வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை ரஜினி வரவேற்கிறாரே?
மக்கள் தலைவர்கள் வீட்டுச் சிறை வைக்கப்பட்டு, தகவல் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட ஜனநாயக நாட்டில், கிருஷ்ணர் -அர்ஜுனர் -ராஜதந்திரம் எல்லாவற்றையும் வரவேற்பதற்குப் பெயர்தான் சகிப்புத்தன்மை.
ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்
வேலூரில் அ.ம.மு.க.வும் மக்கள் நீதி மய்யமும் நின்றிருந்தால் தி.மு.க. தோற்றிருக்கும்தானே?
நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள். நல்லவேளை இருதரப்பும் நிற்காததால் நம்மால் கடைசிவரை தம் கட்ட முடிந்தது என நினைக்கிறது அ.தி.மு.க. தரப்பு. வேலூர் தவிர்த்த மற்ற தொகுதிகளின் எம்.பி. தேர்தல் ஏற்படுத்திய அலர்ஜி அப்படி.
சோ.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்
திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் போல ஆம் ஆத்மிக்கு அன்னா ஹஸாரேவைக் கூற முடியுமா?
பெரியாரிடமிருந்து தி.மு.க. பிரிந்தது போல, அன்னா ஹஸாரேவிடமிருந்து கெஜ்ரிவால் பிரிந்து ஆம் ஆத்மி உருவாக்கியதை வைத்து கேட்கிறீர்கள். பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, சட்டமாக்கி, ஆட்சியையே பெரியாருக்கு காணிக்கை என அறிவித்தவர் அறிஞர் அண்ணா. அன்னா ஹஸாரேவிடமிருந்து பிரிந்த கெஜ்ரிவால், தனது ஆட்சிக்கான சட்ட அதிகாரம் என்ன என்பதை அறிய முடியாமலேயே திணறிக்கொண்டிருக்கிறார்.
வி.கார்மேகம், தேவகோட்டை
கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத் தம்பதிகளை உடனடியாக தமிழக அரசு அங்கீகரித்து விருது வழங்கியிருக்கிறதே?
அரசின் வேகத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் தற்காப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நெல்லைமாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரை கொலைவெறியுடன் கொள்ளையர்கள் தாக்குவதையும், சண்முகவேலுவும் அவர் மனைவி செந்தாமரையும் சளைக்காமல் போராடி கொள்ளையர்களை விரட்டியதையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிப்படுத்தியபோது மெய்சிலிர்த்தது. அந்த மூத்த தம்பதியினர், இன்றைய இளந்தலைமுறைக்கு துணிச்சலாக வழிகாட்டியுள்ளனர்.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
ஒவ்வொரு மனிதனுக்கும் அதிக ஆசை வர காரணமாக இருப்பது நாம் கற்றுத்தரும் கல்வி முறையிலா?
கல்வி முறையில் பாடத்தையே ஒழுங்காகக் கற்றுத் தருவதில்லை என்கிற விமர்சனம்தானே அதிகம். இன்ன உணவுதான் சாப்பிடவேண்டும், அதைத் தவிர்த்து அவரவர் விருப்பத்திற்கு சாப்பிடுபவர்களை அடித்து உதைத்து கொலை செய்ய வேண்டும் எனக் கற்றுக் கொடுத்தது பள்ளிக்கூடமா? அப்படிக் கொல்லப்பட்டவர் தொடர்பான விசாரணையில் மெத்தனமாக இருக்கக் கற்றுக் கொடுத்தது கல்வி நிலையங்களா? குற்றவாளிகள் விடுதலையாகும் வகையில் தீர்ப்பளிக்கக் கற்றுத் தந்தது கல்லூரிகளா? ராஜஸ்தானில் மாட்டுக்கறி விவகாரத்தில் பெஹ்லூகான் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது யாருடைய ஆசையைத் தீர்க்க நாம் இன்னும் உயிரை சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
_____________
காந்திதேசம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
காஷ்மீர் விவகாரத்தில் காந்திஜியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, சுதந்திரம் வழங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் போக்கை காந்தி ஆதரிக்கவில்லை. சுதந்திரம் பெற்றபோது காஷ்மீர் பகுதி இந்தியாவுடனும் இல்லை பாகிஸ்தானுடனும் இல்லை. அது தனி சமஸ்தானமாக இருந்தது. ஆட்சி செய்த மன்னர் ஹரிசிங் இந்து, பெரும்பாலான மக்கள் முஸ்லிம். அதனால், பாகிஸ்தான் அதனைத் தனதாக்க நினைத்தது. மன்னர் ஹரிசிங்கும் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவும் இந்தியாவின் மீது பார்வையைத் திருப்பினர். ஐ.நா. வரை காஷ்மீர் விவகாரம் சென்றது. எந்த நேரத்திலும் இருநாடுகளுக்கும் போர் ஏற்படலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
அந்த நிலையில், 1948ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் டெல்லியில் வழக்கமான மாலை நேர வழிபாட்டுக் கூட்டத்தில் பேசிய காந்தி, "காஷ்மீர் விவகாரத்தில் உரிய முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால், இரு நாடுகளுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. பாகிஸ்தான் தலைவர்கள் ஸஃபருல்லா கானும், லியாகத் அலிகானும் நீண்ட விளக்கத்தை தந்திருக்கிறார்கள். தாங்கள் செய்வது சரி என்று அவர்கள் சமாதானமடைகிறார்கள். காஷ்மீர் எல்லைக்கு வெளியே படைகள் தாக்குதல் நடத்தினால், அது பாகிஸ்தானின் கண்டும் காணாத செயல்பாட்டின் விளைவே ஆகும். சுமுகமான பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு என்பதை பாகிஸ்தான் தலைவர்களும் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் வரமாட்டேன் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுவதன் வாயிலாகவே இப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். பாகிஸ்தான் தலைவர்களை அழைக்க வேண்டும். அவர்கள் வரவேண்டும். பிரச்சினை குறித்து விவாதித்து ஓர் உடன்பாட்டுக்கு வருவோம் என்பதுதான் என் வழியாகும்'’என்று பேசிய காந்தி, டெல்லிப் பகுதியிலேயே இந்து-முஸ்லிம் ஒற்றுமையின்றி ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவது குறித்த கவலையையும் கண்டிப்பையும் அந்த வழிபாட்டுக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். காந்தி கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக நடந்த கூட்டம் இது.