Skip to main content

மாவலி பதில்கள்!

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

"ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்' என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளாரே?

எடுத்தவன் கொடுப்பதற்கு அத்தனை சுலபமாக வரமாட்டான். ஆனால், கொடுத்ததை எடுக்க முயற்சிக்கலாம். அந்த வகையில் முதலில் கச்சத்தீவுக்கு ஒரு வழியை துணை ஜனாதிபதி சொல்லட்டும்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
dd
ஜெ.கைது, பின்னர் கலைஞர் கைது, அமித்ஷா கைது, அப்புறம் ப.சி. கைது. இனி எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும்?


எதிர்காலம் எவர் கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறதோ அதன்படி நடக்க வேண்டியது நடக்கும்.

ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்

இருநாட்டுத் தலைவர்களான மோடியும் டிரம்ப்பும் அடித்து விளையாடி, சிரித்துப் பேசியதைப் பார்த்தீரா?

அடித்து விளையாடப்படுபவர்கள் அவரவர் நாட்டு மக்கள். சிரித்துப் பேசி மகிழ்ந்தவர்கள் அந்தந்த நாட்டின் தலைவர்கள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-17

ஒருவரின் வளமான வாழ்விற்கு சிறந்தது குழு சிந்தனையா? சுய சிந்தனையா?

தன்னை உணர்வது, தனது சூழலை அறிவது, தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வது, தனக்குரியவர்களைத் தேர்ந் தெடுத்து ஆலோசனை பெறுவது, அதில் தனக்கான தெளிவுடன் முடிவெடுத்து செயல் படுத்துவது இவையே நெருக்கடிகளைத் தீர்த்து வளமான வாழ்விற்கு வழிகாட்டுபவை.

த.சத்தியநாராயணன், அயன்புரம், சென்னை-72

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் மக்களா? அரசாங்கமா?

தங்கத்திற்கு உலக அளவில் இருக்கும் மார்க்கெட்டும், உலக நாடுகளில் பொருளாதார நிலவரம் சரிந்து வருவதும்தான் முக்கிய காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்களின் எதிர்காலத் தேவையாக தங்கம் சேமிக்கப்படுகிறது. தனி மனிதர்கள் தொடங்கி கடவுளர் வரை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, மதிப்பு உயர்த்தப்படுகிறது. வீட்டில் இருக்கும் தங்கத்தின் அடிப்படையில் சொந்தங்களிடம் மதிப்பு கூடுவதும் குறைவதுமாக சமுதாய மார்க்கெட் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு பவுன் தங்கம் 30ஆயிரம் ரூபாயை எட்டியுள்ள நிலையில், இனி பி.வி.சிந்து, இளவேனில் வாலறிவன் போன்றோர் பெறுகின்ற தங்கம்தான் இந்தியாவின் மதிப்பாக அமையும்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறக்கூடாது' என்கிறாரே மு.க.ஸ்டாலின்?

எம்.பி.க்கள் தங்களின் தொகுதிக்குத் தேவையான -மாநிலத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்பதை தன் கட்சி எம்.பி.க்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். கல்லூரி, கப்பல் நிறுவனம், சாராய ஆலை உள்ளிட்டவை தொகுதி நலனிலோ மாநில நலனிலோ சேராது.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

சதித் திட்டம் -ராஜதந்திரம், என்ன வித்தியாசம்?

இரண்டும் ஒன்றுதான். நீங்கள் பாதிக்கப் பட்டிருந்தால் அதற்குப் பெயர் சதித்திட்டம். நீங்கள் பலனடைந்திருந்தால், அதுவே ராஜதந்திரம்.

______________
காந்தி தேசம்

கே.பி.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

காந்தியின் 150-வது பிறந்தநாளை மத்திய அரசு கொண்டாடுவதுபோல, காந்தி உயிரோடு இருந்தபோது அரசாங்கம் கொண்டாடியிருக் கிறதா?

காந்தி வாழ்ந்த காலத்தில் இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்தது. காந்தி தனது 45-வது வயதில்தான் இந்திய அரசியலில் தீவிரப் பங்களிப்பை செலுத்தத் தொடங்கினார். சில ஆண்டுகளிலேயே காங்கிரஸ் கட்சியிலும் மக்களிடமும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. காந்தியின் 50-வது பிறந் தநாள் 1919-ல் கொண்டாடப்பட்டபோது, அவருக்கு நிதி திரட்டித் தருவதற்குப் பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது, காந்திக்கான நிதி அல்ல. அப்போதைய பஞ்சாப் மாகாணத்தில் பாதிப்படைந்திருந்த மக்களுக்கான நிவாரண நிதி. குறிப்பாக, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவக்கோரி சாமி சதானந்த், மதன் மோகன் மாளவியா, காந்தி போன்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று ஒவ்வொரு மாகாணத் திலிருந்தும் நிதி திரட்டப்பட்டது. அதுபோலவே, அன்றைய சென்னை மாகாணத்திலும் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்து காந்தியிடம் சேரச் செய்தனர். இந்தியா சுதந்திரமடைந்த நிலையில், 1947 அக்டோபர் 2-ஆம் நாள் டெல்லி பிர்லா மாளிகையில் காந்தி தங்கியிருந்த அறையில் "ஹே ராம்', "ஓம்'’என மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அவருக்குப் பிடித்த பஜன் பாடல்களுடன் பிறந்தநாள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் பட்டேல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினாவும் வந்திருந்தார். இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையால் நாட்டில் கலவரம் ஓயாமல் இருந்தது. அதனால் காந்தி “"நாடு இப்படி பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது நான் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. கடவுளே... ஒன்று நெருப்பை அணைத்துவிடு. அல்லது என்னை உன்னிடம் அழைத்துக்கொள்' என்றதுடன், “"இந்தியா இப்படிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பிறந்தநாளை நான் கொண்டாட விரும்பவில்லை' என்றார். அதுதான் அவரது கடைசிப் பிறந்தநாள். அடுத்த பிறந்தநாளைக் கொண்டாட, கோட்சேவும் அவரது கும்பலும் விடவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்