லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)

"தி.மு.க.வின் வெற்றி, முதலை வாயில் சிக்கிய தேங்காய்' என்கிறாரே ஜெயக்குமார்?

தமிழக மக்கள், "நாயிடம் சிக்கிய தேங்காய்' என்றுதான் சொல்வார்கள். அது அ.தி.மு.க.வின் ஆட்சியோ!

mavalianswers

Advertisment

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

பழைய ஓட்டுக் கணக்கெல்லாம் இந்த தேர்தலில் எடுபடவில்லையே?

Advertisment

ஒரு தேர்தலின் கணக்கு இன்னொரு தேர்தலில் எடுபடாது. 2014 எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்குமான ஓட்டு வித்தியாசம் ஏறத்தாழ 20 சதவீதம். ஆனால் 2016 எம்.எல்.ஏ. தேர்தலில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்குமான வித்தியாசம் 1.1% மட்டும்தான். பழைய கணக்குகளை மட்டுமே பார்ப்பவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபடும் மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதில்லை.

தூயா, நெய்வேலி

குஜராத்தின் மோடி பிரதமராக, அவரது அமைச்சரவையில் "ஒடிசாவின் மோடி' மத்திய அமைச்சராகியிருக்கிறாரே?

ஏழைத்தாயின் மகன் எனப்படும் குஜராத்தின் மோடி டீ விற்று, பின்னர் அரசியலில் உயர்ந்து ஆட்சிக்கு வந்தவர் என்கிற இமேஜ் பில்டப் போல, சாமியாரான சந்திர பிரசாத் சாரங்கி, குடிசை வீட்டில் வாழ்ந்து, குழாயடியில் குளித்து, சைக்கிளில் பயணிக்கும் எளிமையுடன் மத்திய அமைச்சராகியிருக்கிறார் என்கிறார்கள். அதனால் அவர் ஒடிசா மோடி அல்ல. கோத்ராவுக்குப் பிறகான மதக்கலவரத்தை அனுமதித்து அரசியல் லாபம் அடைந்தவர் குஜராத் மோடி. பாதிரியாரையும் அவர் மகன்களையும் உயிரோடு எரித்துக் கொன்ற பஜ்ரங்தள் அமைப்பிற்குத் தலைமை தாங்கி மத்திய அமைச்சராகியிருப்பவர் ஒடிசா மோடி.

நித்திலா, தேவதானப்பட்டி

இந்தத் தேர்தல் களத்தில் கலைஞர் இருந்திருந்தால்?

தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அரை நூற்றாண்டு காலம் செயல்பட்ட கலைஞர், தன் மறைவுக்குப் பிறகும் தமிழக அரசியலை இயக்கக் கூடியவராக இருக்கிறார் என்பதைத் தேர்தல் வெற்றி நிரூபித்திருக்கிறது. கலைஞர் இருந்து பார்த்திருக்க வேண்டிய வெற்றி இது. அவர் இறந்தபிறகு கிடைத்துள்ளது. மரணத்துடன் அவர் காவேரி மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தபோது, அவரது சாதனைகள்-போராட்டங்கள்-தனித்திறமைகள் உள்ளிட்டவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி, சமூக வலைத்தளங்களில் பரவி, இளைய சமுதாயத்தை ஈர்த்தன. அது அவரது இறுதி ஊர்வலத்திலும் தெரிந்தது. மரணப்படுக்கையிலும் தன் இயக்கத்திற்கான வாக்கு வங்கியை உயர்த்தி வைத்தவர் கலைஞர். அது தேர்தல் களத்தில் பலனைத் தந்துள்ளது. கலைஞர் இல்லாமலேயே வெற்றி கிடைத்துள்ளது. கலைஞர் இருந்திருந்தால், தேசிய அரசியலின் நிலவரத்தையும் தேர்தலுக்கு முன்பே முடிந்த அளவு மாற்றியிருப்பார்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ஆந்திராவில் நோட்டாவிடம் பா.ஜ.க., காங்கிரஸ் தோற்றுள்ளதே?

