சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்
மு.க.ஸ்டாலினுடன் ஒத்துப் போகும் பட்சத்தில் மு.க.அழகிரியும் எம்.எல்.ஏ. மந்திரி என்றாவதற்கு இனி வாய்ப்புண்டா?
கலைஞரின் மகன்கள் என்ற கட்டத்தைக் கடந்து, கலைஞரின் பேரன்கள் என்கிற நிலை வந்து விட்டது. ஸ்டாலின் -அழகிரி என்பதைத் தாண்டி, உதயநிதிக்கும் கலைஞரின் மற்ற பேரன்களுக்குமான உறவு எப்படி இருக்கும் என்று யோசிக்கின்ற காலம் இது.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
"அ.தி.மு.க.வுடனான கூட்டணி எல்லாத் தேர்தல்களிலும் தொடரும்' என்கிறாரே ராமதாஸ்?
கார் உள்ளவரை கடல் நீர் உள்ளவரை என்பது போல "மானே, தேனே, பொன்மானே' அனைத்தும் போட்டுக் கொள்ளவும்.
நித்திலா, தேவதானப்பட்டி
மாவலியை அண்மையில் கலங்க வைத்த மரணம்?
எல்லா மரணங்களும் ஏதோ ஒரு வகையில் மனதைக் கலங்க வைக்கின்றன. இந்திய அரசியலில் பழமைவாதப் பிடிப்புள்ள பா.ஜ.க. கட்சியில் தனக்கான இடத்தைத் தக்கவைத்து, வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜின் மரணம் தமிழ்நாட்டில் உள்ள பலரையும் கலங்க வைத்தது. தமிழக மீனவர்கள், வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழர்கள் ஆகியோரை அவர் மீட்டதே இதற்கு காரணம். அதே நாளில் இன்னொரு மரண மும் கலங்க வைத்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆரம்பகட்ட அரசியல் வளர்ச்சியில் துணை நின்றவ ரும், பல இளைஞர்களின் அரசியல் முன்னேற்றத் திற்குப் படிக்கட்டாக இருந்தவருமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த "ஆயிரம்விளக்கு' உசேனின் மரணம்தான் அது. ஆயிரம்விளக்குப் பகுதியில் நடந்தே சென்று கட்சிப் பணியாற்றியவர். கூரை வேய்ந்த குடிசை வீடுதான் அவரது இல்லம். "உசேனுக்கு ‘அடுப் படியும் அதுதான்... அந்தப்புரமும் அதுதான்' என இலக்கிய நயத்துடன் சொன்னவர் கலைஞர். அவரது உழைப்பைப் பார்த்து, கட்சி சார்பில் ஸ்கூட்டர் வாங்கித் தந்தார் மு.க.ஸ்டாலின். கட்சியில் பல பொறுப்புகளை வகித்தபோதும், தலைமையின் உத்தரவுகளை நிறைவேற்றுவது ஒன்றே தன் கடமை என செயலாற்றி போராட்டம், சிறை அனைத்தையும் அனுபவித்து, கடைசிவரை எளிய வாழ்வு வாழ்ந்த ஆயிரம் விளக்கு உசேன் இன்றைய அரசியலில் ஆயிரத்தில் ஒருவர்.
அ.குணசேகர், புவனகிரி
சந்திராயன் 2 வெற்றி?
இந்திய அறிவியலாளர்களின் சாதனையில் மற்றுமொரு மைல்கல். இதுவரை நிலாவில் கவனிக்கப்படாத திசை நோக்கி, சந்திராயன்-2 ஏவப்பட்டது பாராட்டுக்குரியது. இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர் என்பதும், சந்திராயன்-2 திட்டத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் தமிழர்கள் என்பதும் நிலவைத் தொடுவது போன்ற நம்பிக்கையை இளைய தலைமுறைக்கு தரக்கூடிய செய்தியாகும்.
எம்.முஹம்மது ரபீக், ரஷாதீ
"நாங்கள் பிறவியிலேயே ரவுடிகள்' என்கிறார்களே அ.தி.மு.க. அமைச்சர்கள்?
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது ஆசிட் வீசச் செய்த கட்சித் தலைமையின் கீழ் வளர்ந்தவர்களாயிற்றே!
____________
காந்தி தேசம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
காந்தியின் பெற்றோர் யார்? அவர்களின் பூர்வீகம் என்ன?
சபர்மதி ஆசிரமத்தில் காந்தி முன்னோர்களின் குடும்ப வரைபடம் உள்ளது. அதன்படி, லால்ஜி காந்தி என்பவரில் தொடங்கி அவரது மகன் ராம்ஜி காந்தி, அவரது மகன் ரகிதாஸ் காந்தி எனத் தொடர்கிறது. ரகிதாஸின் மூத்த மகன் ஹர்ஜிவன் காந்தியின் மகன் உத்தம்சந்த் காந்தியின் இரண்டாவது மனைவி லட்சுமிமா என்பவருக்குப் பிறந்தவர் கரம்சந்த் காந்தி. அவரது நான்காவது மனைவியான புத்லிபாய்க்குப் பிறந்த குழந்தைகளில் கடைசிக் குழந்தைதான் மோகன் தாஸ். அவர்தான் மகாத்மா காந்தி. அவருடன் பிறந்தவர்கள் லட்சுமிதாஸ், ரலியாத்பென், பென், கர்சன்தாஸ் ஆகியோராவர். முதல் மூன்று மனைவியரும் பிரசவத்தின் போது இறந்த கார ணத்தால், கரம்சந்த் காந்திக்கு நடந்த நான்காவது திருமணம் மூலம் மனைவியானவர்தான் காந்தியின் தாய் புத்லிபாய். இந்து மதத்தில் மோத் என்ற பிரிவைச் சார்ந்தது காந்தியின் குடும் பம். அது, குஜராத் மாநிலத்தின் கடற்கரை நகரமான போர்பந்தரில் வசித்து வந்தது. வெகு தொலைவிலிருந்து போர்பந்தர் துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்ததால், வணிகம் செழித்த நகரமாக இருந்தது. காந்தியின் மூதாதையர் நிர்வாகத் திறனும் ஒழுக்கமும் கொண்டவர்கள். காந்தியின் தாத்தா உத்தம்சந்த், போர்பந்தரின் திவானாக இருந்தவர். அவருக்குப் பிறகு காந்தியின் அப்பா, கரம்சந்த் என்கிற காபா காந்தி அந்தப் பொறுப்புக்கு வந்தார். மிகக்குறைந்த அளவிலேயே படித் திருந்தாலும் எதையும் புரிந்து கொள்ளும் அறிவும் அனுபவமும் அவருக்குப் பெயர் வாங்கித்தந்தது. அவரது மனைவியும் காந்தியின் அம்மாவுமான புத்லிபாய் மதச் சடங்குகளில் தீவிர நம்பிக்கை கொண்டவர். தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுவார். அன்பும் மனஉறுதியும் கொண்ட அவ ரிடம் பலரும் ஆலோசனை கேட்பது வழக்கம். காந்திக்கு இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை சிறுவயதில் எடுத்துக்கூறி உண்மை, அகிம்சை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியவர் புத்லிபாய்தான். பெற்றோரின் செல்வாக்கைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வாரிசு அரசியல் உலகில், தன்னைப் பெற்றவர்களுக்குப் பெருமைத் தேடித் தந்தவர் காந்தி.