எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"7 பேர் விடுதலை தொடர்பாக பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை இல்லை' என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி?
அருகதை இருப்பதால்தான், 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் கழித்தும் அலைக்கழிக்கிறதோ அ.தி.மு.க. ஆட்சி.
நித்திலா, தேவதானப்பட்டி
கிரீஷ் கர்னாட், கிரேசி மோகன் -இரண்டு கலைஞர்கள் ஒரே நாளில் மரணமடைந்திருக்கிறார்களே?
ஒரேநாளில் இயற்கை ஆடிய இரண்டு சோக விளையாட்டு. இங்கிலாந்தில் உயர்படிப்பு படித்த கர்னாட், கலை மீதான தாகத்தால் நவீன நாடகத்தை சிறப்பாகக் கையாண்டு, திரைத்துறைக்குள் நுழைந்து தனது சொந்த மாநிலமான கர்நாடகாவைத் தாண்டி பல மொழிகளிலும் அசத்திய கலகக்காரர். இன்ஜினியரிங் படித்து, மேடை நாடகத்தின் மீது காதல் கொண்டு, சினிமாவில் வசனகர்த்தாவான கிரேசி மோகன் கலகலப்புக்காரர்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
தேர்தல் வியூகங்களை வகுத்துத்தர பிரஷாந்த் கிஷோர் போன்ற நிபுணர்கள் இருக்கிறார்களாமே?
அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக கார்ப்பரேட்டுகள் மாறிய பிறகு, தொழில்நுட்பங்கள் மூலம் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுப்பதற்கான நிறுவனங்கள் பெருகிவிட்டன. இதில் பிரஷாந்த் கிஷோர் 2014-ல் மோடி ஆட்சி அமைவதற்கான வியூகங்களை வகுத்தார். அதனைத் தொடர்ந்து பீகாரில் நிதீஷ், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு வியூகம் வகுத்து தந்தார். அவை வெற்றியானதால், தற்போது மேற்கு வங்கத்தின் மம்தா, பிரஷாந்த் கிஷோரின் உதவியை நாடியிருக்கிறாராம்.
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
சாதனை மன்னனாக கருதப்பட்ட சோழ மன்னன் ராஜராஜன் சர்ச்சை மன்னனாகி இருக்கிறாரே?
தஞ்சை பெரியகோவில் எனும் வானளாவிய அதிசயத்தை உருவாக்கிய ராஜராஜன், தன் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி, உயர்சாதியினரின் கைப்பாவையானான் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. தற்போதும் அது வெளிப்பட்டிருக்கிறது. மன்னராட்சியில் நன்மை-தீமை இரண்டும் கலந்தே இருந்ததை வரலாறு காட்டுகிறது. அருள்மொழிவர்மன் என்ற இயற்பெயர் கொண்டவன் யாரால், எப்போது, எதனால் ராஜராஜன் என்ற வடமொழி பெயர் சூட்டப்பட்டான்? உயர்சாதியினருக்கு அந்த மன்னனால் ஒதுக்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்கள் எவருடைய நிலத்தைப் பறித்துக் கொடுக்கப்பட்டவை? ஊராட்சி நிர்வாகம் சிறந்திருந்த சோழர் ஆட்சியில் சாதி ஆதிக்கம் எந்தளவில் இருந்தது? ராஜராஜசோழனை தமிழ்நாட்டின் பல சாதிகளும் உரிமை கொண்டாடுவதன் நுண்ணரசியல் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால், சர்ச்சைகளைக் கடந்த உண்மை வரலாற்றை உணரலாம்.
எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்
"ஹோட்டலில் சாப்பிடாமல், வீட்டிலேயே சாப்பிட்டால் ஜி.எஸ்.டி. வரி வராது' என்று சொன்ன நிர்மலா சீதாராமன், மத்திய நிதிஅமைச்சர் ஆகிவிட்டார். சரியான தேர்வுதானே?
அப்படியென்றால் பசுமாட்டு சிறுநீரான கோமியத்தால் தனக்குப் புற்றுநோய் குணமானதாக, மருத்துவ ஆதாரமின்றி சொன்ன சாத்வி பிரக்யா தாக்கூர்தான் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சரா?
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
"பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத தமிழகத்துக்கு அமைச்சர் பதவி கேட்பது பொருத்தமானதாக இல்லை' என்று இல.கணேசன் கூறுகிறாரே?
தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்ற திட்டங்களை பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்திருப்பது மட்டும் பொருத்தமானதுபோல.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
உரிமை வாழ்வைவிட, சிலர் அடிமை வாழ்வையே விரும்புவது ஏன்?
உரிமை வாழ்வில் சிறையும் தண்டனையும் கிடைக்கிறது. அடிமை வாழ்வில் பதவியும் பணமும் குவிகிறது.
____________
காந்தி தேசம்
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
காந்தியுடன் பெரியாரை எந்த கோணத்தில் ஒப்பிடலாம்?
இருவரின் பாதையும் வேறு, பயணமும் வேறு. பழமையின் பண்பாட்டைக் கைவிடாமல் "ராமராஜ்ஜியம்' அமைய வேண்டும் என எதிர்பார்த்தவர் காந்தி. பழமை உருவாக்கிய ஆதிக்கத்தைத் தகர்த்தெறிந்து, சமத்துவ வாழ்வுமிக்க புதிய உலகத்திற்கான கொள்கைகளைக் கொண்டவர் பெரியார். அதே நேரத்தில், இருவருமே தாங்கள் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணம், வெளிப்படைத்தன்மையுடனும் மக்களின் ஆதரவுடனும் அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர்கள். ஆசிரமம் நிறுவி அதில் தன் வழிநடப்பவர்களை சேர்த்து, அவர்கள் மூலமாக கொள்கைகளைப் பரப்பியவர் காந்தி. சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி, தன் சொத்துகளை அதற்கு வழங்கி, அதன் மூலமாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து அகிம்சை வழியில் சுதந்திரப் போராட்டம் நடத்தினாலும் அவர்களின் ஆட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, அதன் மூலம் இந்திய மக்களுக்கான படிப்படியான உரிமைகளைக் கோரியவர் காந்தி. "சாதி ஏற்றத்தாழ்வைக் கடைப்பிடிக்கும் உயர்சாதியினர் நிரம்பிய காங்கிரசை ஒழிப்பதே இனி என் வேலை' என்று சொல்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி தனி இயக்கம் கண்டபோதும், காங்கிரஸ் ஆட்சியில் பச்சைத் தமிழர் காமராசர் முதல்வராவதற்குத் துணை நின்று, சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை செயல்படுத்தக் காரணமானவர் பெரியார்.
தனி மனித உரிமைகள் குறித்து இரண்டு தலைவர்களும் நிறைய வலியுறுத்தியிருக்கின்றனர். அதே நேரத்தில், இயக்கம் என்று வரும்போது தனிப்பட்ட விருப்புவெறுப்புகளைக் கடந்து, கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்பதே சரி என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். வெள்ளைக்காரர்களுக்கு எதிராக சட்டமறுப்பு இயக்கம் நடத்தியவர் காந்தி. இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தியவர் பெரியார். இருவருமே, தாங்கள் எவருடைய சட்டத்தை எதிர்த்தனரோ, அந்த சட்டத்தின் அடிப்படையிலான தண்டனையைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு தங்களையும் தங்கள் தொண்டர்களையும் சிறை வாழ்க்கைக்குப் பழக்கிய தன்னலமற்ற தியாகத் தலைவர்கள்.