பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

கர்நாடகா கூத்தைப் பார்த்தால் ஒரே தேசம், ஒரே ஆட்சியும் வந்துவிடும் போலத் தெரிகிறதே?

ஒரே தேசம் -ஒரே தேர்தல் -ஒரே ரேஷன்கார்டு -ஒரே ஆட்சி என்பதெல்லாமே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கைகள்தான். கர்நாடகா ஒரு சாம்பிள்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)

Advertisment

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஹீரோ -வில்லன் -காமெடியன் யார், யார்?

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும் எதிர்க்கட்சியான தி.மு.க.வும் பெரியளவில் மோதிக் கொள்ளாமல் பிரச்சினைகளை எழுப்புவதும், அது குறித்து ஆளுந்தரப்பு பதில் அளித்ததும் விவாதம் முடிந்துவிடுவதுமாக அமைந்தது. விக்ரமன் படத்தைப்போல மெயில் வில்லன் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. பெரிய ஹீரோவும் இல்லை. வழக்கம்போல, வாக்களித்த மக்கள் காமெடியர்களாக்கப் பட்டார்கள்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்

Advertisment

பாரதிராஜா இயக்கி, பல தேசிய விருதுகளைப் பெற்ற "முதல் மரியாதை' படம் ரீ-மேக் செய்யப்பட்டால் சிவாஜி-ராதா கதாபாத்திரத்தில் யார் பொருத்தமாக இருப்பார்கள்?

மம்முட்டி-ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகுமார்-சமந்தா, பிரபு-நயன்தாரா, விஜய்சேதுபதி -"பிக்பாஸ்' லாஸ்லியா என இன்றைக்குள்ள தொழில்நுட்பத் தில் இந்த ஜோடிகளில் எவரையேனும் "முதல் மரியாதை' ரீமேக்கிற்கு முயற்சிக்கலாம். ஆனாலும், பாரதிராஜா உணர்வுப்பூர்வமாக இயக்க, அதில் நடிக்காமல் நடித்து, கதாபாத்திரமாக வாழ்ந்த "நடிகர் திலகம்' சிவாஜிக்கும் ராதாவுக்கும் ரசிகர்களிடமும் தேசிய அளவிலும் கிடைத்த முதல் மரியாதை கிடைக்குமா?

dadf

தூயா, நெய்வேலி

"ஜெய்ஸ்ரீராம்' என்று சொல்லாததால் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை என்னவென்று சொல்வது?

மதம் என்பது யானைக்கு மட்டுமல்ல, மனிதர்களைப் பிடித்தாலும் ஆபத்துதான். "ஓம் இரணியாய நமஹ' என்று தன்னைப் போற்றிச் சொல்லச் சொன்ன அதிகாரக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்கத்தான்... நரசிம்ம அவதாரம் எடுத்த திருமால், அந்த அரசனின் குடலை உருவி உயிரைப் பறித்தார்' என்று புராணம் சொல்கிறது. அதிகாரம் தலைக்கேறியிருப்பதால், "ஜெய்ஸ்ரீராம்' சொல்லாதவர்கள் சொந்த மதத்தினராக இருந்தாலும், பிற மதத்தவராக இருந்தாலும் உயிர் பறிக்கப்படுவது கொடூரநிகழ்வாக மாறியிருக்கிறது.

ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்

தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால்தானே, மாணவர்கள் கைகளில் பட்டாக்கத்தியை தூக்குகிறார்கள்?

பள்ளி ஆசிரியர்கள் கையில் குச்சி இருந்த காலத்தில், கல்லூரிகளில் இத்தனை மாணவர்கள் படித்து பட்டதாரியாகவில்லை. இத்தனை மருத்துவர்கள், இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள் உருவாகவில்லை. கல்லூரி மாணவர்கள் கத்தியைத் தூக்குவதற்கு காரணம், பள்ளி ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால் அல்ல. ஆசிரியர்-மாண வர் இடையிலான உறவு பள்ளி வளாகத்திலேயே சரியாகப் பேணப்படாததும், பள்ளிக்கு வெளியே சூழ்ந்துள்ள சமூகக் கேடுகளும்தான். கல்வி என்பது வேலைக்கானது என்கிற மனநிலை குடும்பத்தில் தொடங்குகிறது. ஆசிரியர் பணி என்பது சம்பளத் திற்கானது மட்டுமே என்ற எண்ணம் பல வழிகளிலும் வேலை வாங்கியவர்களின் மனதில் நிறைந்துவிட்டது.

______________

காந்தி தேசம்

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

மகாத்மா காந்தி -வ.வே.சு. அய்யர் இடையிலான பந்தபாசம் எவ்வாறு ஏற்பட்டது?

உலக வரலாற்றாசிரியர்கள் கி.மு. -கி.பி. எனக் குறிப்பிடுவது போல, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை காந்திக்கு முன் -காந்திக்குப் பின் எனப் பிரித்துக்கொள்ளலாம். காந்திக்கு முன் கோபால கிருஷ்ண கோகலே வழி, பாலகங்காதர திலகர் வழி என இரு வகை செயல்பாடுகளும் அவற்றிற்கான ஆதரவாளர்களும் இருந்தனர். இதில் திலகர் வழியில் தமிழ்நாட்டில் வ.உ.சி., பாரதியார், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் இருந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் வ.வே.சு.அய்யர். காந்தியைப் போலவே லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்ற இவர், இங்கிலாந்திலேயே பிரிட்டிஷாருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட விடுதலை வீரர்களுடன் தொடர்பில் இருந்தார். பிரிட்டிஷ் அதிகாரி கொலையில் மதன்லால் திங்க்ரே என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கிலாந்து போலீசார் வ.வே.சு. அய்யரையும் கைது செய்யத் திட்டமிட்டனர். தந்திரமாகவும் தைரியமாகவும் தப்பிவந்தவர், புதுச்சேரியில் தங்கியிருந்தபோதும் கண்காணிப்புக்குள்ளானார். தீவிரவழியில் செயல்பட்ட பலர், பின்னர் ஆன்மிக வழிக்கு மாறினர். ஆன்மிகவாதியான வ.வே.சு. அய்யர் காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றினார்.

"சபர்மதி' ஆசிரமத்தின் தன்மையும் அதிலிருந்தவர் களின் வாழ்க்கையும் காந்தி மீது வ.வே.சு.அய்யருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சென்னைக்கு வந்து "தேசபக்தன்' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். அதில் வெளியான ஒரு கட்டுரைக்காக அவர் ராஜதுரோக குற்றச்சாட்டில் சிறை சென்றார். விடுதலையான பிறகும் காந்திய வழியில் பயணித்தார். 1922-ல் சேரன்மாதேவியில் ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும் அமைத்தார். அதில் பிராமண சிறுவர்களுக்கு தனியாக வும், மற்ற சாதி மாணவர்களுக்கு தனியாகவும் உணவு வழங்கப்பட்டதால், அதற்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து வழங்கப்படும் நிதியை நிறுத்த வேண்டும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்களான பெரியார், வரதராஜுலு உள்ளிட்டோர் காந்தி வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காந்திக்கும் வ.வே.சு.அய்யருக்குமான நம்பிக்கையான உறவு, பெரியார் உள்ளிட்டோரை காங்கிரசிலிருந்து வெளியேறச் செய்தது.