம் என் பது தனிப்பட்டவர்களின் உரிமை என்பதால், அதில் அரசியல் பார்வை தேவை யின்றி, முஸ்லிம்களுக் கான தனி நாட்டை வலியுறுத்தினார் ஜின்னா. காந்தி தன் கொள் கையை நிலைநாட்டுவதற் கான வழிமுறைகளிலும் பிடிவாதமாக இருந்தார். ஜின்னா, தன் கொள்கை நிறைவேறுவதற்கான சூழலைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்வதில் பிடிவாதமாக இருந்தார். காந்தியின் பிடிவாதப்போக்கு அவருடன் இருந்த சி.ஆர்.தாஸ், சுபாஷ்சந்திரபோஸ் போன்றவர்களை அவரிடமிருந்து விலகச் செய்தது. ஜின்னாவும் அப்படித்தான் காந்தியிடமிருந்து விலகினார். அதேநேரத்தில், ஜின்னாவுக்கு ஆதரவாக இருந்த தலைவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவருடைய இயல்புக்கு மற்றவர்களுடன் அனுசரித்துப் போக முடியவில்லை. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கம் தகர்ந்தபோது, இந்தியாவைத் துண்டாடி, இரண்டு நாடுகளாக்கிவிட முடிவு செய்தார்கள். முழுமையான இந்தியாவை எதிர்பார்த்த காந்தி, பிரிவினைக்குத் துணை போக வேண்டாம் என ஜின்னாவிடம் வலியுறுத்தினார். இது தொடர்பான சந்திப்புகள் பலன் தரவில்லை. காந்தி தன் நிலையில் உறுதி காட்டியதுபோலவே, ஜின்னாவும் உறுதி காட்டினார். விளைவு, 1947 ஆகஸ்ட் 14-ல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது. ஜின்னா அதன் கவர்னர் ஜெனரல் ஆனார். அடுத்தநாள், ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. எந்தப் பதவியும் ஏற்காத காந்தி, இந்தியாவின் தேசத்தந்தை ஆனார். இருவருமே தங்கள் நாடு சுதந்திரமடைந்த மறுஆண்டே (1948) இறந்துபோனார்கள்.