பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
தபால் அலுவலகங்களில் அஞ்சல் அட்டைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே?
மாவலியிடமிருந்து வாசகர்களைப் பிரிக்கும் வெளிநாட்டு சதியாக இருக்கலாம். மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
திருப்பதி வெங்கடாசலபதி -காஞ்சி அத்திவரதர் ஒப்பிடவும்?
திருப்பதியார் மலை மேலே இருப்பவர். காஞ்சிபுரத்தார் தண்ணீரில் இருந்தவர். இருவருமே பெருமாளின் திருக்கோலத்தவர். பக்தர் கூட்டத்தை ஈர்ப்பதில் நீண்ட கால சாதனை படைத்து வரும் திருப்பதியாருக்கு கடந்த சில வாரங்களாக கடுமையான சவாலை உருவாக்கியிருக்கிறார் காஞ்சிபுரத்தார். திருப்பதியாரை முருகனின் சாயலாகப் பார்க்கிறார்கள் சைவ நெறியாளர்கள். காஞ்சிபுரத்தாரை புத்தரின் சயனக் கோலத்தின் பரிணா(நா)மமாகக் காண்கிறார்கள் ஆய்வாளர்கள். திருமகள் உடனுறையும் கடவுள் என்பதால் திருப்பதியாரையும் காஞ்சிபுரத்தாரையும் தரிசனம் செய்ய வருவோர் மூலமாக செல்வம் குவிகிறது. திருப்பதியாரை தரிசிப்பதாக இருந்தாலும், காஞ்சிபுரத்தாரை தரிசிப்பதாக இருந்தாலும் சாதாரண மக்களுக்கு பெரும் வரிசை, வி.ஐ.பி.க்களுக்கு தனி வரிசை எனப் பிரிக்கப்படுகிறார்கள். இருவரின் அருகிலும் நெருங்கி பூசை செய்வோர் மட்டும் ஒரே வரிசையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
காஷ்மீர்: இது துணிச்சலான முடிவா? ஆபத்தான முடிவா?
அவசரமான முடிவு. அதன் விளைவுகள் தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலைக்கும், நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலைக்கும் உள்கட்சிப் பூசல்களே முதன்மைக் காரணமாக இருக்கிறதே?
அதிகாரப் போட்டியும் அதை அடை வதற்கான முயற்சிகளும் எல்லா பெரிய கட்சி களிலும் நடப்பதுதான். தி.மு.க.வில் அது அளவுக்கதிகமாக இருப்பதுடன், தங்களை மீறிய செல்வாக்கான நபர்கள் கட்சிக்குள் உரு வாகிவிடக்கூடாது என்ற எண்ணம் வளர்ந்துள் ளது. கட்சியில் செல்வாக்கானவர்களுடன் நெருங்கி இருந்தவர்களால் உயிர் பறிக்கப்பட்டவர், தா.கிருஷ்ணன். தன்னுடைய செல்வாக் கால் மற்றவர் செல்வாக்கு பெறமுடியாமல் செய்கிறார் என்ற கோபத்தில் கொல்லப்பட்டி ருக்கிறார் உமாமகேஸ்வரி என்கிறது முதல் கட்ட புலனாய்வு. ஓர் இயக்கத்திற்கு வெளிப்பகையைவிட, பாழ் செய்யும் உட்பகையே மிகப் பெரிய ஆபத்தாகும்.
லட்சுமிதாரா, வேலூர்(நாமக்கல்)
கை கால் எலும்புகள் உடைந்துவிட்டன. மாவுக்கட்டுப் போட ஒரு நல்ல இடம் சொல்லுங்களேன்?
உடைந்த கை காலுக்கு மாவுக்கட்டுப் போடும் சரியான இடம் தெரியவில்லை. கை காலை உடைத்து மாவுக்கட்டுப் போட வேண்டும் என்றால் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளவும்.
___________
காந்திதேசம்
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில் இருவரிடையிலான உறவு எப்படி இருந்தது?
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு காந்தியின் அகிம்சை போராட்டம் பெரும் இம்சையாகத் தெரிந்தது. காந்தியையும் இந்தியாவையும் குறைத்து மதிப்பிடுவதும் விமர்சிப்பதும் சர்ச்சிலின் வழக்கமாக இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி, தென்னாப்பிரிக்காவுக்கு வழக்கறிஞராக சென்றபோது, அங்கேதான் சர்ச்சிலும் காலனி நாடுகள் தொடர்பான துறையின் துணைச் செயலாளராக இருந்தார். தென்னாப் பிரிக்க இந்தியர்களின் உரிமைக்காக வாதாடும் வழக்கறிஞ ராக 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்ச்சிலை சந்தித்துள்ளார் காந்தி. அப்போது அவர் கோட் சூட், டை அணிபவராக இருந்தார். அதன்பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தும்போது இடுப்பில் வேட்டி, மேலே ஒரு துண்டு (எ) கதராடைக்கு மாறிய காந்தியைத்தான், ‘"அரை நிர்வாணப் பக்கிரி'’ என விமர்சித்தார் சர்ச்சில். ஆனால், அந்த அரை நிர்வாணக் கோலத்தில்தான் 1931-ல் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்குச் சென்று பங்கேற்றார் காந்தி. 3 மாதங்கள் இங்கிலாந்தில் இருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவில் அதே காந்தியை சந்தித்தது குறித்து, சர்ச்சிலுக்கு நினைவிருந்ததா எனத் தெரியவில்லை எனக் குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.
உப்பு சத்தியாகிரகம் மூலம் காந்திக்குப் பெருகிய மக்கள் ஆதரவு சர்ச்சிலை எரிச்சலூட்டியது. "இந்தியர் களும் அவர்களது வாழ்க்கை முறையும் மிருகத் தனமானவை. அதில் எல்லாரையும் விட பெரிய மிருகம் காந்தி' என விமர்சித்திருக்கிறார். "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை காந்தி தீவிரப்படுத்தியதும், சிறையிலிருந்தபடியே தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததும் சர்ச்சிலுக்கு சந்தேகத்தை உண்டாக்கி யிருக்கிறது. பிரிட்டனுக்கு எதிரான அச்சு நாடுகள் கூட்டணியில் உள்ள ஜப்பானுக்கு ஆதரவாக காந்தி செயல்படுகிறாரா என உளவு பார்த்து தகவல் அனுப்பச் சொல்லியிருக்கிறார் சர்ச்சில். அதுமட்டுமின்றி, உண்ணாவிரதத்தின் போது குளுகோஸ் கலந்த தண்ணீரைக் குடித்து தெம்பு ஏற்றிக் கொள்கிறாரா என்றும் இந்திய கவர்னர் ஜெனரலிடம் விசாரித்துள்ளார். இரண்டும் பொய் என சர்ச்சிலுக்கு தகவல் சொல்லப் பட்டாலும், கடைசிவரை காந்தி மீதான சந்தேகப் பிராணியாகவே இருந்துள்ளார்.