வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறாரே?
எந்தப் பதவியும் எந்த வேலையும் இல்லையென்றால் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற மனநிலைக்கு பலரும் வந்திருக்கிறார்கள். முன்னாள் நீதிபதி கர்ணன் ஏற்கனவே சக நீதிபதிகள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியவர்; சர்ச்சைகளுக்குள்ளானவர். தற்போது "ஊழலுக்கு எதிரான மாற்றுக் கட்சி' என புதிய கட்சிக்குப் பெயர் வைத்திருக்கிறார். ஊடகங்கள் மிகுந்துள்ள சூழலில் அவரது அரசியல் சர்ச்சைகளும் கவனம் பெறும்.
தூயா, நெய்வேலி
"கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் உடற்தகுதி போட்டியில் ஈடுபடத் தயார்' என சவாலை ஏற்றிருக்கிறாரே பிரதமர் மோடி?
உடலளவிலும் மனதளவிலும் தகுதியுடன் இருப்பது நாட்டை ஆள்பவருக்குரிய சிறப்பம்சம்தான். ஆனால் அது போட்டியாகவோ சவாலாகவோ அமையவேண்டியதில்லை. பிரதமர் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் ஏராளம். மக்கள் நலன் -நாட்டின் முன்னேற்றம் -கொடுத்த வாக்குறுதிகள் என அத்தனை சவால்களிலும் தோற்றுக்கொண்டிருக்கும் பிரதமர், ஒரு கிரிக்கெட் வீரரின் சவாலை ஏற்பது விளையாட்டுத்தனமாக உள்ளது.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
எடியூர்"அப்பா'வை மாற்றி "குமார'சாமியை முதல்வராக்கியதால், கர்நாடகாவின் இறையாண்மை காப்பாற்றப்பட்டு, ஜனநாயக சந்தனம் கமழுமா?
தேர்தல் அரசியலை சாக்கடையாக்கிய பிறகு, சந்தனம் எங்கிருந்து கமழும்? எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பது மட்டுமே இப்போதைய தேர்வுக்கான காரணம்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
இந்த சிறுவயதிலேயே நடிகையர் திலகமாக அசத்தியிருக்கிறாரே கீர்த்தி சுரேஷ்?
குருவி தலையில் பனங்காயை வைத்தார்கள். அதை கிரீடமாக மாற்றி சூடிக்கொள்ளும் லாவகமும் பக்குவமும் அந்தக் குருவிக்குத் தெரிந்திருக்கிறது. பெயரிலேயே கீர்த்தி இருப்பதால், கறுப்பு-வெள்ளை காலத்து நாயகி சாவித்திரியை, வண்ணப்படமாக வார்த்தெடுத்துள்ளார் இளம் நடிகை.
எஸ்.பூவேந்த அரசு, பொன்நகர், சின்னதாராபுரம்
குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொரு கட்சியில் இருப்பதுதானே குடும்ப வளர்ச்சிக்கு நல்லது?
நாங்கள் பாரம்பரியமாக அதே கட்சியில் இருக்கிறோம் என்பவர்கள் கொள்கைப் பற்றாளர்கள். அப்பா ஒரு கட்சி, மகன் ஒரு கட்சி, சகோதரன் -சகோதரி இன்னொரு கட்சி என இருப்பவர்கள் கச்சிதமான காரியவாதிகள். அவர்கள் கொடிதான் இப்போது வேகமாகப் பறக்கிறது.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
"அரசியல் விளையாட்டுக் களத்தில் அ.தி.மு.க.வில் உள்ள அனைவருமே சூப்பர் சீனியர்கள்' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?
ஜூனியர் பிளேயர்கள் என்றால் சீனியர்களாகும் வாய்ப்பு உள்ளது. சூப்பர் சீனியர்கள் என்றால், அடுத்துவரும் தேர்தல் விளையாட்டுக் களத்துடன் ரிடையர்டாகப் போகிறோம் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரோ அமைச்சர்!
அ.குணசேகரன், புவனகிரி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இன்னொரு ஜாலியன்வாலாபாக் படுகொலையா?
அது வெள்ளைக்கார ஜெனரல் டயர் நடத்திய சர்வாதிகாரம். இது கார் டயரைக் கும்பிட்டு ஆட்சிக்கு வந்தவர்களின் அரச பயங்கரவாதம்.
____________________
ஆன்மிக அரசியல்
திராதி, துடியலூர், கோவை
"பிள்ளையார் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்' எனக் கூறிய இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப் போடப்பட்டுள்ளதே?
தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகளின்படி, குறிஞ்சிநிலக் கடவுளாக முருகன், முல்லை நிலக் கடவுளாக மாயோன் (திருமால்), மருத நிலக் கடவுளாக இந்திரன், நெய்தல் நிலக் கடவுளாக வருணன், பாலைநிலக் கடவுளாக கொற்றவை ஆகியோர் வணங்கப்பட்டுள்ளனர். சிவன், காளி, மாரி மற்றும் பல சிறுதெய்வ-குலதெய்வ வழிபாடுகளும் இருந்துள்ளன. பிள்ளையார் வழிபாடு குறித்து சங்க இலக்கியக் குறிப்புகளில் இல்லை என்கிறார்கள் தமிழறிஞர்கள். பல்லவ மன்னன் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதி, வாதாபியை தலைநகராகக் கொண்ட சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்று திரும்பியபோது, அங்கிருந்த கடவுளான பிள்ளையாரையும் உடன் எடுத்து வந்து தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தார் என்பதே தமிழறிஞர்கள் கூற்று. "வாதாபி கணபதி' என்ற பக்திப் பாடலின் மூலம், பிள்ளையார் அங்கிருந்து இங்கு வந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இவற்றை மறுத்து, பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் பல்லவர் காலத்திற்கு முன்பே இருந்தது என்றும், சிந்து சமவெளி காலத்திலேயே இருந்துள்ளது என்றும் நிறுவ முயற்சிக்கிறார்கள். அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்றவர் புத்தர் என்பதால், அவரது சிலைகள் பலவும் அரசமரத்தடியில் நிறுவப்பட்டன. பின்னர் பவுத்தத்தை எதிர்கொண்டு வருணாசிரம இந்து மதம் பரப்பப்பட்டபோது, அரசமரத்தடியில் புத்தருக்குப் பதில் வைக்கப்பட்டதே பிள்ளையார் சிலை என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. பிள்ளையாரை வைத்து அரசியல் செய்வதும், பிள்ளையார் ஊர்வலம் மூலம் கலவரம் உருவாக்குவதும் அடிக்கடி நிகழ்பவையாகும்.