ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
இப்போதைய திட்டம், ஒரே தேசம்-ஒரே தேர்தல், அடுத்தது ஒரே மதம்-ஒரே கட்சி என்பதுதானா?
முன்னது, நேரடியாகச் சொல்வது. பின்னது, முன்னதற்குள் அடங்கியது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
உலக அளவில் செல்ஃபிக்கு பலியானவர்களில் இந்தியர்களுக்குத்தான் முதலிடமாமே?
இந்தியாவில் வீட்டுக்கு ஒரு கழிவறைத் திட்டம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால், ஆளுக்கொரு செல்போன் என்பது பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாகிவிட்டது. அதில், செல்ஃபி மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது, பிரபலங்களைக் கண்ட வேகத்தில் செல்ஃபி எடுக்க முனைவது, ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அடுத்தவர்களை உசுப்பேற்றுவது இதில் நம் நாட்டவருக்கு ஆர்வம் அதிகம். பிரான்ஸை சேர்ந்த சுகாதார அமைப்பு ஒன்று, 2011 முதல் 2017-வரை கடற்பகுதியில் சுறா மீன்களின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் அதே காலகட்டத்தில் செல்ஃபி மோகத்தால் ஆபத்துக்குள்ளாகி உயிரி
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
இப்போதைய திட்டம், ஒரே தேசம்-ஒரே தேர்தல், அடுத்தது ஒரே மதம்-ஒரே கட்சி என்பதுதானா?
முன்னது, நேரடியாகச் சொல்வது. பின்னது, முன்னதற்குள் அடங்கியது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
உலக அளவில் செல்ஃபிக்கு பலியானவர்களில் இந்தியர்களுக்குத்தான் முதலிடமாமே?
இந்தியாவில் வீட்டுக்கு ஒரு கழிவறைத் திட்டம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால், ஆளுக்கொரு செல்போன் என்பது பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாகிவிட்டது. அதில், செல்ஃபி மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது, பிரபலங்களைக் கண்ட வேகத்தில் செல்ஃபி எடுக்க முனைவது, ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அடுத்தவர்களை உசுப்பேற்றுவது இதில் நம் நாட்டவருக்கு ஆர்வம் அதிகம். பிரான்ஸை சேர்ந்த சுகாதார அமைப்பு ஒன்று, 2011 முதல் 2017-வரை கடற்பகுதியில் சுறா மீன்களின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் அதே காலகட்டத்தில் செல்ஃபி மோகத்தால் ஆபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுள்ளது. சுறா மீன்களால் இறந்தவர்கள் 50 பேர். செல்ஃபியால் இறந்தவர்கள் அதைவிட 5 மடங்கு அதிகம். அதாவது, 250-க்கு மேல். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்கிறது அந்த ஆய்வு.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
அருண்மொழிவர்மன் ராஜராஜனாக மாறியதற்கும், நாராயணசாமி நெடுஞ்செழியனாக மாறியதற்கும் என்ன வேறுபாடு?
அரசாட்சித் தலைவரின் ஆளுமையை ஆரியம் அடகு பிடித்தது. அரசியல் தலைவரின் சுயமரியாதை, தமிழுணர்வை மீட்டெடுத்தது.
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
எட்டுக் கோடி மதிப்பிலான சந்திரபாபு கட்டிய "பிரஜா வேதிகா' என்ற அரசுப் பணிக்கான கட்டடத்தை இடித்து தள்ளிவிட்டாரே ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன்மோகன்?
தமிழ்நாட்டில் 300 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றவில்லையா? காழ்ப்புணர்வு என்பது தமிழ்நாட்டு ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் சொந்தமாக இருக்க வேண்டுமா? ஆந்திராவின் ஜெகன்மோகன்களுக்கு இருக்கக்கூடாதா?
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளாரே?
காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரசில் தலைவர் பதவியும் காலியாகக் கிடக்கிறது. பலமான பா.ஜ.க. அரசுக்கு முன்பாக காங்கிரஸ் என்ன நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து, மக்களிடம் நம்பிக்கையை விதைக்க வேண்டிய காங்கிரசின் எம்.பி.க்கள் மீசை மீது ஆசை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தூயா, நெய்வேலி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் அசத்தியது யார்?
அதிரடியாக ரன் குவிக்கும் பேட்ஸ்மென், அட்டகாசமாக விக்கெட் எடுக்கும் பவுலர், கண்கொத்திப்பாம்பாக இருந்து எதிரணியை திகைக்க வைக்கும் விக்கெட் கீப்பர் என ஒவ்வொரு போட்டியிலும் அசத்துபவர்கள் உண்டு. சில நேரங்களில் அம்பயர்களின் செயல்பாடுகூட அசத்தும். இம்முறை அசத்தியவர் ஓர் இளம்ரசிகர். இந்தியா-வங்கதேசம் ஆடிய போட்டியில் உற்சாகம் குறையாமல் ஊக்கம் தந்த சாருலதா பட்டேல் என்ற அந்த ரசிகருக்கு வயது 87தான்.
___________
காந்திதேசம்
மல்லிகா அன்பழகன், சென்னை-78
காந்திஜிக்கு எத்தனை மொழிகள் பேச, எழுதத் தெரிந்திருந்தது?
காந்தி தன் சுயசரிதையான சத்தியசோதனையை தாய்மொழியான குஜராத்தியில்தான் எழுதினார். அதுதான் அவர் அறிந்த முதல் மொழி. அவர் இந்தியிலும் சரளமாகப் பேசக் கூடியவர். சென்னையில் உள்ள தட்சிண பாரத இந்தி பிரச்சார சபாவை அமைத்தவர் காந்திதான். காந்தியின் ஆங்கிலப் புலமையும் அவரது கடிதங்கள், கட்டுரைகள் வாயிலாக வெளிப்பட்டன. இந்தியைப் போலவே உருது மொழியையும் கற்றிருந்தார் காந்தி. பள்ளிப்பருவத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டது, சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான். ஏனெனில் சமஸ்கிருதச் சொற்களை மனப்பாடம் செய்வது அவருக்குப் பெரும்பாடாக இருந்தது. பின்னாளில்தான் அவர் சமஸ்கிருதத்தை அறிந்துகொண்டார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பயின்றபோது வழக்கறிஞர் தொழிலுக்கு லத்தீன் மொழிச் சொற்கள் அவசியம் என்ற அடிப்படையிலும், அது கட்டாயமாக இருந்ததாலும், முதல் மொழிப்பாடமாக லத்தீனையும் இரண்டாவது மொழிப்பாடமாக பிரெஞ்ச்சையும் கற்றார்.
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது காந்தியின் கருத்தாக இருந்தது. பிற மொழிக்காரர்களின் உரிமைக்காக துணை நிற்க இது அவசியம் என காந்தி நினைத்தார். அவர் மராத்தி மொழியும் பயின்றார். தென்னிந்திய மொழிகளில் தமிழ் மீது காந்திக்கு ஆர்வம் இருந்தது. "மோ.க.காந்தி' என தமிழில் அவர் கையெழுத்திடவும் எழுதவும் அறிந்திருந்தார். அவருக்கு அந்தப் பயிற்சியைத் தந்தவர் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக லண்டன் வட்டமேசை மாநாடு வரை சென்று குரல் கொடுத்த தமிழரான இரட்டைமலை சீனிவாசன் ஆவார். காந்தியின் மொழிக்கொள்கையை இன்றைய நிலையில் ஏற்பதற்கும் எதிர்ப்பதற்கும் காரணங்கள் நிறையவே இருக்கின்றன.