எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
கலைஞருக்கு கார் ஓட்டியவரான புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு குறித்து?
டிரைவராக வாழ்க்கைப் பயணம் தொடங்கிய ஜானகிராமன், அரசியல் ஈடுபாட்டில் உறுதியாக இருந்து, தனது தலைவரின் நம்பிக்கையைப் பெற்று, கட்சியை வளர்த்து, 1996-ல் தமிழ்நாட்டில் கலைஞர் முதல்வரானபோது, புதுச்சேரியில் முதல்வர் பொறுப்பை ஏற்றவர். இது கட்சியில் உள்ள மற்றவர்களுக்கும் நம்பிக்கையைத் தரக்கூடி யது. அதே நேரத்தில், அவரது ஆட்சிக் காலம் நிறைவடைந்த 2001-க்குப் பிறகு, புதுச்சேரியில் தி.மு.க. ஏன் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெறுகிறது, அது அவரது ஆட்சிக் காலத்தின் தாக்கத்தால்தானா என்பது பரிசீலனை செய்யவேண்டியது.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
மம்தாவின் மேற்குவங்க அரசை மத்திய பா.ஜ.க. அரசு கலைக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறதே?
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே மேற்குவங்கத்தில் பேசிய பிரதமர் மோடி, தன்னுடன் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் பா.ஜ.க. தன் வலிமையைக் காட்டி 18 இடங்களில் வென்றிருக்கும் நிலையில், மம்தா அரசின் மீதமுள்ள 2 ஆண்டுகளை விட்டு வைக்க நினைப்பார்களா என்ன!
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
அ.தி.மு.க. ஊழல் கட்சி என்று சொல்லும் "துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை தன் சகாக்களுடன் சென்று சந்தித்திருக்கிறாரே அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.?
"கழகங்கள் இல்லாத தமிழகம்' என முழக்கமிட்டு, "தமிழ்நாடு ஊழலில் முன்னணி வகிக்கிறது' என அ.தி.மு.க. ஆட்சியை பொதுக்கூட்ட மேடையில் விளாசித் தள்ளிய கட்சியான பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவை இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரும் சந்தித்து, அவரது உத்தரவுப்படி தேர்தல் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கவில்லையா? டெல்லி எஜமானர் பா.ஜ.க. மேலிடம் என்றால், அதன் தமிழகப் பிரதிநிதி ஆடிட்டர் என்பதை அறியாதவரா ஓ.பி.எஸ்.!
எம்.செல்லையா, ஏழாயிரம் பண்ணை
நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி, சங்கரதாஸ் சுவாமிகள் அணி. யாருக்கு வெற்றி கிடைக்கும்?
நடிகர் சங்கத்தில் டூப் இல்லாமல் நிஜ ஸ்டண்ட் காட்சிகள் நடக்குமோ என யோசித்து தேர்தலை நிறுத்த உத்தரவிட்டார் பதிவாளர். ஜூன் 23-ல் தேர்தல் நடக்காது என முன்கூட்டியே சொன்ன ராதாரவி, சங்கரதாஸ் அணிக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதையும் கவனிக்கவும்.
நித்திலா, தேவதானப்பட்டி
கொள்கைவாதியாக இருந்து அரசியல் களத்தில் வெற்றி பெறமுடியுமா?
முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு, அண்மையில் மறைந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான அரியலூர் சிவசுப்ரமணியன். சாதி செல்வாக்கு மிகுந்த மாவட்டத்தில், அனைத்து சமுதாய மக்களுடன் பேதம் பார்க்காமல் இணைந்து நின்று, பகுத்தறிவுக் கொள்கை வழுவாமல் கட்சிப் பணியாற்றி சட்டமன்றத் தேர்தல் களத்தில் வெற்றியும் பெற்றவர் அவர். தனது மகன் எஸ்.எஸ்.சிவசங்கரையும் கொள்கை உணர்வுடன் வளர்த்து, அரசியல் களத்தில் வெற்றிபெறச் செய்தவர்.
தூயா, நெய்வேலி
புதிய நாடாளுமன்றம்?
பெரும்பான்மை கட்சியின் எதிர்ப்பை மீறி தமிழ் ஒலிக்கிறது. பெரியார் புகழ் கேட்கிறது. பெண்களின் குரல் வலிமை பெறுகிறது.
___________
காந்தி தேசம்
சி.கார்த்திகேயன், சாத்தூர்
மகாத்மா காந்தியின் சுய சரிதையை இந்த கல்வியாண்டில் இந்தியாவில் உள்ள கல்விக் கூடங்களில் ஒரு பாடமாக வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
காந்தியின் தன் வரலாற்று நூலான "சத்திய சோதனை'யின் சில பகுதிகள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு அரசின் பாடநூல் நிறுவனம் சார்பாக "சத்திய சோதனை'யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் துணைப்பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்திய அளவில் வரலாறு திரிக்கப்படுகின்ற காலமாக இருக்கிறது. காந்தியின் வரலாற்றைவிட சாவர்க்கர், தீனதயாள் உபாத்யாயா போன்றவர்களை முன்னிறுத்தும் முயற்சிகள் வலிந்து மேற்கொள்ளப்படுகின்றன. கோட்சேவின் பாடம் இன்னும் அச்சேறவில்லையே என்ற அளவில் ஆறுதல் அடையலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் பாடப்புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இயற்கை ஆர்வலர் "நெல்' ஜெயராமன், மலிவு விலையில் சானிடரி நாப்கின் களைத் தயாரித்த கோவை இளைஞர் அருணாசலம் முருகானந்தம் ஆகியோரும் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். காந்தியின் 150-வது பிறந்த ஆண்டை யொட்டி இந்திய அளவில் "சத்திய சோதனை'யின் சில பகுதிகளை அனைத்து மாநிலங்களும் பாடமாக வைக்கலாம். எனினும், இதையே காரணமாகக் காட்டி, மாநிலப் பாடத்திட்டத்தில் மத்திய அரசு தலையிடும் சூழல் உருவாகிவிடக்கூடாது.
"சத்திய சோதனை'யில் தன் மனதறிந்த உண்மைகளைப் பதிவு செய்திருப்பதாகக் காந்தி தெரி வித்திருக்கிறார். அவற்றில், எப்போதும் கடைப்பிடிக்க வேண்டியவை எவை, இப்போதும் பொருந்தக்கூடியவை எவை, காந்தியின் அணுகுமுறைகளில் முரண் பாடானவை எவை, தற்போதைய சூழலில் தவிர்க்க வேண்டியவை எவை என அதனைப் படிக்கும் மாணவர்கள், ஒரு தலைவரைக் குறித்து தங்கள் அளவிலான மதிப்பீட்டைப் பெறவேண்டும். வெறும் மதிப்பெண்களுக்காகப் படிப்பதென்பது அந்தத் தலைவரைப் பற்றிய முழுமையான பார்வையைத் தராது. கட்டாயமாகப் படிக்க வைத்துவிட்டார்களே என்ற வெறுப்பை விதைக்கவும் வாய்ப்பு உண்டு. பாடமாக வைப்பதைவிட, விருப்பமாக படிப்பதன் மூலம்தான் காந்திக் கொள்கையின் சாதக பாதகங்களை உணர முடியும்.