மல்லிகா அன்பழகன், சென்னை - 78

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் என்னவாச்சு?

அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெ.போல ஆச்சு.

mms

Advertisment

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

காமராஜரின் கே-ப்ளானை காங்கிரஸ் கையில் எடுக்க வாய்ப்புள்ளதா?

கையை காப்பாற்ற வேண்டுமானால், மூத்த தலைவர்கள் இளையவர்களுக்கு வழி விட்டு பதவி விலகவேண்டும் என நேருவிடம் காமராஜர் அளித்த கே-ப்ளானை ராகுல் கையில் எடுக்கலாம். ஆனால், அந்த இளையவர்கள் தங்களின் வாரிசுகள்தான் என்று பெருசுகள் மல்லுக்கட்டாமல் இருக்கவேண்டுமே!

Advertisment

ஆர்.கே.லிங்கேசன், மே.கி.புதூர்

புதிய கல்விக் கொள்கையால் தமிழ் பாதிக்கப்படுமா?

இந்தியையும் அதன் தொடர்ச்சியாக சமஸ்கிருதத்தையும் திணித்து, நாடு முழுவதும் பரவலாக்கும் திட்டங்கள் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக் கையில் இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழ் பாதிக்கப் படுமா என்பதைத் தாண்டி, இந்தியை முதன்மைப்படுத் திய காரணத்தால் இந்தி பெல்ட் எனப்படும் வடமாநி லங்களிலேயே போஜ்புரி, மைதிலி, சந்தாலி, புந்தலி, அவாதி, மகிதி, பாக்ரி உள்பட பல மொழிகள் தங்கள் தனித் தன்மையை இழந்துவிட்டன. இந்த மொழிகளைப் பேசும் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில மக்கள் தங்கள் மொழி உரி மைக் குரலை உயர்த்தியுள்ள னர். அதிகாரத்தின் மேலிருந்து வலிந்து திணிக்கப்படும் எது வும் மற்றவற்றைப் பாதிக்கவே செய்யும்.

கொள்கைரீதியான பார்வைகொண்ட அரசியல் தலைவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். அரசியலை வணிகநோக்க மாகக் கொண்டவர்கள், கட்சிக்கான பார்வையைப் புறந்தள்ளிவிட்டு, இந்தி கற்பிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நடத்துகிறார்கள். இத்தகைய பட்டிய லில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் தற்போது கடும் விமர்சனத்தை எதிர்கொள்கிறார்கள். வெள்ளைக் காரர்களுக்கு சலாம் போடும் மிட்டாமிராசுகள் நிறைந்த கட்சி என விமர்சிக்கப்பட்ட நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக பெரியாரும் அண்ணாவும் மாற் றியபோது, வெள்ளைக்காரர்கள் தந்த ராவ்பகதூர், திவான்பகதூர், சர் பட்டங்களைத் துறக்க வேண் டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல் படுத்தப்பட்டது. கட்சியினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இப்போது அது சாத்தியமாகுமா?

கௌசிக், திண்டுக்கல்

ஐந்து துணை முதல்வர்களை உருவாக்கி யுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் முடிவு சரியானதுதானா?

நாயுடு-ரெட்டி என்ற பலமிக்க சாதிகளின் அதிகார அரசியல் நடைபெறும் ஆந்திரத்தில், பிற சமூகத்தினரைத் தனக்குப் பக்கத் துணையாக வைத்துக்கொள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கையாண்ட வியூகமே 5 துணை முதல்வர்கள்.

சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்

டி.டி.வி. தினகரனின் எதிர் காலம் இனி எப்படியிருக்கும்?

வாயைப் பொறுத்து

____________

காந்தி தேசம்

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்

மகாத்மா காந்தி தமது வாழ்நாளில் ஒருமுறை கூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லையாமே? அப்படியென்றால் இங்கிலாந்துக்கு எப்படி சென்றுவந்தார்?

ரைட் சகோதரர்களின் விமான கண்டுபிடிப்புக்குப் பிறகு, அது தொடர்பான ஆராய்ச்சிகள் மேம்பட்டு, பயணிகள் விமானங்கள் விரைந்து பறக்கத் தொடங்கின. உலகத் தலைவர்கள் பலர் விமானப் பயணங்கள் மூலம் எளிதாகவும் வேகமாகவும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றனர். காந்தியின் பார்வையில் விமானம் என்பது எளிய மக்களுக்கான போக்குவரத்து அல்ல. அது பணம் படைத்தவர்கள் பயன்படுத்தக் கூடிய மிக அதிக கட்டணம் கொண்ட வாகனம். ரயில் பயணத்தை அதிகம் விரும்பும் காந்தி, விமானப் பயணத்தை விரும்பவில்லை. அத்துடன், உலகப் போர்களில் படை விமானங்கள் மூலமாக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எதிரி நாடுகள் மீது குண்டுகளை வீசியதால், அவற்றை மக்களின் அமைதிக்கு எதிரான வாகனம் என்றும் காந்தி கருதினார். அதன் இரைச்சலையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறித்து காந்தி தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். பழைமையில் பிடிப்புள்ள காந்திக்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்பான விமானம் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை.

பாரிஸ்டர் படிப்புக்காக 1888-ல் இங்கிலாந்துக்குச் சென்றபோதும், அதன் பிறகு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பதற்காக 1931-ல் சென்றபோதும், காந்தி பயணித்தது கப்பலில்தான். அதிக நாட்கள் பயணத்தில் கழியும் என்றாலும் அதையே அவர் தேர்ந்தெடுத்தார். படிப்பதற்காக சென்றபோது கப்பல் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தனது "சத்தியசோதனை' தன்வரலாற்று நூலில் காந்தி பதிவு செய்துள்ளார். கப்பலில் பயணிகளுக்கான வகுப்புகள், அதில் உள்ள பாகுபாடுகள், நிற வேறுபாடு, கடல் பயணம் தந்த அனுபவம் எனப் பலவற்றையும் காந்தி விளக்கியுள்ளார். வட்டமேசை மாநாட்டிற்காக இங்கிலாந்துக்கு கடல் மார்க்கமாக காந்தி சென்றபோது, அவர் பயணித்த ராஜ்புத்னா என்ற கப்பலின் வருகையை எதிர்பார்த்து பிரிட்டிஷ் அரசாங்கம் காத்திருந்தது.