அ.குணசேகரன், புவனகிரி
சி.பி.ஐ. வழக்குகள்?
வச்சி செய்ய வசதி யானவை. ப.சிதம்பரத்தின் நிலையைப் பார்த்து, ஏற்கனவே சி.பி.ஐ. ரெய்டுக் குள்ளான தமிழக அமைச் சர்கள் பலருக்கு தூக்கமே வருவதில்லையாம்.
லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)
முதல்வரின் குறைதீர்வு முகாமால் ஏதாவது தீர்வு கிடைக்குமா?
வீடு தேடி வந்து குறைகள் தீர்க்கப்படும் என்கிற அளவுக்கு இந்த குறைதீர்ப்பு முகாம்கள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். அரசு அலுவலகத்திற்கு வரும் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்தாலே பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். தக வல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் கொடுத்தாலே, இந்த அரசு எப்படிப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.
கௌசிக், திண்டுக்கல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்ட மான ரிசல்ட் வந்ததே, இவர்கள்தான் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரப் போகிறார்களா?
இதே ஆசிரியர்களிடம் பாடம் படித்தவர்கள்தான் பொதுத் தேர்வுகளில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருவதுடன், அதிக மதிப்பெண்களும் பெறுகிறார்கள். ஆனால், மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களால் தகுதித் தேர்வில் வெற்றி பெறமுடியவில்லை. கால வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர்கள் புதிது புதிதாகக் கற்கவேண்டும். அதே நேரத்தில், தேர்வு முறைகள் என்பது வளர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுவதாக இருக்கக்கூடாது. தற்போது அறிமுகப்படுத்தும் தேர்வு முறைகள் இரண்டாம் வகையினதாக உள்ளன.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் ஆட்சியை நடத்துவதே தி.மு.க.தான்' என்ற மு.க.ஸ்டாலினின் பேச்சு?
பேச்சுதான்..
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஜெ.-சசி, மோடி-அமித்ஷா இரண்டு நட்புக்கும் என்ன வித்தியாசம்?
அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள அரசியல் வியூகங்கள் அவசியம் என்பதை மோடிக்கு உணர்த்தியது அமித்ஷாவின் நட்பு. அதே வியூகம் போயஸ் தோட்டத்து உடன்பிறவா சகோதரிகளின் நட்பிலும் இருந்தது என்றாலும், அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பதற்காகவே போயஸ் தோட்ட முகவரியில் சசிகலா உள்ளிட்டவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள் என ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததும், அரசியல்-அதிகார நட்புகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை உரக்கச் சொல்கின்றன.
எபினேசர், நாகர்கோவில்
மாவலியாருக்கு பயணங்கள் பிடிக்குமா?
பிடிக்கும். இதமான ரயில் பயணம், இனிமையான சூழல்களில் பஸ்-கார் பயணம், விரைவான விமானப் பயணம், வித்தியாசமான கப்பல் பயணம் இந்தப் பயணங்களைவிட ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யம் தரும் வாழ்க்கைப் பயணம் ரொம்பப் பிடிக்கும்.
மணி, விருதுநகர்
பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போன்ற உடனடி தண்டனை வேண்டும் என்கிறாரே நடிகை திரிஷா?
ஆன்ட்டி இண்டியன்.
__________
காந்தி தேசம்
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
அண்ணல் காந்தி திருக்குறளை எந்தளவு படித் திருக்கிறார்?
இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பிவந்து, அதன்பின் ஒரு வழக்கிற்காக தென்னாப்பிரிக்கா சென்று, அங்கு நிலவிய நிறவெறியை நேரடியாக அனுபவித்தவர் காந்தி. தன்னைப்போல நிறவெறியை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களுக்காக சத்யாகிரகப் போராட் டத்தை காந்தி தொடங்கியபோது, அவருக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருந்தவர்கள் அங்கிருந்த தமிழர்கள். காந்தியின் சத்யாகிரகப் போராட்டத்தில் உயிர் ஈந்த முதல் தியாகி, தென்னாப்பிரிக்கா வில் இருந்த தமிழ்நாட்டவரான தில்லையாடி வள்ளியம்மை. தமிழர்களுடன் காந்திக்கு ஏற்பட்ட இயக்கரீதியான நட்பு, தமிழ்மொழி மீது அவரது பார்வையைத் திருப்பியது. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே திருக்குறள் பற்றி அறிந்திருக்கிறார் காந்தி. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்து அதன் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட காந்தி, அதன் மூலநூல், அதாவது தமிழில் வெளியான திருக்குறளைப் படிக்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப் படுத்தியிருக்கிறார். காந்தி வலியுறுத்திய அகிம்சை, புலால் உண்ணாமை, கள் உள்ளிட்ட மது போதைகளை விலக்குதல், அறநெறி தவறாத அரசு இவற்றையெல்லாம் காந்தி பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வள்ளுவர் தனது குறளில் சொல்லியிருக்கிறார். தன் சிந்தனைகளை முன்கூட்டியே மொழிந்த அறநூல் மீது காந்திக்கு ஈர்ப்பு ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. "இந்தியாவுக்குப் பொதுமொழி வேண்டும் என இந்தி பிரச்சார சபா என்ற அமைப்பை காந்தி தொடங்கியிருந்தாலும், அவருடைய இறுதி ஆண்டுகளில் தமிழின் சிறப்பை விளக்கிப் பலமுறை பேசியிருக்கிறார்' என்கிறார் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன். "எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல நேசித்து காக்க வலியுறுத்தும் அறநூல்கள் நிறைந்த தமிழ் மொழியைப் பயில வேண்டும்' என காந்தி பேசியதையும் சுட்டிக்காட்டுகிறார்.