மீஞ்சூர், கோதை ஜெயராமன்
புதிய கல்விக் கொள்கை நன்மையா? தீமையா?
மூன்றாம் வகுப்பிலிருந்தே பொதுத்தேர்வு என்பது எளிய கிராமப்புற ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு நன்மையா? தீமையா?
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
"நே.கொ.பா.' 4 நாட்களில் 40 கோடியை சம்பாதித்துவிட்டதாமே?
பொதுவாக, அஜித் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஓபனிங்கில் கலெக்ஷன் நன்றாக இருக்கும். "நேர்கொண்ட பார்வை'யைப் பொறுத்தவரை கலெக்ஷன் மீதான பார்வையைத் தாண்டி, இன்றைய தலைமுறையினரின் பாலின சமத்துவம் குறித்த பார்வையே முதன்மையானது. அமிதாப் நடித்த "பிங்க்' இந்திப் படத்தின் தழுவல் என்றபோதும் தமிழுக்குரிய தன்மையுடனும் அஜித்துக்குரிய வேகத்துடனும் வெளியாகியுள்ளது "நே.கொ.பா.' படம். சர் ஙங்ஹய்ள் சர் என்ற க்ளைமாக்ஸ் நேர வசனத்தின் மூலம், நம் சமுதாயத்தின் உடை களைந்து, அதனை ஆளுயரக் கண்ணாடி முன் நிறுத்தி, "உன் யோக்கியதையை நீ பார்' என காட்டியிருக்கிறார் இயக்குநர் வினோத்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருது வழங்காமல் புறக்கணித்துவிட்டார்களே?
"பாரம்' என்ற தமிழ்ப்படம் சிறந்த மாநில மொழிப் படமாக விருது பெற்றுள்ளது. இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால், திரைக்கு வந்து மக்களிடமும் திறனாய்வாளர்களிடமும் வரவேற்பு பெற்ற பல படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது மட்டுமல்ல, கலையில் புகுந்துள்ள அரசியல் குறித்த கவலைக்கும் உரியது.
நித்திலா, தேவதானப்பட்டி
கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் கல்வி நிலையங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது உண்மையா?
தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியர்களால் மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை வெளிக்கொண்டு வந்தது நக்கீரன்தான். அது தொடர்பாக நிர்வாக நடவடிக்கையும் நீதி நடவடிக்கையும் கோரப்பட்ட நிலையில், ஒரு கல்லூரியில் நடந்தது தொடர்பான வழக்கு விசாரணையில் மொத்தமாக கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றி கருத்து தெரிவித்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றிருக்கிறார் நீதியரசர். தனிப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியதே நீதி. குற்றத்தை பொதுமைப்படுத்துவது ஆபத்து.
அ.குணசேகரன், புவனகிரி
காஷ்மீரில் ஒரு சென்ட் நிலம் அல்லது கெஸ்ட் ஹவுஸ் வாங்கும் திட்டம் மாவலிக்கு உள்ளதா?
370-வது பிரிவு நீக்கப்பட்டாலும் காஷ்மீர் மக்கள் அங்குள்ள பழங்குடிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் இருப்பிடச் சட்டங்கள் தேவை என்றும், வேலை வாய்ப்பில் காஷ்மீரிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பவர்கள் வேறு யாருமல்ல, லடாக் பா.ஜ.க. எம்.பி.யும் காஷ்மீர் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும்தான். "கெஸ்ட்டுகள் கெட் அவுட்' என்பதே இதன் அர்த்தம்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"வேலூரில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது வெற்றிகரமான தோல்வி என்றும், தி.மு.க.வுக்கு கிடைத்தது தோல்விகரமான வெற்றி' என்றும் தமிழிசை சொல்கிறாரே?
"கழகங்கள் இல்லாத தமிழகம்' என்று தேர்தலுக்கு முன்புவரை சொல்லிவந்த தமிழக பா.ஜ.க. தலைவர், தேர்தலுக்குப்பின் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்தது என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம்.
____________
காந்திதேசம்
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
காந்திஜியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கிடைத்த தண்டனை என்ன?
1948 ஜனவரி 30-ந் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த காந்தியை, மிகக் குறைந்த தொலைவிலிருந்து சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே, தப்பிக்கவும் முயற்சிக்கவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை. அதனால் துப்பாக்கியும் கையுமாகப் பிடிபட்டார். கோட்சேவுடன் கொலைக்குத் திட்டமிட்ட நாராயண் ஆப்தே, ஆயுத வியாபாரி திகம்பர் பாட்ஜே, அவரால் பணியாளாக நியமிக்கப்பட்ட சங்கர் கிஸ்தய்யா, டாக்டர் தத்தாரேய பர்ச்சூர், ஓட்டல் உரிமையாளர் விஷ்ணு கார்கரே, இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மதன்லால் பவா, கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே, இவர்களுடன் சாவர்க்கரும் கைது செய்யப்பட்டனர். இதில் அந்தப் பணியாள் தவிர மற்றவர்கள் இந்து மகா சபா என்கிற இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
1948 மே மாதம் 27 தொடங்கியது நீதிமன்ற விசாரணை. 8 மாதங்களுக்குப்பிறகு, நீதிபதி ஆத்மாசரண் 1949 பிப்ரவரி 10-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் கோட்சேவுக்கும் நாராயண் ஆப்தேவுக்கும் மரண தண்டனை விதித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில், "காந்தி கொலைக்கு நான் மட்டுமே காரணம்' என்றும் "கூட்டுச் சதி எதுவும் இல்லை' என்றும் கோட்சே தெரிவித்தார். தனக்கான மரண தண்டனையை ஏற்பதாகத் தெரிவித்தார். மேல்முறையீட்டில் டாக்டர் தத்தாரேய பர்ச்சூரும் பணியாளர் சங்கர் கிஸ்தய்யாவும் விடுவிக்கப்பட்டனர். மரண தண்டனைக் கைதிகளுக்கும் மற்ற ஆயுள்கைதிகள் நால்வருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. காந்தியின் மகன்கள் மணிலால், ராமதாஸ் இருவரும் மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தினர். ஆனால் பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் பட்டேல், கவர்னர் ஜெனரல் ராஜாஜி ஆகியோர் அதை ஏற்கவில்லை. 1949 நவம்பர் மாதம் கோட்சேவும் ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டனர்.