மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும் திட்டங்கள் என்ன?
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அண்மையில்தானே தங்கள் டெல்லி முதலாளிகளை சந்தித்துவிட்டு வந்திருக் கிறார். அவர்களோ, தவித்த வாய்க்கு தண் ணீர் கேட்டால் காவிரி- கோதாவரி நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறார்கள்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது' என்கிறாரே அரவிந்த் சுப்ரமணியன்?
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசக ராக இருந்தவர் அரவிந்த் சுப்ரமணியன். 7 சதவீதமாக இருக்கும் என சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி, 4.5 சதவீதமாகத்தான் இருக்கும் என அம்பலப்படுத்தி, புள்ளி விவர மோசடியைப் போட்டு உடைத்திருக்கிறார். மோடி அரசின் இன்னொரு புளுகு அம்பலமாகியுள்ளது.
மு.செ.மு.புகாரி, சிந்தாதிரிப்பேட்டை
கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெ.வைப்போல நாவலர் ஏன் அரசியலில் மேலோங்கவில்லை?
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக அரசியல் ஆர்வம் கொண்ட நாவலர், திராவிட இயக்கத்தில் பங்கேற்று நீங்கள் குறிப்பிட்ட மூவரின் அமைச்சரவையில் மட்டு மின்றி, அதற்கு முன்பாக அண்ணாவின் அமைச்ச ரவையிலும் இரண்டாம் இடம்பிடித்தவர். இருமுறை தற்காலிக முதல்வராக இருந்தவர். அதன்பிறகும், நாவலர் ஏன் மேலோங்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது என்றால், அவருக்கு அரசியல் தலைமைப் பண்புக்கான சாதுர்யமும், மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்கான வியூகங்களும் தெரியவில்லை என்பதன்றி வேறில்லை.
மணி, சாலிகிராமம்
அணுஉலையும் நமக்கு, கழிவு மையமும் நமக்கு என தமிழ்நாட்டிடம் மத்திய அரசு தாராளம் காட்டுகிறதே?
பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்காத தமிழ்நாட்டு மக்களுக்கு, மோடி அரசு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வரக்கூடாதே! அதற்காகத்தான் இப்படி வச்சி செய்ய நினைக்கிறது போலும்.
குமார், தென்காசி
குரங்கு மனிதனாகப் பரிணமித்தது, அதன்பிறகு ஏன் அடுத்தகட்ட பரிணாம மாற்றம் நிகழவில்லை?
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற பரிணாமக் கோட்பாடு என்பது தற்போது நாம் பார்க் கும் குரங்கிலிருந்து நேரடியாக மனிதன் பிறந்தான் என்பதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த குரங்கு இனத்திலிருந்து தற்போது நாம் பார்க்கும் குரங்குகளும், தற்கால மனிதர்களும் மெல்ல மெல்ல பரிணாமம் பெற்று வந்திருக்கிறார்கள். "பரிணாமக் கோட்பாடு' என்பது ஒரு மரத்தின் கிளைகள் போன் றது. பழங்காலக் குரங்கிலிருந்து "நியான்டர்தால்', "ஹோமோசேபியன்', "நியோலித்திக்' எனப் படிப்படி யாக பரிணாமம் பெற்றே முதுகெலும்பு நிமிர்ந்த இரண்டுகால் மனிதர்கள் உருவாகியுள்ளனர். அது போலவே, "சிம்பன்ஸி', "கொரில்லா' போன்ற குரங்கு களும் உருவாகியுள்ளன. இவற்றிற்கும் மனிதர்களுக் கும் பொதுவான சில அம்சங்கள் இப்போதும் காணப்படுகின்றன. இதிலிருந்து புதிய பரிணாமம் அடைய இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு
முதலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் மாநிலம் கர்நாடகாவா, தமிழகமா... மேற்குவங்கமா?
ஏற்பட வேண்டிய மாநிலம் தமிழகம், ஏற்படுத்த முயற்சிக்கின்ற மாநிலம் மேற்கு வங்கம், ஏற்படுவதற் கான அதிக வாய்ப்புள்ள மாநிலம் கர்நாடகம்.
___________
காந்தி தேசம்
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
எப்போதும் எளிமையைக் கடைப்பிடித்த காந்திஜி இந்தியாவின் முதன்மை பணக் காரரான பிர்லாவின் மாளிகை யில் அடிக்கடி தங்கியது ஏன்?
காந்தியைப் பொறுத்தவரை, பிரிட்டிஷாருக்கு எதிரான தனது சத்தியாக்கிரகத்திற்கு பலதரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ஆதரவு பெறவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர். அதில் ஏழை- பணக்காரன், உயர் சாதி -தாழ்ந்த சாதி, கூலிக்காரர் -பெருமுதலாளி என்கிற பாகுபாடு பார்க்கவில்லை. அதனால், இந்திய பெருமுதலாளிகளிடமிருந்து சுதந்திரப் போராட்டத்திற்கான நிதியைப் பெற காந்தியாலும் காங்கிரசாலும் முடிந்தது. குறிப்பாக, அந்நிய துணிகள் புறக்கணிப்பு என்கிற சுதேசி இயக்கத்தால், இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துணிகளை காந்தியவாதிகளும் பொதுமக்களும் புறக்கணித்தனர். அதற்குப் பதிலாக இந்திய முதலாளிகளின் நூற்பாலைகளில் தயாரான துணிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் பலனடைந்த இந்திய முதலாளிகள் காந்தியின் பக்கமும், காங்கிரசின் பக்கமும் நின்றனர்.
அந்த வகையில் வணிகத்தில் சிறப்பு பெற்ற பிர்லா குடும்பத்தாரிடமும், பஜாஜ் குடும்பத்தாரிடமும் காந்திக்கு செல்வாக்கு இருந்தது. பிர்லா குடும்பத்து மருமகள் ஒருவர், தன் விலையுயர்ந்த வளையல்களை காந்தியின் போராட்டத்திற்கான நிதியாக அளித்தார். அதுபோலவே பஜாஜ் குடும்பத்தாரிடமும் காந்தி நெருக்கமாக இருந்ததால், வணிக சிக்கல்களை சமாளித்து, புதிய வாய்ப்புகளைப் பெற்றனர் என்கி றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். கமல்நயன் பஜாஜ் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில், “பஜாஜ் குடும்பத் தினருக்கு சொந்தமான நாக்பூர் வங்கியில் காந்தி பல டிரஸ்ட்டுகளின் பணத்தை முதலீடு செய் திருந்தார். 1945-ல் நாக்பூர் வங்கி நெருக்கடிக் குள்ளான நிலையில், அந்தப் பணத்தை எடுத்து விடுமாறு காந்தியிடம் தெரிவிக்கப்பட்டும், பஜாஜ் குடும்பத்தினர் மீதான நம்பிக்கையால் அதனை எடுக்கவில்லை’’என்று தெரிவித்துள்ளார். அது போலவே, பிர்லா குடும்பத்திடமும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையால்தான், டெல்லியில் பிர்லா மாளிகையில் தங்கியிருந்தார். கடைசி பிரார்த்தனை கூட்டத்தின் போது கோட்சேவால் சுடப்பட்டு இறந்ததும் அங்கேதான்.