வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு

"பழனிச்சாமி முதல்வராக இருக்கும்வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்காது' என்ற முத்தரசன் பேச்சு?

பழனிச்சாமி அரசை மாற்றுவதற்கான தங்கள் கூட்டணியின் முயற்சி சரிவர நடக்காது என்பதற்கான ஒப்புதலோ!

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

Advertisment

"தமிழகத்திற்குள் ஹைட்ரோகார்பன் திட்டம் வராது' என்று ஸ்டாலினுக்கு சி.வி.சண்முகம் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளாரே?

அந்த அமைச்சர்தானே, நீட் தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்ததை நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சொன்னவர்? நீதிமன்றத்திலேயே உறுதிப்படுத்திவிட்டதே மத்திய அரசு! ஹைட்ரோகார்பனுக்கு அமைச்சர் விடும் சவாலுக்கு மத்திய அரசு எப்போது ஆப்பு அடிக்கப் போகிறதோ?

Advertisment

வி.கார்மேகம், தேவகோட்டை

தமிழக சபாநாயகர் தனபால், கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன வேறுபாடு?

சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி ஆட்சியாளர்களைக் காப்பதில் இருவருக்கும் மாறுபாடு இல்லை. தமிழ்நாட்டைக் காப்பதில் டெல்லி, வேலி. கர்நாடக அரசியலை மேய்வதில் அதே டெல்லி, ஆடு.

dd

நித்திலா, தேவதானப்பட்டி

"வேண்டாம்'’என்று பெயர் வைக்கப்பட்ட மாணவியை பெண் குழந்தைகளுக்கான கல்வித் திட்ட தூதராக அறிவித்திருக்கிறாரே திருவள்ளூர் கலெக்டர்?

திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரத்தில் பெண் குழந்தைகள் தொடர்ந்து பிறப்பதைத் தவிர்க்க, ‘"வேண்டாம்'’ என்ற பெயர் வைப்பது வழக்கம். அந்த கிராமத்தில் ஒரு தம்பதியருக்கு வரிசையாகப் பிறந்த மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகளானதால், மூன்றாவது குழந்தைக்கு ‘"வேண்டாம்'’ எனப் பெயர் வைத் தனர். ஆனால், நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாகத்தான் பிறந்தது. இந்நிலையில், "வேண்டாம்' என்ற பெயர் கொண்ட பெண் குழந்தை தன் பள்ளி, கல்லூரி படிப்பு களின்போது சக மாணவ-மாணவியரால் கிண்டலுக்குள்ளானார். தன் பெயரை மாற்றும் படி பெற்றோரிடம் வலியுறுத்தினார். இந் நிலையில், பொறியியல் படிப்பில் சிறப்பாக முன்னேறி, தானியங்கி கதவு ஒன்றை உருவாக்கியதால், ஜப்பான் நிறுவனம் அந்த மாணவியை ஆண்டுக்கு 22 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டது. அந்தப் பெண்ணை ஊக்குவிக்கும் வகை யில்தான், பெண் குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்திற்குத் தூதராக நியமித்திருக்கிறார் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி. தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் பிறந்தால் "வேண்டாம்' என்பது போலவே, "போதும்பொண்ணு', "வேம்பு' (கசப்பு) எனப் பெயர் வைக்கும் வழக்கம் இப்போதும் பல கிராமங்களில் தொடர்கிறது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

ஜோலார்பேட்டை-சென்னை?

யாகம் நடத்தினால் மழை வரும் என ஆன்மிகத்தை நம்பிய அரசு, ரயில் மூலமாகக் குடிநீர் கொண்டு வந்துதான் தாகம் தீர்க்க முடியும் என்ற அறிவியல் வழியில் தீர்வு கண்டுள்ளது.

வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு

கடுமையாக உழைக்கும் பலர் முன்னுக்கு வருவதில்லையே?

கடுமையாக உழைத்தால் கூலிக்குப் போராட வேண்டும். வியூகத்துடன் உழைத்தால் வரி ஏய்ப்பு செய்யும் அளவுக்கு முன்னுக்கு வரலாம். இதுதான் யதார்த்தம்.

____________

காந்திதேசம்

dd

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

"காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு எம்.பி.க்கள் பாதயாத்திரை நடத்த வேண்டும்' என மோடி அறிவித்துள்ளாரே, காந்தி மேற்கொண்ட விசேஷமான பாத யாத்திரைகள் எவை?

நடைபயணம் என்கிற பாதயாத்திரையில் காந்திக்கு ஆர்வம் அதிகம். பாதயாத்திரையும் உண்ணா விரதமும் அவரது அகிம்சை போராட்டக்களத்தின் ஆயுதங்களாக மாற்றப்பட்டன. 1930-ஆம் ஆண்டு 390 கி.மீ. பயணித்த உப்பு சத்யாகிரக தண்டி யாத்திரை மிகவும் பெயர் பெற்றது. காந்தி, தனது 61 வயதில் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரைவிட வயதில் குறைவானவர் களெல்லாம் நடப்பதற்குத் தடுமாறிய போது, காந்தியின் நடைவேகம் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பாதயாத்திரை சென்ற ஊர்களில் மக்கள் பெருமளவு திரண்டு யாத்திரையில் கலந்துகொண்டது பிரிட்டிஷ் அரசாங்கத்தை உற்றுப்பார்க்க வைத்தது.

காந்தியின் மற்றொரு முக்கிய மான பாதயாத்திரை, தீண்டாமைக்கு எதிராக 1933 நவம்பரில் தொடங்கி 1934 ஆகஸ்ட் வரை மேற்கொண்ட 12 ஆயி ரத்து 500 மைல்களுக்கான பாத யாத்திரையாகும். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற டாக்டர் அம்பேத்கர், பட்டியல் இன மக்களுக்கான தனித் தொகுதிகளை வலியுறுத்திய நிலையில், அதற்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் தனித்தொகுதி தர முன் வந்த நிலையில், காந்தியின் எதிர்ப்பு -எரவாடா சிறையில் அவர் மேற் கொண்ட உண்ணாவிரதம் ஆகியவற் றால் காந்தி -அம்பேத்கர் இடையிலான புனா ஒப்பந்தம் ஏற் பட்டது. பட்டியல் இன மக்களின் அதிருப்தியை தணிக்கவும், தீண் டாமைக்கு எதிராகவும் காந்தி மேற்கொண்ட இந்த பாத யாத்திரை பல கிராமங்களை நோக்கிய தாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த மேல்சாதியினரே இதில் முழு உடன்பாடு கொண்டிருக்கவில்லை. காந்தியின் வார்த்தைகளை மீற முடி யாமல் பங்கேற்றனர். காந்தி கடைப் பிடித்த பாதயாத்திரையை பின்னர் பூமிதான இயக்கத்திற்காக வினோபா மேற்கொண்டார். அண்மையில், ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிகரமான பாதயாத்திரை அவரை ஆந்திர முதல்வராக்கிய நிலையில், காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி எம்.பி.க்களை பாதயாத்திரை மேற் கொள்ளச் சொல்லியிருக்கிறார் மோடி.