வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு

"அ.தி.மு.க.வினர் பாண்டவர்கள் ; எங்களுக்கு சூழ்ச்சி எதுவும் தெரியாது' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

பாண்டவர்களின் அம்மாவான அந்த குந்திதேவி எப்படி இறந்தார் என்ற சூழ்ச்சியையும் அவரே விளக்கினால் நன்றாக இருக்கும்.

Advertisment

nn

வி.கார்மேகம், தேவகோட்டை

"சாய்வு நாற்காலி'’ தோப்பில் முகமது மீரான் நிரந்தரமாக சாய்ந்துவிட்டாரே?

Advertisment

எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் என்ற சாய்வு நாற்காலியில் எப்போதும் சாய்ந்தே இருப்பார்கள். அதுவும், தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களை அரபு நாட்டிலிருந்து வந்தவர்களைப் போல விமர்சிக்கும் ஒரு கூட்டமும், அரபுக் கலாச்சாரத்தை இங்கே திணிக்க ஒரு கூட்டமும் முயற்சிக்கும் இன்றைய சூழலில், தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்த முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை படைப்புகளாகப் பதிவு செய்த தோப்பிலின் கதைகள் மிகவும் அவசியமானவை.

ஜெயசீலன், அயனாவரம், சென்னை

கடைசிவரை கொள்கைத் தடம் மாறாமல் பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த முன்னாள் எம்.பி. கோவை மு.ராமநாதனுக்காக தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறந்த அதே நாளில், அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி கறுப்பு-சிவப்புத் துண்டை இடுப்பில் கட்டியபடி கோவிலில் சாமி கும்பிட்டதைக் கவனித்தாரா மாவலி?

ssd

தி.மு.க. என்பது நாத்திக கட்சியல்ல. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையைக் கொண்ட இயக்கம். அதனால் அவரவர் மதம் சார்ந்து வழிபடுவதற்கு கட்சிக்காரர்களுக்கு உரிமை உண்டு. அதேநேரத்தில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து, சுயமரியாதை கொண்ட சமூகத்தை உருவாக்குவதுதான் தி.மு.க.வின் இலட்சியம். அந்தக் கொள்கையில்தான் கோவை மு.ராமநாதன் போன்ற முன்னோடிகள் உறுதியாக இருந்தனர். கோவையில் வசிக்கும் வடநாட்டவர்கள் பூரி ஜெகநாதர் தேர்த்திருவிழா போல கோவை மாநகரத்தின் முக்கிய பகுதிகளில், ‘"ராம்... ராம்'’முழக்கங்களுடன் தேரோட்ட நிகழ்ச்சியை நடத்தியபோது, அதற்கு மாற்றாக பொங்கல்நாளில், திருவள்ளுவர் தேர்த்திருவிழாவை நடத்தி, தமிழ் முழக்கங்களை எழுப்பி மக்களை ஈர்த்தவர் மு.ராமநாதன். வழிபாட்டு முறைகளிலும்கூட தமிழருக்கென தனி பண்பாடு உண்டு. இதை தி.மு.க. சொல்லத் தயங்கியதாலும் தவறியதாலும்தான், அ.தி.மு.க.வில் ஜெ.வுக்காக மண்சோறு சாப்பிட்டு, யாகம் வளர்த்து, பதவி வாங்கி, கொழுத்து வளர்ந்த செந்தில்பாலாஜிகள் தி.மு.க.வின் வேட்பாளரானாலும் தோளில் கிடக்கவேண்டிய கறுப்பு-சிவப்புத்துண்டை இடுப்பில் கட்டுபவர்களாக இருக்கிறார்கள். "இடுப்பில்தான் நீ துண்டை கட்ட வேண்டும்' என்கிற அடிமைத்தனத்தை உடைத்து, சுயமரியாதையுடன் நான் தோளில் துண்டு போடுவேன் எனக் காட்டுவதற்கு ஒரு நூற்றாண்டுகாலப் போராட்டம் தேவைப்பட்டது. அந்த வரலாறு தெரிந்தவர்கள் வேட்பாளராகியிருந்தால், துண்டை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, உண்மையான பக்தியுடன் சாமி கும்பிட்டிருப்பார்கள். அன்றைய தினம் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறந்தது குறியீடாகவே தெரிகிறது.

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

"மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்' என்கிறாரே கேரள முதல்வர் பினரயி விஜயன்?

அந்த எதிர்பார்ப்பு, மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. உள்பட எல்லாக் கட்சிகளிடமும் இருக்கிறது. தேசியக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரிகள், அடுத்த ஆட்சி அமைவதில் என்ன பங்கு வகிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்குத்தான் சாதகமான பதில் தெரிவதில்லை.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

ஓட்டெடுப்பு மூலம் தேர்வாகும் எம்.எல்.ஏ. தவறு செய்யும்போது அவர் மட்டும்தான் குற்றவாளியா? வாக்களித்தவர்கள்...?

தவறான சிகிச்சையால் நோயாளி பாதிக்கப்பட்டால், அது டாக்டரின் குற்றமா? நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் குற்றமா?

___________

காந்தி தேசம்

சங்கரசுப்பிரமணியன், திருநெல்வேலி

மகாத்மா காந்தியின் எளிமையை இன்றைய தலைவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிரான சத்யாகிரகப் போராட்டத்தில் ஓர் அகிம்சை ஆயுதமாக தனது எளிமையைக் காந்தி பயன்படுத்தினார். "இந்தியர்களின் குரலாக நான் ஒலிக்கிறேன்' என்பதை தன்னுடைய உடை வாயிலாக அவர் வெளிப்படுத்தினார். உணவு முறையிலும் ஆட்டுப்பால், கடலை, மண் குவளை எனப் பயன்படுத்தினார். ரயில் பயணங்களில் ஏழை மக்கள் பயணிக்கும் அழுக்கு நிறைந்த ஓட்டை உடைசலான மூன்றாவது வகுப்பில்தான் சென்றார். இவற்றில் காந்தி காட்டிய உறுதி, அவருக்குப் பெயரைத் தந்தது போலவே விமர்சனத்திற்கும் உள்ளானது. "பணக்காரக் குடும்பத்திற்குச் சொந்தமான பிர்லா மாளிகையில் காந்தி தங்கவைக்கப்படுவதுதான் எளிமையா' என்ற கேள்வி எழுந்தது.

அத்துடன், அவர் உடுத்தும் கதராடைக்கு அதிக மனித உழைப்பு தேவைப்படும். அத்துடன் குளிர் நிறைந்த வடமாநிலங்களில் எல்லாராலும் அந்த எளிய உடையுடன் இருக்க முடியாது. பசுவைப் புனிதமாக வணங்கும் நாட்டில், மக்களின் தேவையைத் தீர்க்கும் அளவிற்கு உற்பத்தியாவது எருமைப்பால்தான். காந்தி குடித்த ஆட்டுப்பால் என்பது பரவலாகக் கிடைக்காது. அவருக்காக அதைக் கொண்டு வரவேண்டும். மண்குவளையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவதால் அதையும் தொடர்ந்து தயாரிக்க வேண்டும். எனவே, காந்தியின் எளிமை என்பது அதிக செலவு பிடிக்கக்கூடியது என்ற விமர்சனம் அவர் காலத்திலேயே இருந்தது. இன்றைய தலைவர்கள், காந்தி அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டியதில்லை. காந்தியைப் போல வெளிப்படையாக இருந்தாலே போதுமானது.