பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்தானே?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மட்டும் மக்களின் விருப்பப்படியா நடக்கிறது?

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

Advertisment

சீனாவுக்கு வாலும், அமெரிக்கா வுக்குத் தலையும் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதே சிறுகுட்டித் தீவான இலங்கை?

திரிகோணமலை என்பது கேரட். அங்கே கடற்படைத் தளம் அமைக்க வல்லரசுக் குதிரைகள் ஆசைப்பட்டன. அந்தக் குதிரைகளுக்கு முன்பாக கேரட் டை கட்டித் தொங்கவிட்டு, ஆசையை வளர்த்து ஏமாற்றும் போக்கை 40 ஆண்டு களாகக் கடைப்பிடித்து வருகிறது இலங்கை. இப்போது மேலும் பல பொருளாதாரக் கணக்குகளைப் போடும் சீனாவுக்கு வாலும், அமெரிக்காவுக்குத் தலையும் காட்டுகின்ற இலங்கை, இந்தியாவுக்கு கையையும், பாகிஸ்தானுக்கு காலையும், பிற நாடுகளுக்கு மற்ற அங்கங்களையும் காட்டி காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறது.

ma

Advertisment

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

வாரணாசியில் போட்டியிடாதது பிரியங்காவின் சொந்த முடிவு என்ற காங்கிரசின் அறிவிப்பு?

தற்போதைய தேர்தல் களம் எனும் புற்றிலிருந்து எந்தப் பாம்பை பிடிக்க வேண்டும், எந்தப் பாம்பைப் பிடிப்பது போல வேடிக்கை காட்ட வேண்டும், எது விஷமுள்ள பாம்பு என மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டும் என்பதைக் கணக்கிட்டு செயல்படுகிறார் போலும்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

மத்திய அரசு அங்கீகரித்த 7 மதங்களில் 5 மதங்களைச் சேர்ந்தவர் களை நிறுத்தியுள்ள பா.ஜ.க.வை மதச்சார்பற்ற கட்சியாக ஏற்றுக் கொள்ளலாமா?

எதிர்க்கட்சிகளுக்கு மதரீதியான நெருக்கடியை உருவாக்கும் கடுமை யான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பா.ஜ.க., தனது கட்சி சார்பில் பல மதத்தினரை வேட்பாளராக்கி யிருக்கிறேன் எனக் காட்டுவது அதன் உண்மை முகமல்ல, முகமூடி. வாஜ்பாய் காலத்திலேயே அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கி இத்தகைய முக மூடியை அணிந்துகொள்ள பழகிக் கொண்டுவிட்டது அந்தக் கட்சி.

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம், ராஜ்சமதியாலா கிராமத் தில் வாக்களிக்காதவர்களுக்கு ரூ.51 அபராதம் என அறிவிக்கப்பட்டு, அதன் காரணமாக 100% வாக்குப்பதிவு நடந்துள்ளதே, இதே அளவுகோலை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் என்ன?

ஒரு கிராமத்தின் கட்டுப்பாடு என்பது எல்லா கிராமத்திற்கும் அப்படியே பொருந்திவிடாது. அதுமட் டுமின்றி, தேர்தல் முறையை ஏற்க மறுக்கும் உரிமையையும் வாக்காளர் களுக்கு சேர்த்தே வழங்கியிருக்கிறது இந்திய ஜனநாயகம். 100% வாக்குரிமை யைவிட, நேர்மையான சுதந்திரமான வாக்குப்பதிவே இன்றைய தேவை.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

காங்கிரஸ் அறிவித்துள்ள "நியாய் திட்டம்' இந்திய பொருளாதார இன்ஜினுக்கு டீசல் என்கிறாரே ராகுல் காந்தி?

நியாய் திட்டம் நியாயமாக செயல்படுத்தப்படும் வாய்ப்பு உருவானால், டீசலா குரூடாயிலா என்பது தெரியவரும்.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டால் கோபப்படுகிறவர்கள் இருக்கிறார்களே, ஏன்?

திராவிட அரசியல் கட்சிகளின் செயல்பாட்டுக் குறைகளை அடிப்படையாக வைத்து கோபப்படுவதுபோல காட்டிக்கொண்டாலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சம உரிமை -சமூக நீதி என்கிற திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம்தான் பலரது கோபம் -பொறாமை -வயிற்றெரிச்சலுக்கான காரணம்.

____________

காந்தி தேசம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

படேல் அளவுக்கு காந்திஜிக்கும் உயர்ந்த சிலையை, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறுவுமா?

காந்தியின் மாநிலம் என இன்றளவும் சட்ட ரீதியாக மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தை, படேலின் மாநிலமாக இந்தியாவுக்குக் காட்ட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின்படி, உயரமான சிலையை நிறுவியது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. ஆனாலும், வெளிப்படையாக காந்தியை குறி வைக்காமல், நேருவுக்கு எதிராக படேலை முன்னிறுத்தும் அரசியல் வியூகமே இதில் அதிகமாகத் தெரிந்தது. நேருவுக்குப் பதில், முதல் பிரதமராக படேல் பொறுப்பேற் றிருந்தால் இந்தியாவின் போக்கே மாறியிருக்கும் என்கிற வலதுசாரி சிந்தனைக்கு சிலை எழுப்பியிருக்கிறது பா.ஜ.க. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், காந்திக்குப் பதில் நேருவுக்கு சிலை வைப்பதுதான், பா.ஜ.க.வுக்குத் தரக்கூடிய அரசியல் ரீதியான பதிலடியாக இருக்க முடியும். ஆனால், படேலுக்கு 3000 கோடி ரூபாய் சிலை என்கிறபோது, அதனை மிஞ்சுகிற அளவுக்கு நேருவுக்கு சிலை என்றால் 5000 கோடி ரூபாயைத் தாண்டும். இன்னொரு வெட்டிச் செலவை நாடு தாங்குமா என்ற கேள்வியும் உள்ளது.

படேலுக்குப் போட்டியாக நேருவுக்கோ காந்திக்கோ சிலை வைக்க வேண்டியதில்லை. காந்திக்குப் புகழ் சேர்க்க வேண்டுமென்றால், பா.ஜ.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள காந்தியின் சிந்தனை களுக்கு எதிரான மதவெறிப் போக்கு, மாற்றுக் கருத்துகளை மதிக் காத அராஜகத்தனம், அனைத்து மக்களையும் சமமாக நினைக்காத அதிகார வெறி, உயிரைப் பறிப்பதற்கும் அஞ்சாத கொலைகாரக் கும்பல் இவற்றை முற்றிலுமாக அகற்றுவதே காங்கிரசின் வேலைத் திட்டமாக இருக்க வேண்டும். காங்கிரசுக்குள்ளும் ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வா சிந்தனை கொண்டவர்கள் வடமாநிலங்களில் அதிகளவில் இருக்கிறார்கள். எனவே சிந்தனை அளவிலும், செயல்பாட்டு வடிவிலும் மாற்றம் கொண்டு வருவதே ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காங்கிரஸ் செய்யவேண்டிய முதல் பணி.