கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6

நளினி தன் மகளின் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாத பரோல் கேட்ட நிலையில், ஒரு மாத கால அளவிற்கான பரோல் தந்திருக்கிறதே நீதிமன்றம்?

கர்ப்பிணியாக கைது செய்யப்பட்ட நளினிக்கு, சிறை வாழ்வில் பிறந்தவர்தான் அவர் மகள். அந்த மகளின் வாழ்வைக் கருதித்தான், நளினிக்கு 2000ஆம் ஆண்டிலேயே மரணதண்டனை என்பது ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 19 ஆண்டுகள் கழித்து, மகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது. சட்டங்களும் அதன் பார்வைகளும் விசித்திரமானவை.

எஸ்.ராமரத்தினம், குணசீலம்-621 204

Advertisment

"அ.தி.மு.க. ஆட்சி விரைவிலேயே வீழும்' என்று மு.க.ஸ்டாலின் எப்படி உறுதியாக கூறுகிறார்?

"விரைவில்' என்பதற்கு "இன்னும் இரண்டாண்டு காலம்' என்ற அர்த்தத்தில் உறுதியாகக் கூறியிருப்பாரோ என்னவோ!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

Advertisment

தன் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கின் தீர்ப்பில் "அதிகபட்ச தண்டனை கோரினேன்' என்கிறாரே வைகோ?

சுதந்திர இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சிக்காலத்தின் தேசத்துரோக சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவராகியிருக்கிறார், ஈழப்பிரச்சினையில் விடுதலைப்புலிகளை உறுதியாக ஆதரிப்பவரான வைகோ. 1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு வாதாட விரும்பாமல் அரசையும் சட்டத்தையும் நீதியையும் கேள்வி கேட்டுவிட்டு, "எவ்வளவு அதிகமான தண்டனையோ அதையும், சிறையில் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க முடியுமோ அதையும் உடனடியாக வழங்கி, வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து வைக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்' என்றார். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலான வைகோ அதனை இப்போது நீதிமன்றத்தில் முழங்கியிருக்கிறார்.

ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்

பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தானே, இந்தியா இங்கிலாந்திடம் வேண்டுமென்றே தோற்றது?

ஓ... இங்கிலாந்திடம் தோற்று, பாகிஸ்தானை தடுத்து, அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, ஓவருக்கு 5 என்ற ரன் ரேட்டைக்கூட எட்டமுடியாமல் நியூசிலாந்திடம் தோற்றது எந்த நாட்டுக்காக? இந்தியர்கள் பலரும் எதற்கெடுத்தாலும் மோடி அரசு போலவே காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தேவையில்லை என்றும் மழை நீர் சேமிப்பை சரியாக நிறைவேற்றினாலே தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்கிறார்களே?

மழை நீர், மலை நீர், ஆற்று நீர், ஏரி -குளம் -குட்டை நீர் எல்லாவற்றிலும் சரியான மேலாண்மையும் பராமரிப்பும் இருந்திருந்தால் கடல்நீரைக் குடிநீராக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அந்தநீரைப் பராமரிக்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள், தங்களின் வேலை -வசதி இவற்றிற்காக சென்னையில் குவிந்தபிறகு, சுற்றியிருந்த ஏரிகளெல்லாம் வீடுகளானால், கடல்நீரைத்தான் குடிநீராக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

_________

காந்தி தேசம்

mm

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

காந்திஜிக்கும் காமராஜருக்குமான நட்பு எப்படிப்பட்டது?

mm

காந்தியிடம் காமராஜருக்கு இருந்தது நட்பல்ல, கொள்கைப் பற்று+தொண்டு உணர்வு. ஆகஸ்ட் புரட்சி என்றழைக்கப்பட்ட 1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கப் போராட்டத்தின்போது காந்தி உள்பட இந்தியா முழுவதும் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சி நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. அந்த சமயத்தில் காந்தியுடன் முரண்பட்டிருந்தார் ராஜாஜி. காங்கிரசிலிருந்து விலகி, பிறகு மீண்டும் தனது "ராஜதந்திர' உத்தியின் மூலம் சேர்ந்திருந்தார். காந்தி அறிவித்த போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை வாழ்வை அனுபவித்து திரும்பிய காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். 1946ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி, சென்னை இந்தி பிரச்சார சபா விழா, மதுரை மீனாட்சியம்மன் கோவில் வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கினார் காந்தி. அவர் வருகின்ற தகவல், கட்சியின் மாநிலத் தலைவர் காமராஜருக்குத் தெரியாதபடி வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ராஜாஜி. ஆனாலும், காந்தி வருகையை அறிந்து, ரயில் நிலையத்திற்கு வந்த காமராஜர், காந்திக்கு முதல் மாலையை அணிவித்து ராஜாஜிக்கு அதிர்ச்சி தந்தார். ("காமராஜர் ஒரு சகாப்தம்' நூலில் கோபண்ணா) காந்தியின் பயணத்தின்போது, சென்னையில் நடந்த காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் காமராஜருக்கு மேடைக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டது. காந்திதான் இதைக் கவனித்து காமராஜரை மேடைக்கு அழைத்து, தலைமை தாங்கும்படி கூறினார். தமிழ்நாட்டில் காந்தி பயணித்த தனி ரயில் அச்சிறுப்பாக்கம், திருச்சி எனப் பல இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றது. அப்போது அவருடன் நெருக்கமாக நின்றவர் ராஜாஜி. அவரைப் பாராட்டி காந்தி பேசியதை, மக்கள் ரசிக்கவில்லை. இதை காந்தியும் புரிந்துகொண்டார். தமிழ்நாட்டுப் பயணம் முடித்து, வார்தா திரும்பியபிறகு, தனது "ஹரிஜன்' பத்திரிகையில், “"ராஜாஜிக்கு எதிராக ஒரு கும்பல் (ஸ்ரீப்ண்வ்ன்ங்) இருப்பதைக் கண்டு வேதனையடைந்தேன். இந்தக் கும்பல் செல்வாக்குள்ளதாகத் தோன்றுகிறது'’என காமராஜரையும் அவரது ஆதரவாளர்களையும் காந்தி விமர்சித்திருந்தார். ராஜாஜியுடனான நட்புக்காக காமராஜருக்கு காந்தி தந்த சான்றிதழ் இது. எனினும், "கறுப்புக் காந்தி' என்ற அடைமொழியுடன் காந்தியின் தொண்டராக, காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தவர் காமராஜர்.