வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"சமஸ்கிருதம் இல்லாமல் இந்தியாவை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது' என்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்?

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் யாருக்கானது என்பதை மோகன் பகவத் பேச்சின் மூலம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77

Advertisment

வேலூர் தொகுதியில் இரட்டை இலையில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இனி அ.தி.மு.க. உறுப்பினர் என்பதுதானே சரி?

ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்போது, அதன் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும். அக்கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்ற "பி' படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், ஏ.சி.சண்முகம் இப்போது அ.தி.மு.க.தான். ஆனாலும், சட்டமன்றத் தேர்தலில் இதே முறையில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களான தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் தனி ஆவர்த்தனம் செய்வதுபோல ஏ.சி.சண்முகமும் அவ்வப்போது செயல்படலாம் தன்னுடைய வலிமைக்கேற்ப.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

Advertisment

தமிழக அரசின் கடன் தொகை 3 லட்சத்து 26 ஆயிரம் கோடியாமே?

தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் அரைலட்ச ரூபாய் கடனை ஏற்றி வைத்திருப்பதுதான் அம்மா வழி ஆட்சி. அந்த அம்மாவின் ஆட்சிதான் இத்தகைய அதிக கடனுக்கான தொடக்கம்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

நவம்பர் 1-ந் தேதி "தமிழ்நாடு தினம்' என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறாரே?

1956 நவம்பர் 1-ந் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் காரணமாக தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகியவற்றுக்கான பகுதிகள் அந்தந்த மாநிலங்களில் இணைக்கப்பட்டன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தனது வரலாற்று பெருமைமிகு போராட்டத்தின் வெற்றியாக தமிழ்நாட்டுடன் இணைந்தது. எனினும், நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, திருப்பதி என தனக்குரிய பல பகுதிகளை பிற மாநிலங்களிடம் தமிழ்நாடு இழக்க வேண்டியதாயிற்று. இதனை நினைவூட்டி, இழந்தவற்றை மீட்கும் நோக்குடன் "தமிழ்ச் சான்றோர் பேரவை' நிறுவனர் நா.அருணாசலம் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாள் "தமிழகப் பெருவிழா' நடத்திவந்தார். இருக்கின்ற உரிமைகளையே தக்கவைத்துக் கொள்ளாமல் "நீட்'டாக இழந்துகொண்டிருக்கிற எடப்பாடி பழனிச்சாமி அரசு, நவம்பர் 1-ந் தேதியை "தமிழ்நாடு தினம்' என அறிவித்திருக்கிறது.

sss

சி.கார்த்திகேயன், சாத்தூர்

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவு நாளான ஜூலை 21 அன்று தமிழ் சினிமா நடிகர்கள் அவரை நினைத்தார்களா?

சடங்கு சம்பிரதாயமாக நினைப்பது பெரிதல்ல. கடற்கரை சாலையில் கம்பீரமாக நின்ற நடிகர் திலகத்தின் சிலையை, அதே கம்பீரத்துடன் பொதுமக்கள் பார்வை படும்படி நிறுத்துவதற்கு முயற்சிப்பதே உண்மையான நினைவஞ்சலி.

___________

காந்தி தேசம்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

பிரதமர், ஜனாதிபதி போன்ற உயர்பதவிகள் காந்திக்குத் தரப்படவில்லையா? அல்லது அவர் கேட்கவில்லையா?

அத்தகைய பதவிகளைக் காந்தி விரும்பவில்லை என்பதுதான் உண்மை. காந்தியைப் பொறுத்தவரை தலைமைப் பொறுப்பில் இருப்பது என்பதைவிட, வழிநடத்துவது என்பதைத்தான் அவர் விரும்பினார். காங்கிரஸ் கட்சியை அவர் வழிநடத்திய காலத்திலும், 1924-ல் நடைபெற்ற பெல்காம் மாநாட்டை மட்டுமே அவர் தலைமையேற்று நடத்தினார். அதன்பிறகு நடந்த மாநாடுகளெல்லாம் காந்தியின் விருப்பத்திற்குரியவர்கள் தலைமை ஏற்று நடத்தும் வகையில் அமைந்தது. தன் தலைமையில் ஒன்று நடப்பதைவிட, தனக்கு விருப்பமானவர்களை வைத்து வழிநடத்துவதில் காந்தி முனைப்பாக இருந்தார். தனது விருப்பத்திற்குரியவர்களை அதிகாரத்திற்குக் கொண்டுவர முடியாமல் போனால், அது குறித்து தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்து, தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதிலும் அவர் உறுதியாக இருந்தார். எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுபாஷ்சந்திர போஸ் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்த பட்டாபி சீதாராமையா தோல்வியடைந்தார். காந்தியோ, "பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனது தோல்வி' என்று வெளிப்படையாகச் சொன்னதால், காங்கிரசிலிருந்து போஸ் வெளியேறவேண்டியதாயிற்று. காந்தி விரும்பியதே காங்கிரசில் நடந்தது.

அதிகாரம்மிக்க பதவிகளை காந்தி எதிர்பார்க்கவில்லை. அந்தப் பதவிகளில் யார் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். 1937-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காந்தியின் உத்தரவு கிடைக்கும்வரை, ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர் ஒப்புக்கொண்ட பிறகுதான், சென்னை மாகாணத்தில் ராஜாஜி முதல்அமைச்சர் ஆனார். அதுபோல மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அடுத்த சில ஆண்டுகளில், பிரிட்டிஷ் அரசுடன் காந்திக்கு ஏற்பட்ட முரண்பாடுகளால், காங்கிரஸ் அரசுகளை பதவி விலகச் சொன்னார். ராஜாஜி உள்ளிட்டவர்களும் அவர்களது அமைச்சரவையும் காந்தியின் உத்தரவுப்படி பதவி விலகியது. அதனால்தான், ராஜாஜி அரசு திணித்த கட்டாய இந்தியை பிரிட்டிஷ் அரசு ரத்து செய்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் பட்டேல் இருந்தாலும், நேருதான் பிரதமர் என முடிவெடுத்தவரும் காந்திதான்.