கௌசிக், திண்டுக்கல்
நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மீதே சந்தேகம் வருகிறதே?
சந்தேகம் மட்டும்தானா வருகிறது? மத்திய அரசுடன் சேர்ந்து "கூட்டுச் சதி' செய்திருப்பதல்லவா அம்பலமாகியுள்ளது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"அமேதியில் ஏற்பட்ட தோல்விக்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகளே காரணம்' என்ற ராகுலின் பேச்சு?
வயநாடு வெற்றிக்கும் அங்குள்ள நிர்வாகிகள்தான் காரணம் என ஒப்புக்கொள்வாரா ராகுல்? வெற்றிக்கும் தோல்விக்கும் நிர்வாகிகள்தான் காரணம் என்றால், அதற்கும் முழுப்பொறுப்பு அவர்களை நிர்வகிக்கின்ற இடத்தில் இருக்கின்ற தலைவர்தான்.
ஜெயசீலன், அயன்புரம், சென்னை
புத்தகக் காட்சியில் பெரியார் நூல்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, காஞ்சிபுரத்தில் அத்திவரதரைக் காண பெருங்கூட்டம் திரள்கிறது. இது முரண்பாடில்லையா?
எல்லா வகை சிந்தனைகளும் கலந்ததுதான் உலகம். முரண்பாடுகளின் உரசலில் இருந்து பிறக்கும் தெளிவுதான் அவரவர் வாழ்க்கை. பொதுவாக, படிக்க விரும்புவோரைவிட பார்க்க விரும்புவோர் ஏராளமாக இருப்பது உலக இயல்பு. எளிமையாகச் சொல்வதென்றால், பார்ப்பதற்காக ஈர்ப்பவர் பெயர் அத்திவரதர். படிப்பதற்கு அழைப்பவர் பெயர் புத்திவரதர்.
மணிவண்ணன், விருதுநகர்
கிரிக்கெட் உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தாலும் நியூசிலாந்தின் மதிப்பு கூடியிருக்கிறதே?
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், எதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் தனிப்பட்ட வீரர்கள் அல்லது ஒட்டுமொத்த அணியின் சாதனை அடங்கியிருக்கிறது. கடைசிப் பந்துவரை போராடிய நியூசிலாந்து அணியின் மதிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்ல, அதனை வென்று கோப்பையை முதன்முதலாகப் பெற்றுள்ள இங்கிலாந்து அணியிடமும் உயர்ந்துள்ளது. அலெக்சாண்டரை எதிர்த்துத் தோற்றாலும் வரலாற்றில் நிலைபெற்றுள்ள போரஸ் மன்னனைப்போல!
ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்
பொதுத்தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டவர்கள் ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றம் செல்வதுதான் ஜனநாயகமா?
"அரசியலில் கடைசி நாள் என்று எதுவும் கிடையாது' என்றார் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படுவதை முற்றிலுமான நிராகரிப்பாகக் கருத முடியாது. இரண்டாவது இடம் பெற்றவரும் லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பெற்றவர்தான். 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணா தோற்கடிக்கப்பட்டார். ஆனால், அவரது தி.மு.க. சார்பில் 50 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றனர். தன் கட்சிக்கு மக்கள் அளித்துள்ள பலத்தைக் கொண்டு, மாநிலங்களவைக்குத் தேர்வாகி, திராவிடத்தின் குரலை இந்தியாவே அதிரும்படி ஒலிக்கச் செய்தார் அண்ணா. அரசியலமைப்புச் சட்டம் பல வாய்ப்புகளை வழங்குகிறது. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம், என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமானது. அதை மக்கள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
"அ.தி.மு.க. என்ற இயக்கம் நூறாண்டுகள் இருக்கும்' என ஜெயலலிதா சொன்னது எடப்பாடியை மனதில் வைத்துதான் என்கிறாரே சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன்?
சாருக்கு ஒரு மந்திரிப் பதவி... பார்சேல்ல்ல்...
___________
காந்தி தேசம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
காந்தியும் பெரியாரும் சந்தித்திருக்கிறார்களா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் பெரியார். கள்ளுக்கடை மறியல், கதர்த்துணி விற்பனை, ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் போராட்டம் என காந்தியிடமிருந்து வந்த உத்தரவுகளை ஏற்று முழுமையாகப் பெரியார் செயல்பட்டார். மாநிலத் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டுக்கு காந்தி வரும்போது உடனிருந்துள்ளார் பெரியார். ஈரோட்டில் உள்ள பெரியாரின் இல்லத்திற்கு காந்தி வந்திருக்கிறார். கள்ளுக்கடை மறியலில் மிகவும் தீவிரமாக செயல்பட்ட பெரியாரின் துணைவியார் நாகம்மை, சகோதரி கண்ணம்மை இருவரையும் காந்தி பாராட்டினார். அதுபோல, வைக்கம் போராட்டக் காலத்தில் , திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் பேசுவதற்காக காந்தியும் அங்கே வருகிறார். பெரியார் ஒரு இடத்திலும் காந்தி ஒரு இடத்திலும் இருக்கிறார்கள். திருவிதாங்கூர் ராணியுடன் காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின், "அரண்மனை முன்வைத்த சமாதானத் திட்டம் குறித்து, பெரியாரிடம் பேசிவிட்டுத் திரும்பி வருகிறேன்' என ராணியிடம் சொன்னவர் காந்தி. வைக்கம் மகாதேவர் கோவில் இருக்கும் தெருவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நடப்பதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் அனுமதித்திருப்பதையும், கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கக்கூடாது எனத் தெரிவித்திருப்பதையும் பெரியாரிடம் காந்தி சொன்னார். "இப்போதைக்கு இதனை ஏற்கிறேன்' என்ற பெரியார், "மக்களைப் பக்குவப்படுத்திய பின் கோவிலுக்குள் நுழைவதற்கான போராட்டத்தைக் கையில் எடுப்பேன்' என காந்தியிடம் தெரிவித்தார்.
இந்த சந்திப்புகளெல்லாம் காங்கிரசில் பெரியார் இருந்தபோது நடந்தவை. அதிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களைக் காந்தி கவனிக்கத் தவறவில்லை. தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள் பலர் பெரியாரின் இயக்கத்தில் இருப்பதை அறிந்து, அதுகுறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்துள்ளார். அதன்பின், பெங்களூருவில் காந்தியை பெரியார் சந்தித்ததும், இந்து மதத்தின் வருணாசிரமத்தின் கொடுமைகள் குறித்து உரையாடியதும்... அதில், காந்திக்கு இந்துத்வாவாதிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என அக்கறையுடன் எச்சரித்ததும் அந்த சந்திப்பின் மிக முக்கிய அம்சமாகும்.