அடித்தளம் இல்லாமல் கூட்டணியை மட்டுமே நம்பி ஆந்திராவில் வாக்குகளைப் பெற்று வந்த பா.ஜ.க.வின் உண்மை நிலை என்ன என்பதை நோட்டாவுக்கு கீழேபோனது காட்டிவிட்டது. பல ஆண்டுகள் ஆட்சி செய்த மாநிலத்தில், செல்வாக்குள்ள மாநிலத் தலைமைகளைப் புறக்கணித்து, டெல்லியே எல்லாம் தீர்மானிக்கும் என்ற காங்கிரசின் போக்குக்கு கிடைத்த தண்டனை, நோட்டாவுக்கு கீழே தள்ளப்பட்ட பரிதாப நிலை. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவின் அரசியலும் இரண்டு மாநிலக் கட்சிகளுக்கிடையிலான "கால்பந்து' போலாகிவிட்டது.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

இளையராஜாவும் எஸ்.பி.பி.யும் ராசியாகிவிட்டனரே?

தனிப்பட்ட முறையில் அவர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படுவதும், ராசியாவதும் புதிதல்ல. ஆனால், அவர்கள் இருவரும் பங்கேற்ற பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் காதுக்கு ராசியானவை.

________________

காந்தி தேசம்

சி.கார்த்திகேயன், சாத்தூர்

மகாத்மா காந்தியை இந்தியாவிலேயே இப்போது பலருக்குப் பிடிக்கவில்லையே?

dd

ஒரு தலைவரை எல்லோருக்கும் பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படி எல்லாருக்கும் பிடித்தவராக அவர் இருப்பாரேயானால், தன்னுடைய கொள்கைக்கு அவர் நியாயமாக நடக்கவில்லை என்று அர்த்தம். காந்தி வாழ்ந்த காலத்திலேயே காங்கிரசுக்கும் வெளியிலும் அவரைப் பிடிக்காதவர்கள் இருந்தார்கள். காங்கிரசில் இருந்த பெரியார், நேதாஜி போன்றவர்கள் ஒரு கட்டத்தில் காந்தி மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் போக்கு பிடிக்காமல் வெளியேறினார்கள். "அகிம்சை முறையில்தான் பிரிட்டிஷாரை விரட்ட வேண்டும்' என்ற காந்தியின் உறுதிப்பாடு, மற்ற இயக்கத்தினரிடம் கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியது. இந்து மதத்தின் சாதிப் பாகுபாடுகளைக் காப்பாற்றும் வருணாசிரமக் கொள்கையை காந்தி ஆதரித்ததும், அதனைக் காப்பாற்றிக்கொண்டே சமத்துவத்தையும் மதநல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதும் நடைமுறை சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியது. இவையெல்லாம் காந்தி காலத்து விமர்சனங்கள்.

காந்திக்குப் பிறகான இந்தியாவில் காந்தியின் தேவை எந்தளவு இருக்கிறது என்பது குறித்தும் நிறைய விமர்சனங்கள் உண்டு. காந்தி வலியுறுத்திய மதுவிலக்கு கொள்கையை காங்கிரஸ் கட்சியாலேயே நடைமுறைப்படுத்த முடியவில்லை. காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் மட்டும் பெயரளவுக்கு இருக்கிறது. பட்டியல் இன மக்களை ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என காந்தி சொன்னது வெறும் பூச்சு வார்த்தைதான் என்பதையும், அது அந்த மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தராது என்பதையும் காந்தி முன்னிலையிலேயே அம்பேத்கர் எடுத்துரைத்திருக்கிறார். இன்றைக்கும் பட்டியல் இன மக்களின் உரிமை சார்ந்த விவகாரத்தில் காந்தியின் பார்வை மீது விமர்சனங்கள் நீடிக்கின்றன. மதரீதியான அவர் கொள்கைகளும் விமர்சிக்கப்படுகின்றன. எனினும், அவரது கொள்கையை விமர்சிப்பவர்களுக்கும், காந்தியையே காலி செய்தவர்களின் வழிவந்தோரின் விமர்சனங்களுக்குமான வேறுபாடு முக்கியமானது. அதுதான், காந்தியை சரியாக அடையாளம் காட்டக்கூடியது.